என் வெற்றிக்கு பின்னால் இருப்பவை எல்லாம் நான் சந்தித்த அவமானங்கள்தான் என்று விஜய் ‘புலி’ படவிழாவில் மனம் திறந்து பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு..
விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப் நடித்துள்ள படம் ‘புலி’ ,சிம்புதேவன் இயக்கியுள்ளார். எஸ்.கே.டி.ஸ்டுடியோஸ் சார்பில் சிபு தமீன்ஸ் ,பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மாமல்லபுரம் கன்ஃப்ளூயன்ஸ் ரிசார்ட்டில் நடைபெற்றது.
விழாவில் விஜய் பேசும் போது ” இந்தக் கதையை இயக்குநர் சிம்புதேவன் சொன்னதும் ரொம்பவும் பிடித்திருந்தது. எனக்கு சரித்திரக் கதையிலும் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது.. அதில் வணிகரீதியிலான அனைத்து அம்சங்களும் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதன்படியே இக்கதை இருந்தது.
இதில் என்னுடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா என 2 பெண்புலிகள் நடித்துள்ளனர் . சிறியதாக இருந்தாலும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார் நந்திதா .
இந்திய ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்து இருக்கும் சிவகாசி மத்தாப்பூவான ஸ்ரீதேவி துணிச்சல் மிக்க முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். சின்னதம்பியாக வாழ்ந்து மற்ற கதாநாயகர்களுடன் அண்ணன் தம்பியாகப் பழகும் பிரபுசார் நடித்துள்ளார். யாரும் கதாநாயகனாகி விட்டபிறகு வில்லனாக நடிக்க மாட்டார்கள். ஆனால் சுதீப் பெரியமனசுடன் கதாநாயகனான பிறகும் இதில் வில்லனாக நடித்திருக்கிறார். மற்றும் தம்பிராமையா, இமான் அண்ணாச்சி, ரோபோசங்கர் போன்றவர்களும் நடித்து இருக்கிறார்கள்.
இது ஒரு புதுமுயற்சி. எல்லா படங்களுக்கும் இது ஒரு புதுமுயற்சி என்றுதான் கூறுவார்கள். உண்மையிலேயே இது ஒரு புதுமுயற்சி.
கதாநாயகனாக சதுரங்க வேட்டையாடிய நட்டி இதில் ஒளிப்பதிவாளராக புலிவேட்டை யாடியிருக்கிறார்.
தாரை தப்பட்டை அடித்துத்தான் புலியை ஓடவைப்பார்கள். இதில் இசையில் புலியை ஆடவைத்துள்ளார் தேவிஸ்ரீ பிரசாத்.
டாப் டென் என்று கூறினாலே அதில் ஆண்டு தோறும் வரிசையில் வருபவர்களின் இடம்மாறும் .ஆனால் வந்தநாள் முதல் இந்தநாள் வரை வரிசையில் நம்பர் ஒன்னாக இருப்பவர் வைரமுத்துசார். நம்பர் ஒன்னாகத் தன்இடத்தை தக்க வைத்துள்ளவர். அவர் பாடல்கள் எழுதியிருக்கிறார். கிராபிக்ஸ் கமலக் கண்ணன், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் இந்த இருவரும் கூட இதில் கதாநாயகர்கள்தான்.
பொதுவாக தேர்வு எழுதுகிறவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள். மார்க் போடுபவர்கள் குறைவாக இருப்பார்கள். சினிமாவில் மட்டும்தான் தேர்வு எழுதுகிறவர்கள் குறைவாக இருப்பார்கள், மார்க் போடுபவர்கள் அதிகமாகஇருப்பார்கள்.
படம்பார்க்க வரும் ரசிகர்கள்தான் மார்க் போடுபவர்கள்.
தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு கடன் வாங்கி படமெடுக்கிறார்கள். சிலர் எந்த கஷ்டமும் படாமல் போனில் எடுத்து இண்டர் நெட்டில் திருட்டுத்தனமாக பரப்புகிறார்கள். குழப்புகிறார்கள்.
அது ஆரோக்கியமாக சுகப்பிரசவமாக பிறக்க வேண்டிய குழந்தையை சிசேரியன் செய்து சாகடித்து விடுவது போன்றது. எனக்கு உண்மையாக ஒருத்தரை வெறுக்கத் தெரியும். ஆனால் பொய்யாக ஒருத்தரை நேசிக்கத் தெரியாது.
பின்னாடி பேசுபவர்களைப் பற்றி நான் கவலைப் படுவதில்லை. அப்படி பேசும்போது அவர்களைவிட நாம் சில அடி முன்னால் இருக்கிறோம் என்றுதான் நினைப்பேன்.
என் ஆரம்பகால விமர்சனங்களை எனக்கு தடையாக எடுத்துக் கொள்ளவில்லை எவ்வளவோ விமர்சனங்கள் ,அவமானங்கள், தடைகள், கேலிகள். இருந்தன.நான் அவமானங்களால் வளர்ந்தவன் அதை யெல்லாம் பெரிது படுத்தியிருந்தால் இன்று இந்த மேடையில் உங்கள்முன் நின்றிருக்க முடியாது.
என் வெற்றிக்கு பின் இருப்பவை எல்லாம் நான் சந்தித்த அவமானங்கள்தான்.அதை எல்லாம் சக்தி தருகிற பெட்ரோலாக எடுத்துக் கொண்டேன். எரிக்கிற நெருப்பாக எடுத்துக் கொள்ளவில்லை. பில் கேட்ஸை குறை சொன்ன போதெல்லாம் அவர் திருத்திக் கொண்டு வளர்ந்தார். ஒரு கட்டத்தில் அவர் முதலாளியானார், குறை சொன்னவர்கள் எல்லாம் அவரிடம் வேலை பார்த்தார்கள்.
இளைஞர்களின் நாட்டுப்பற்றைப் பற்றி இன்று குறை சொல்கிறார்கள்.அதை என்னால் முழுமையாக ஏற்க முடியாது. இளைஞர்கள் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம் போன்றவற்றை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதை சீரியஸாக எடுத்துக் கொள்கிறார்கள். சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதை விளையாட்டாக க்கூட எடுத்துக் கொள்வதில்லை இதுதான் பிரச்சினை.
எம்.ஜி.ஆர் ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் தனிமனிதன் திருந்தினால் நாடே திருந்தும் என்று ஆறு ஜெயில் கைதிகளை திருத்தப் பார்ப்பார் சிலர் கேலி பேசுவார்கள். அப்போது எம்.ஜி.ஆர் தனிமனிதன் திருந்தினால் நாடே திருந்தும் என்று சொல்வார்.
மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது பெரிய விஷயம். எனக்கு அதுவே தொழிலாக இருப்பது என் பெரிய பெருமை. பிறரை வளர வைத்து அழகு பார்ப்பது பெரிய சந்தோஷம் ” இவ்வாறு விஜய் பேசினார்.