என்னை அமிதாப் பச்சன் சந்தேகப்பட்டார்என்று ஒரு விழாவில் ! – இயக்குநர் பாக்யராஜ் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு :
பிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றிய தொகுப்பு நூலான ‘சகலகலா வல்லபன்’ வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் நூலை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். இயக்குநர் கே. பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.
இந்நூலை பத்திரிகையாளர் அருள்செல்வன் தொகுத்துள்ளார்.
விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது,
“ஒருவர் பற்றி யார் சொல்கிறார்கள் என்பதை வைத்து அவரது கேரக்டர் தெரியும்.எம்.ஜி.வல்லபனின் நண்பர்களைப் பார்த்தே அவரை யார் என்று கூற முடியும்.
வல்லபனின் கேரக்டர் பிடித்துதான் இங்கே இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள்.
இங்குள்ள சிவகுமார் சார் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், அவரிடம் நடிப்புத்திறமை, ஓவியத்திறமை, சொற்பொழிவாற்றும் திறமை போல எல்லாத் திறமைகளும் இருக்கின்றன.
இதைவிட பெரிய விஷயம். ‘போதும் ‘ என்கிற மனசு அவருக்கு அது இருக்கிறது.அது பெரிய விஷயம். அது எல்லாருக்கும் வராது .
சம்பாதிக்கிற நேரத்தில் கூட ,வீட்டில் வந்து நடிக்க கூப்பிட்டால் கூட ‘போதும் ‘ என்று இருந்தவர். வீட்டிலும் சும்மா இருக்காமல் அடுத்து என்ன செய்யலாம் என்ற போது கம்பராமாயணம், மகாபாரதம் என்று எவ்வளவோ பேசுகிறார். இது போன்ற மனசு யாருக்கும் வருவதில்லை. நாட்டில் எவ்வளவோ கோடிகள்இங்கே வருகின்றன. எவ்வளவோ கோடிகள் அங்கே போகின்றன. என்றாலும் இன்னும் என்ன வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
போதும் என்கிற மனசு எல்லாருக்கும் வராது .
வல்லபன் மலையாளியாகப் பிறந்து தமிழில் இவ்வளவு அடுக்கு மொழியில் எழுதவது சிரமம். அவர் எழுதிய தமிழ் இலக்கிய வரிகளைக் கண்டு நான் வியந்ததுண்டு.
நான் ஒரு மலையாளப் படத்தில் நடித்து விட்டு நான் பட்டபாடு இருக்கிறதே . அதே போல் ‘ஆக்ரிரஸ்தா’ வில் நான் அமைத்த ஆங்கில வசனம் பேசிய போது அமிதாப் என்னை முழுதாக நம்பவில்லை . ஆனால் அப்படியே நடித்து விட்டார்கள். படம் போட்டுப் பார்த்தபோது அவரது வேலையாட்கள் அதைப் பார்த்து புரிந்து கைதட்டியவுடன்தான் அவருக்கும் புரிந்தது திருப்தி வந்தது , பர்ஸ்ட் பெஞ்ச்காரர்களே புரிந்து விட்டார்கள் என்று. மனைவி ஜெயா வேறு பாராட்டினார்.பிறகுதான் நம்பிக்கை வந்தது என்றார் அமிதாப்..ஆனால் முதலில் என் மேல் அவருக்கு சந்தேகம் இருந்தது .அது இப்போது நினைவுக்கு வருகிறது .
வல்லபனின் எழுத்தாற்றல் வியக்கவைக்கிறது .
அவர் என் ‘பாக்யா’ வில் வேலைக்கு வருவாரா என்று கூட நினைத்தேன். ஆனால் அவர்தை எதையும் நினைக்காமல் வந்து வேலைபார்த்தார். அவர் இங்கு வந்ததும் ‘பாக்யா’வை அவரிடம் விட்டுவிட்டு நான் படப்பிடிப்புக்கு கவலை யில்லாமல் போய் விடுவேன் அவர் பத்திரிகையாளராக இருந்த போது கூட அவரை அங்கங்கே பார்ப்பேன். .பாக்யா வந்த பிறகுபேச வாய்ப்பே இருக்காது .
