ஏன்  இந்தப் பிழைப்பு?  என்று அழுதிருக்கிறேன்: கவிஞர் யுகபாரதி

தஞ்சை மண் தந்த படைப்பாளி யுகபாரதி.

கவிஞர் ,பாடலாசிரியர்,    கட்டுரையாளர்,   பத்திரிகையாளர்,  பதிப்பாளர் எனப் பன்முகம்  கொண்டவர் இவர்.
மரபுக் கவிதை ,புதுக்கவிதை , நவீன கவிதை என்று எந்த ஒரு அடுக்கிலும் கவிஞராகப் பயணிக்கத் தெரிந்தவர். ஒரு பக்கம் தீவிர இலக்கியம் என்று இயங்கி வரும் இவர், இதற்கு நேர்  எதிர்துருவமாகக் கருதப்படும் வணிகத் திரையுலகில் ஆயிரம் பாடல்கள் தாண்டிய முன்னணிப் பாடலாசிரியராகவும் தன் அடையாளத்தைப் பதித்துள்ளவர்.

இனி யுகபாரதியுடன்…. நேர்படப் பேசுவோம்…!

உங்கள் கவிதைப் பயணம் எப்போது தொடங்கியது. ? உங்கள் முன் கதையைக் கொஞ்சம் சொல்லுங்கள் ?

தஞ்சையில் ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்த எனக்கு சிறு வயதிலேயே கவிதை ஆர்வம் வந்து விட்டது.அப்பா பொதுவுடைமை இயக்கத்தில் தீவிரமாக இருந்தார்.அவரைப்பார்க்க  நிறைய தலைவர்கள் இலக்கிய ஆளுமைகள் வீட்டுக்கு வருவார்கள்.வீட்டிலேயே ஏராளமான புத்தகங்கள் இருந்தன.படிக்கவும் எழுதவும் ஏற்ற சூழல் வீட்டிலேயே இருந்ததால் 13-14 வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்து விட்டேன். எந்திரவியல் பொறியியல் படிப்புடனும்சில நூறு கவிதைகள் எழுதிய அனுபவத்துடனும் தான் சென்னைக்கு வந்தேன்.

ஆரம்பத்தில்உங்கள் கனவு பாடலாசிரியராவதுதானே?

தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு வந்த ஆரம்ப காலத்தில் திரைப்பாடல் ஆசிரியராகும் எந்தக் கனவும் எனக்கு இருந்திருக்கவில்லை. பத்திரிகையாளராக வரவேண்டும் என்பதே என் அவாவாக இருந்தது. ‘ராஜரிஷி’ என்னும் அரசியல் ஏட்டில் சில காலம் பணிபுரிந்தேன். ஒரு கட்டத்தில் அந்தப் பத்திரிகை நின்றுபோனது. அடுத்து, சில பத்திரிகைகளில் தாவித் தாவி எப்படியாவது நிலைபெற்றுவிடலாம் எனத் தவித்துக்கொண்டிருந்தேன். எல்லா இடங்களிலும் என்னுடைய இருப்பு என்பது கேள்விக்குரியதாகவும் கேலிக்குரியதாகவுமே இருந்தன.

 எந்தப் பத்திரிகையிலும் என்னால் முழுமையாக ஒட்ட முடியவில்லை. எதையோ தேடி எல்லாவற்றிலும் தொலைவது போலிருந்தது. கவிதையின் துரத்தலிலிருந்து தப்பிக்கமுடியாமல் களைத்துப்போனேன். பத்திரிகையாளனாகவும் இருக்க வேண்டும் அதே சமயம் கவிதைகளோடும் உறவு பூண வேண்டும் என்னும் இரட்டை மனநிலையில் அங்கும் இங்குமாக அலைந்துகொண்டிருந்தேன். அப்படியான ஓர் இக்கட்டில்தான்  கணையாழியைக் கவனித்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

 கணையாழியில் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?

