எம்எஸ்விக்கு கமல் இரங்கல் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;
”திரு எம்எஸ்வி பிரிக்க முடியாத வகையில் தமிழ் திரையுலக வரலாற்றோடு ஒன்றிவிட்டவர். தமிழ் மற்றும் தென்னிந்திய கலாசாரச் சித்தரிப்பின் அங்கம் அவர். எம்எஸ்வி பலரின் வாழ்வின் பின்னணி இசையாகி விட்டவர். அவரது இசை தங்கள் உள்ளங்களில் ஒலிக்க, கடந்த காலத்துக்குரிய ஏக்கத்துடன் அவர்கள் தம் வாழ்வையே நினைவுகூர்கின்றனர். அவரது தலைமுறையையும் காலத்தையும் கடந்த ரசிகர்கள் அவருக்குண்டு. இதற்கு என் மகள் ஸ்ருதி நல்ல ஒரு உதாரணம். அமெரிக்காவில் இசை பயின்று கொண்டிருந்த அவர், திரும்பிவந்தவுடன் திரு எம்எஸ்வியைச் சந்திக்க விரும்பினார். அவர் எம்.எஸ். வி.யின் ரசிகையாகியிருந்தார்.
எம். எஸ். வி அவர்களின் தோள்களில் புகழ் இலகுவாய் அமர்ந்திருந்தது. தன் புகழையும் பெருமையையும் அலட்சியப்படுத்தி பிறரது வயதையும் பொருட்படுத்தாமல் அவர்களை அவர் அடிக்கடி புகழ்வதுண்டு. அவரது உடலை மட்டுமே நாம் இழந்திருக்கிறோம். அவரது இசை எப்போதும் நம்மோடிருக்கும். தன் இசையால் என் வாழ்வுக்குச் செறிவூட்டிய அவருக்கு என்றும் என் நன்றிகள் உண்டு..”
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.