ஓல்டு இஸ் கோல்டு.பழைய விஷயங்களுக்கு என்றும் மதிப்பு உண்டு. நண்பர்களிடம் பழைய விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கும் போதுகூட அதில் புதிய புதிய தகவல்கள் கிடைக்கும்..வல்லபன் சிவாஜி, எம்.ஜிஆர் முதல் தனுஷ் காலம் வரை இருந்திருக்கிறார் ; பலருடன் பழகியிருக்கிறார்.அவரைப் பற்றி அருள் செல்வன் பலரது அனுபவங்களைத் தொகுத்த மாதிரி வல்லபனின் அனுபவங்களையும் தொகுக்க வேண்டும். பழையது என்பது சாதாரணமானதல்ல. அவரது அனுபவங்கள் எழுதப்படாமல் தவறி விட்டது .அவர்பற்றி இன்னும் எழுத வேண்டும்.” இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.
விழாவில் சித்ரா லெட்சுமணன் பேசும்போது,
“எனக்கு வல்லபனை பல ஆண்டுகளாகத் தெரியும். நட்பாகத் தொடங்கி சகோதர உறவாக பரிணமித்ததுதான் எங்கள் உறவு .
வல்லபன் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் ஆற்றல் உடையவர்.
நான் பி.ஆர்.ஓவாகப் பணியாற்றிய போது ஒரு அழைப்பிதழ் 6 வரி எழுதச் சொன்னால் கூட அதில் 4 வார்த்தைகள் புதியதாக இருக்கும்.
அவர் குடும்பத்தோடு இருந்த நாட்களைவிட என்னோடு இருந்த நாட்கள்தான் அதிகம். அந்தளவுக்கு ஆழமான நட்பு எங்களுடையது.
இந்த நூல் படித்ததன் மூலம் வல்லபனுடன் இவ்வளவுபழகிய எனக்கே தெரியாத புதிய பரிமாணம் கிடைத்தது.
இங்கே இவ்வளவுபேர் இணைந்து இருப்பதற்கு இந்த புத்தகமே சாட்சியாக இருக்கிறது. என்னை விழாவுக்கு இவர்கள் அழைக்கும் முன்பே சிவகுமார் கூப்பிட்டு விட்டார். அதுதான் அப்போதுள்ள நட்பு.
அப்போதெல்லாம் எப்போது வேண்டுமானாலும் எம்.ஜி.ஆர் சிவாஜியைச் சந்திக்கலாம்.
பத்திரிகையாளர்களுக்கும் நட்சத்திரங்களுககும் நல்ல நட்பு இருந்தது. குடும்பத்தினர் போலப் பழகுவோம்..
எண்பதுகள் இன்பமான காலம். இப்போது அப்படி இருக்கிறதா என்பது சந்தேகம்தான். ”என்றார்.
‘குங்குமம்’ கே.என்.சிவராமன் பேசும் போது. ,
“நான் இன்று இங்கே நிற்க எம்.ஜி.வல்லபன்தான் காரணம்.
அவர் எப்போதும் முதல் ஆளாக காலை 8 மணிக்கே அலுவலகம் வந்து விடுவார். மற்றவர் வருகை பற்றி கவலைப்பட மாட்டார் . அதே போல மாலை 6 மணிக்கு மேல் வெளியே சென்று விடுவார் பத்திரிகையாளனுக்கு வெளியேதான் வேலை என்பார்.
அவர் ஒரு நல்ல தோட்டக்காரர். அவர் நேரம் கிடைக்குப் போதெல்லாம் விதைகளைத்தூவி முளைக்க வைத்து நீர்ஊற்றி வளர்க்கும் நல்ல தோட்டக்காரர்.