ஒருவகையில் அதுவே என் இலக்கிய ஆர்வத்திற்கும் தேடலுக்கும் சரியான  இடமாக அமைந்தது. அங்கே பணிபுரிந்த ஆறாண்டுக் காலமும் என் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்ந்த காலம் எனலாம். தினசரி ஓர் இலக்கிய ஆளுமையோடு பழகவும் அவர்களின் மேன்மையான படைப்புகளில் கரையவும் வாய்ப்புகள் ஏற்பட்டன. அப்பத்திரிகையின் ஆலோசகர்களாக இருந்த இந்திரா பார்த்தசாரதியும் கஸ்தூரி ரங்கனும் என்மீது செலுத்திய அன்பின் கனத்தை அளவிட இயலாது. தசரா அறக்கட்டளையைச் சேர்ந்த தமன் பிரகாஷ், சுவாமிநாதன், ம. ராசேந்திரன் ஆகிய மூவரையும் இந்த இடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவர்கள் காட்டிய அக்கறையும் ஆதரவும் இல்லையென்றால் என் பயணம் பாதியிலேயே முடிந்துபோயிருக்கும். கக்கடைசியில், சோறுடைத்த சோழவளநாடு சோத்துக்கில்லாமல் பக்கத்தூர் பனியன் கம்பெனிகளில் என்ற என் கவிதைக்கு நானுமே சாட்சியாகியிருப்பேன்.

தேடலின் முடிவில்       ஒரு கட்டத்தில் விரக்தி வந்ததா?

அப்போது முடிந்தவரை முயல்வது. முடியவில்லை எனில் திரும்புவது என்பதைத் தாண்டி எந்த சமரசத்தையும் நான் கற்றிருக்கவில்லை. தீவிர இலக்கிய நெருப்பில் குளிர்காய்ந்துகொண்டிருந்த என்னால் வணிகக் கட்டாயங்களையும் அதன் தேவைகளையும் ஆரம்பத்தில் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. பொருளாதார நெருக்கடி ஒருபுறமும் போகும் பாதையில் தெளிவின்மை மறுபுறமும் என்னைக் கசக்கிப் பிழிந்தன. குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்த என்னுடைய பொறுப்புகளைத் தட்டிக்கழிக்க இயலாமல் தகித்துக்கொண்டிருந்தேன். ‘எழுதி ஈட்டுவது உத்தமம். உழுது ஈட்டுவது அதி உத்தமம்’ என்று மலையாளக் கவி குஞ்ஞுண்ணி எழுதுவார். உண்மையில், உழுது வாழ எங்களுக்கு நிலம் இருந்தது. ஆனால், பாசனமற்ற டெல்டாவில் வயல்வெளிகளும் வறுமை பூண்ட எங்கள் உதடுகளைப் போலவே வெடித்துக் கிடந்தன. என்ன செய்வது? படித்த பொறியியல் வேலைக்குப் போயிருக்கலாம்தான். ஆனால், எனக்குள் இருந்த இலக்கிய ஆர்வம், அலுவலகப் பணிகளுக்கு நான் தகுதியற்றவன் என்பதைச் சொல்லிக்கொண்டிருந்தது.

கரைவேட்டி பிம்பம் கவிஞனுக்குத்தேவையா? . எல்லாருக்குமே பொதுவாக இருக்கவேண்டிய படைப்பாளிக்கு அரசியல் சார்பு தேவையா? உங்கள் கவிதைகளில் அரசியல் நிறம் உள்ளதே?

எல்லோருக்கும் பொதுவான ஒருவர் என்பதால் அவருக்கு அரசியல் இல்லாமல் போய்விடுமா என்ன? என்னைப் பொறுத்தவரை எல்லோருக்கும் பொதுவானவரே சரியான அரசியலைப் பேசமுடியும். நடுநிலை என்னும் பொருளில் சொல்லவில்லை.படைப்பாளிக்கு அரசியல் ஏன் என்று கேட்கிறீர்கள்.  .படைப்பாளிகளுக்கு சமூகப் பொறுப்பும், சமூக வெளிப்பாடும் மிக மிக அவசியம். பாரதியை சுதந்திரப் போராட்ட உணர்வைக் கழித்துவிட்டுப் பார்க்கமுடியுமா?அவரிடம் ஒட்டியிருந்த அரசியல் நிறத்தை விலக்கிவிட்டால், அவரை ஓர்ஆகச்சிறந்த மகாகவியாகப் பார்க்க வாய்ப்பில்லை என்பது என் தனிப்பட்ட புரிதல்.பாரதிதாசனிடமும் அப்படித்தான். அவரிடமிருந்த பகுத்தறிவு சிந்தனையையோ, பெரியாரிய சிந்தனையையோ தவிர்த்தால், புரட்சிக்கவிஞர் என்ற அடைமொழி அவருக்குப் பொருந்தவே பொருந்தாது. அதற்குப் பிறகு வந்த கவிஞர்களும்கூட, அரசியல் நிறந்தோடுதான் இருந்திருக்கிறார்கள். சுமார் 5000 பாடல்களை எழுதிய கண்ணதாசனுடன் 150க்குள் மட்டுமே பாடல்களை எழுதிய பட்டுக்கோட்டையை ஒப்பிட்டுப்  பேசக்காரணம் அவரது சித்தாந்தப் பின்புலம் தானே.

