மதுமிதா இயக்கத்தில் Capital Film Works SP சரண் தயாரிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘மூணே மூணு வார்த்தை’. டெல்லியை சேர்ந்த அதிதி செங்கப்பா தனது நடிப்புத் திறமையால் இந்தப் படத்தில் அனைவரையும் கவர்ந்து உள்ளார்.
“ இப்படத்தில் நடித்தது எனக்கு ஒரு புது வித அனுபவம்.தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே சமயத்தில் நான் முதன்முறையாக நடிக்கிறேன். எனது கதாப்பாத்திரத்தின் பெயர் அஞ்சலி, ஒரு தைரியமான , தெளிவான பெண். இவரை ஹீரோ அர்ஜுன் எப்படி குழப்புகிறான் என்று வெகு அழகாக கூறியிருக்கிறார் இயக்குநர் மதுமிதா” என்றார் அதிதி.
“இரு மொழிப் படம் என்பதால் நடிப்பதற்கு பெரும் சவாலாய் அமைந்தது. இப்படம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. பெரும்பாலான இடங்களில் தமிழ் வசனத்திற்கு பதிலாக தெலுங்கு வசனங்கள் பேசி சொதப்பினேன். இதுவாவது பரவாயில்லை, தமிழில் ஒரு கதாநாயகன் தெலுங்கில் இன்னொருவர் . ஒரு சில நிமிடங்களில் இருவருடன் ஒரே முக பாவத்துடன் காதல் செய்வது என்பது மிகவும் கடினமாக இருந்தது. என் தோழிகள் கூட இதை வைத்து என்னை ரொம்ப ஓட்டுவாங்க. காதல் காட்சிகளில் ஒருவருடனும் சண்டை போடும் காட்சிகளில் இன்னொருவரிடமும் ஈடுபாட்டுடன் நடித்தேன். நடிப்பு தான், தப்பா நினைச்சுக்காதீங்க ”என்று கூறிய அதிதி,வெங்கியை பற்றிப் பேசும் போது குலுங்க குலுங்க சிரிக்கிறார். வெங்கி அபாரமான திறமையானவர். உலகத் தரத்தில் உள்ள நகைசுவை நடிகர் என சிரிப்புடன் கூறினார்.
உங்களுக்கு தமிழில் தெரிந்த மூணே மூணு வார்த்தை என்ன என்று கேட்ட பொழுது ” எனக்கு தமிழ் பேச வராது இருப்பினும். “எனக்கு ரொம்ப பசிக்குது” என்ற மூணு வார்த்தை எனக்கு மிகவும் அதிகம் பயன்படுத்துவதுண்டு. மிக நேர்த்தியான படங்களை தயாரித்து வரும் Capital Film Works நிறுவனத்திற்கு பணிபுரிந்தது மிகவும் பெருமையாகவுள்ளது. இயக்குநர் மதுமிதா, மற்றும் தயாரிப்பாளர் SP சரண் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.” என்று கூறினார் அதிதி செங்கப்பா.