செடி வளர்ந்து மரமாகி தன்னை நினைக்குமா இல்லையா என்று நினைக்க மாட்டார். அவர் ஒரு நல்ல தோட்டக்காரர். “என்றார்
நடிகர் ராஜேஷ் பேசும் போது,
“அவருக்கும் எனக்கும் அறிவுபூர்வமான கருத்துகளில் மோதல் வந்து நட்பானோம். நான்ஆர்வமாகப் படிப்பவன் என்றதும் பிடித்து விட்டது. என்னை அவர் ஸ்டார் என்றார். நான் இன்னமும் நடிகனாகவே இல்லையே என்றேன். அவர் மிடுக்காக உடையணிந்து ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி போல இருப்பார். பொதுவாக எழுத்தாளர் சுஜாதா, சத்யராஜ் போன்று உயரமாக வளர்ந்தவர்கள் குனிந்துதான் மற்றவர்களிடம் பேசுவார்கள் .ஆனால் வல்லபன் குனிய மாட்டார். நிமிர்ந்துதான் பேசுவார். அபரிமிதமான அறிவு கொண்டவர். அவருக்கு நல்ல நகைச்சுவையுணர்வும் அதிகம்.
இவ்வளவு திறமை இருந்தும் அவர் உயரே போக முடியாமல் போனது புதிரான பிரபஞ்ச ரகசியம். அவரைப் பாராட்ட இங்கே சிவகுமார் வந்திருப்பது அவரது பெரியமனம் .இப்படி மனம் விட்டுப் பாராட்டுவது உயர்ந்த குணம் பலரிடம் இல்லாதது “என்றார்.
பத்திரிகையாளரும் இயக்குநருமான த.செ.ஞானவேல் பேசும் போது,
“நான் எம்.ஜி.வல்லபன் அவர்களைப் பார்த்தது கிடையது. இந் நூலைப் படித்தே அவரைப்பற்றி முழுதும் அறிந்து கொண்டேன். ‘சகலகலா வல்லபன்’ நூல் எனக்கு ஒரு முழுமையான பத்திரிகையாளரை அறிமுகப் படுத்தி இருக்கிறது . வாழ்தலுக்கும் பிழைத்தலுக்கும் வித்தியாசம் உண்டு.
எம்.ஜி.வல்லபன் வாழ்வாங்கு வாழ்ந்தவர்.
பத்திரிகை என்பது எப்போதும் எதிர்க்கட்சி மனநிலை உடையது. தவறுகளைச் சுட்டிக் காட்டுவதுதான் பத்திரிகை தர்மம். மக்களுக்கான சமூகத்திற்கான மேம்பாட்டு விஷயங்களுக்காகத் தன் குரலை ஓங்கி ஒலிக்கும் பணியை பத்திரிகை எந்த நேரத்திலும் நிறுத்தக் கூடாது.
இன்று பத்திரிகைகளை இருமுனை கத்திகுத்திக் கிழிக்கிறது . ஒருபக்கம். விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் முற்றாக சமூகத்தில் ஒழிந்து விட்டது.
இன்னொரு புறம் விமர்சனம் எழுத எந்தத் தகுதியும் இருக்க வேண்டாம் என்கிற நிலை.
எம்.ஜி.வல்லபன் காலம் பொன்னான காலம் .அந்த எண்பதுகள் பத்திரிகை சுதந்திரத்தின் பொற்காலமாக இருந்திருக்கும் .
எழுத்தில் நேர்த்தியாக இருப்பதுடன் வாசகனை மேம்படுத்தவும் வேண்டும் என்று அவர் இருந்திருக்கிறார்.
இந்த நூல் இளம் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் பரிந்துரைக்கப்பட வேண்டிய நூல் என்பேன். வெறும் பேட்டி எடுப்பதும் புகழ்வதும் திட்டுவதும் மட்டுமே பத்திரிகையாளனின் வேலையல்ல. நல்ல விஷயத்தை அறிமுகப் படுத்துவதும் சமூகத்துக்குக் தேவையான கடமை.