அந்த அளவுக்கு அரசியல் – கொள்கைப் பின்னணி அவசியம் என்கிறீர்களா ?

சித்தாந்தப் பின்புலம் இல்லாத படைப்பாளியை  தமிழ்ச் சூழல், குறிப்பாக தமிழகச் சூழல் பெரிதாக ஏற்றுக் கொண்டதுமில்லை.  கொண்டாடியதுமில்லை. இந்த மண் அப்படிப்பட்ட மண். பெரியாரிய மண். அம்பேத்கரிய மண். இடது சாரி சிந்தனைகள் சிங்காரவேலனாரை பின் தொடர்ந்த ஜீவாவின் மண். படைப்பு என்பது கொடி மாதிரி. எனவே, அது அரசியலைப் பற்றிப் படரவேண்டியிருக்கிறது.

 படைப்பாளிக்கு அரசியல் அவசியம். கட்சி அரசியல் என்பது வேறு. சித்தாந்த அரசியல் என்பது வேறு. சித்தாந்தம் பேசுவதால் அவனைக் கட்சிக்காரன், கரைவேட்டிக்காரன் என்று முத்திரை குத்திவிட முடியாது.

உங்களுடைய கவிதைகளில் கிராமங்கள் பற்றிய ஏக்கம் நிலவுகிறதே..?

 ஆமாம். 90-களுக்கு முன்பு நகரம் வந்த இளைஞர்களுக்கு அப்படியொரு ஏக்கம் இருந்தது. அது என் கவிதைகளிலும் பிரதிபலித்தது.  அன்று கிராமம் என்பது சொர்க்கம் போலவும், நகரம் என்பது நரகம் போலவும் தெரிந்தது. இன்றோ கிராமங்களின் வாழ்க்கை நகரங்களை விடவும் மோசமாகிவிட்டது. வாழ்வாதாரங்கள் கெட்டுவிட்டன. அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடும் நிலை. அல்லது போராடும் நிலை. பசுமையான கிராமங்களை கார்பரேட் கம்பெனிகள் கபளீகரம் செய்ய ஆரம்பித்துள்ளன. இந்த அரசும் அமைப்பும் கிராமத்திலிருந்தவர்களை நகரத்தை நோக்கி விரட்டுகிறது. உலக சந்தையை உத்தேசித்து கிராமங்களை நகரமாக்கும் பிடிவாதத்தில் மத்திய மாநில அரசுகள் செயல்படுகின்றன.இந்நிலையில் கிராம வாழ்க்கையை சிலாகிக்க ஒன்றுமில்லை. கிராமத்திலிருந்தால் போராடும் நிலையிருப்பதால் மக்கள் அனைவருமே நகரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

உங்களுடைய புதுக்கவிதைகளில் கூட சந்தத்தின் சாயல் இருந்து கொண்டேயிருக்கிறதே ஏன்?

 பொதுவாக கவிதையாக்க முயற்சியை எங்கிருந்து எடுக்கிறோம் என்று பார்த்தால்,பாரதி, பாரதிதாசன் என்ற இரண்டு பெரிய ஆகிருதிகளிடமிருந்துதான் எனச் சொல்லலாம். அவர்களிடமிருந்து பெற்றிருக்கும் பாடமே சந்தங்களைச் சாரமாகக் கொண்ட தமிழ்தான். பக்தி இலக்கியக் காலக் கவிதைகளில் இருந்தே சந்தத்தைக்கொண்டே அவர்களும் கவி சமைத்தார்கள். இன்னும் சொல்லப்போனால், புதுக்கவிதைக்கு அறுபது-எழுபது ஆண்டுகால வரலாறுதான் உள்ளது. ஆனால் சந்தப்பாடலுக்கு 2500 ஆண்டு கால வரலாறு உண்டு. தாலாட்டு, நாட்டுப்புறப்பாடல்கள்,பழமொழிகள் என எல்லாமே ஓசைக் கட்டுமானம் உடையவை. மனப்பாடம் செய்ய எளியவை. தொன்மை மொழிகள் அனைத்துக்குமுள்ள சிறப்பே அதுதான்.

