எஸ்.ஏ.வி. பிக்சர்ஸ் சார்பில் த.சக்திவேல் தயாரிப்பில் திம்மம் பள்ளி சந்திரா இயக்கும் படம் ‘கைபேசி காதல்’
இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது.
இப்படம் கன்னடம், தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கிறது. சென்னையில் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்பதைபடத்தின் காட்சிகளின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
விழாவில் பேசிய பேரரசு, படக்குழுவினரை வாழ்த்திவிட்டு தான் சொந்த ஊரிலிருந்து 20 கீ.மீ. சைக்கிளில் சென்று முரட்டுக்காளை படப்பிடிப்பு பார்த்த அனுபவத்தைக் கூறினார். எஸ்.பி.முத்துராமனின் எளிமையைப் பற்றிக் குறிப்பிட்டவர். “திறமை உள்ளவர்களுக்கு கர்வம். தலைக்கனம் இருக்கலாம். அது கர்ப்பிணிப்பெண்ணின் வயிறைப் போல மரியாதை தரக்கூடியது. திறமையில்லாதவர்களின் தலைக்கனம் என்பது தொப்பை பெண்ணின் வயிறு போன்றது. தொப்பையை ரசிக்க முடியுமா?
திறமையும் இருந்து கர்வமும் இல்லாதவர்கள் இலியானாவின் வயிறு ,இடுப்பு போன்றவர்கள். இலியானாவின் இடுப்பு மெலிதாக இருக்கும் ரசிக்கத் தக்கது. அப்படி ரசிக்கத் தக்க ஒருவர்தான் எஸ்.பி.முத்துராமன் அவர்கள். என்றும் எளிமைக்குச் சொந்தக்காரர். நான் ஏவிஎம்மில் படப்பிடிப்பில் இருந்த போது அங்கு வந்து என்னைப் பாராட்டினார்.பாராட்டுபவர்களைச் தேடிச் சென்று பாராட்டும் அந்த உயர்ந்த பண்பை அவரிடம் கற்றுக் கொண்டேன்.’ ‘என்றார்.
படக்குழுவினர் கன்னடக்காரர்கள் என்பதால் திக்கித் திணறித்தான் தமிழ் பேசினர். விழாவில் பேசிய நம்மவர்கள் பலரும் ‘மொழியால் கலைஞர்களை பிரிக்க முடியாது. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு, யாரையும் விரோதம் பாராட்டாது. வந்த வேறுமொழியையும் தமிழ் வாழவைக்கும். இதை அங்குள்ள கன்னட சகோதர கலைஞர்களிடம் கூறுங்கள். தவித்த வாய்க்கு தண்ணீர்தானே கேட்கிறோம். குறுக்கே அணை கட்டுகிறீர்களே இதையும் போய்க்கேளுங்கள்.’ என்றெல்லாம் பேசினார்கள்.
விழாவில் அகில இந்திய நுகர்வோர் உரிமை இயக்கத் தலைவர் சி.சுந்தரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம. அருணகிரி, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், பெப்ஸியின் முன்னாள் தலைவரும் இயக்குநருமான வி.சி.குகநாதன், திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்,தயாரிப்பாளர் கில்டு செயலாளர் ஜாக்குவார் தங்கம்,எஸ்.எஸ். கலைக்கல்லூரியின் தலைவர் சந்திரசேகர்,படத்தின் இயக்குநர் திம்மம்பள்ளி சந்திரா, நாயகன் கிரண், தர்ஷன் ,நாயகி அர்பிதா, இசையமைப்பாளர் விஜய்கிருஷ்ணா ,பி.ஆர்.ஓ. சங்கத் தலைவர் விஜயமுரளி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள். முன்னதாக தயாரிப்பாளர் த.சக்திவேல் அனைவரையும் வரவேற்றார்.
‘கைபேசி காதல்’படத்தின் கதை என்ன தெரியுமா?
பலரது காதலுக்கு கைபேசி உதவுகிறது. அதனால் கைபேசிமீது காதல் மோகம் இன்று அதிகரித்து வருகிறது.
ஆனால் கைபேசி என்கிற ஜடப் பொருள் மீதே காதல் கொள்கிறான் இளைஞன் ஒரு வன் என்றால் எப்படி இருக்கும்?.
அப்படி ஒரு வித்தியாசமான கதை கொண்ட படம்தான்’கைபேசி காதல்’.
அவனது வாழ்க்கையில் கைபேசி முக்கியபங்கு வகிக்கிறது. அவனது துக்கம், மகிழ்ச்சி, உயர்வு, தாழ்வு அனைத்தையும் கைபேசிதான் திர்மானிக்கிறது.
அவனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் கைபேசி கைவீசியபடி கடக்கிறது. அதனால் அவன் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் ஏமாற்றங்கள் விபரீதமானவை .முடிவு என்ன என்பதே படம்.
இதில் கிரண், அர்பிதா, தர்ஷன், மாஸ்டர் விக்னேஷ், டாக்டர் சூரி ஆகியோருடன் நடிகர் கிஷோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு ராஜன்திலக், இசை, விஜய்கிருஷ்ணா, கதை திரைக்கதை வசனம் இயக்கம் சந்த்ரா.
படப்பிடிப்பு முடிந்து ‘கைபேசி காதல்’திரையியீட்டுக்குத் தயாராக இருக்கிறது.