அப்படிக்கடமை யாற்றிய வல்லபன் போன்றோரின் நினைவுகள் போற்றப்பட வேண்டும்.” என்றார்
இயக்குநர் பேரரசு பேசும்போது,
. “எம்.ஜி.வல்லபன் அவர்களை நான் பார்த்தது இல்லை. பழகியதில்லை இருந்தாலும் இந்த’சகலகலா வல்லபன்’ நூல்
படித்ததும் அவருடன் பழகியதைப் போல உணர்ந்தேன். படிக்கப்படிக்க நெருங்கிப் பழகிய உணர்வு இருந்தது.
அவருக்கு திறமைக்கு ஏற்ற ,உழைப்புக்கு ஏற்ற வெற்றி அமையவில்லை.
இன்று ஊரை ஏமாற்றுகிறவர்கள்தான் நன்றாக இருக்கிறார்கள். வல்லபன் பணத்தைச் சம்பாதிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் மக்களைச் சம்பாதித்திருக்கிறார். இந்த தலைமுறை பத்திரிகையாளர்கள் இந்த’சகலகலா வல்லபன்’ நூலைப் படித்தால் அவர்களுக்கு புது வேகம் வரும்.” என்றார்
கவிஞர் அறிவுமதி பேசும் போது,
“இந்த விழா ஒரு குடும்ப உணர்வை ஊட்டுகிறது. அவர் என்னை தாய்போல அரவணைத்தவர். என்னை அழைத்து பிலிமாலயாவில் எழுத வைத்தார். என் ஆண்தாய் போன்ற பாரதிராஜா அழைத்த போது அவரிடம் போகப் பயந்து பாக்யராஜிடம் உதவியாளனாகச் சேர்ந்தேன். ‘பாமா ருக்மணி’ படத்தில் பணிபுரிந்த போது கிடைத்த இடைவெளியில் வல்லபன் என்னை, தான் இயக்கும் ‘தைப்பொங்கல்’ படத்துக்கு அழைத்தார். என்னை முதலில் உதவி இயக்குநர் ஆக்கியது அவர்தான் .’தைப்பொங்கல்’ படப்பிடிப்புக்கு மாண்டியா போனபோது அங்கே படக்குழுவினருடன் இருந்த நாட்கள் பொன்னான காலங்கள்.
அவர் சொல்லச்சொல்ல நான் எழுதிய நாட்கள் மறக்க முடியாதவை. மிகச்சிறந்த ஆளுமையாக அவர் இருந்தார்.” என்றார்.
கவிஞர் யுகபாரதி பேசும்போது ,
“நானும் பாடல் எழுதுவதை வெளியிலிருந்த போது கிண்டலடித்து இருக்கிறேன். உள்ளே நுழைந்து எழுதுகிற போதுதான் அதன் சிரமம் புரிகிறது.
ஒரு பத்திரிகையாளராகவும் பாடலாசிரியராகவும் இருப்பது மிகவும் சிரமம் .அவர் எழுதிய இலக்கிய நயமிக்க வரிகளைப் பார்க்கும் போது அவரது வாசிப்பு இலக்கிய தேர்ச்சியையும் அறிய முடிகிறது. அவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்திருக்கலாம் என்றார்கள். அவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்து இருந்தால் இன்று இந்நேரம் நாம் இப்படி ஒரு விழா எடுத்திருக்க மாட்டோம்.” என்றார்.
இயக்குநர் ஈ. ராம்தாஸ் பேசும்போது,
“என்னை முதலில் சார் என்று அழைத்ததும் எனக்கு எழுதவரும் என்று ஊக்கப் படுத்தியதும் அவர்தான். என்னாலும் முடியும் என்று வசனம் எழுதத் தூண்டியதும் அவர்தான்.”” என்றார்
முன்னதாக நூலின் தொகுப்பாசிரியர் அருள்செல்வன் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் அர்ச்சனா பிரகாஷ் நன்றி கூறினார். விழாவை ஏ.ராஜசேகர் தொகுத்து வழங்கினார்.