 ஓசையைத் தள்ளிவிட்டு எழுதப்பட்ட புதுக்கவிதைகளிலும் மரபு வழித் தன்மையாக இந்த ஓசைநயம் அமைந்து  இருக்கும். இந்த ஓசை, நம்மரபிலிருந்து பெற்ற ஒன்றாகும். கவிதையில்  ஓசையைத் தவிர்த்தால் உரைநடையாகும் அபாயம் உண்டு. ஓசைக்குப் பழகினால் மொழி வசமாகும். எனவே, இதை ஒப்புக்கொள்கிறேன். ஒலியில்லாமல் மொழி எங்கேயிருக்கிறது? ஒலி ஒழுங்குகளே மொழி என்பதால் அதை கையாள்வதில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்கிறேன்.

உங்களுடைய கவிதைகளில் எது உங்களின்  குரல்? எது வேறு சிலரை வழிமொழிகிற குரல்?

என்கவிதைகளை என் குரல் என்று நம்புகிறேன். வழிமொழிகின்ற குரலாகவும் சில இருக்கலாம். அதை ஆய்வாளர்கள் தான் சொல்லவேண்டும். எழுதும் போது ஒரு தொன்மையான மொழியின் இலக்கியத்தில் வரும் படைப்புகள் தன் மூதாதையர்களின் குரலை வழிமொழிவதாகவே இருக்கும். முன்மொழிந்த குரலா, வழிமொழிந்த குரலா என்பதை காலமும் வரலாறும் சொல்லிவிடுமே.

தீவிர இலக்கியங்கள் வெறும் தன்னுணர்வு சார்ந்தே உள்ளனஅரசியலைப் பற்றிப் பேசுவதில்லை  என்கிற குற்றச்சாட்டிற்கு உங்களின் பதில்?

எல்லாக் காலக்கட்டத்திலும் அகம் சார்ந்தும் புறம்சார்ந்தும் கவிதைகள் இயங்குகின்றன. இரண்டுமே தவிர்க்கமுடியாதவை. அகம் சார்ந்த கவிஞர்கள்  காதலை எழுதியது போலவே புறம் சார்ந்த கவிஞர்கள்  போர்களைப் பற்றி எழுதி வந்திருக்கிறார்கள். நாம் வாழுங்காலத்தில் மிக காத்திரமான போர்க்கவிதைகள் ஈழத்தில் எழுதப்பட்டன. அவர்கள் போர் பற்றி எழுதினாலும் போர் வேண்டாமென்றே புரிதலையே கொண்டிருந்தார்கள். எனவே தன்னுணர்வும் தன்மானம் உணர்வுமே கவிதைகளை இயக்குகின்றன.

தீவிர இலக்கியத்தை முன்னெடுக்கும் சிறுபத்திரிகைகள் அரசியலைப் பேசத்தொடங்கினால் கவிதைகளில் இன்றுள்ள வெறுமை நீங்கும். ஏனெனில், இன்றைய தன்னுணர்வுக் கவிதைகளில்பெரிய லட்சியத்தை நோக்கிய நகர்வோ பயணமோ இல்லை. எனவே அவற்றில் அரசியல் சார்பு இல்லை.

ஆனாலும் வரவே இல்லை  என்று கூற முடியாது. சமீபத்தில் மனுஷ்யபுத்திரன் எழுதிய’பிக்பாஸ் ‘கவிதை போல தீவிர அரசியலைப்பேசும்  கவிதைகள் நிறைய வரவேண்டும்.

புதுக்கவிதைகளின் போக்கில் இசங்கள் செய்யும் தாக்கம் பற்றி..?

புதுக்கவிதைகளுக்குப் பிறகே இசங்கள் வந்ததாக சொல்ல முடியாது. ஏற்கெனவே இருந்தவற்றுக்கு மேற்குலகம் இசங்களின் பெயர்களை வழங்கின அவ்வளவே. எல்லா இசத்துக்கும் படிமம், குறியீடு அடிப்படையானவை. அதை நம்முடைய தமிழ், பன்னெடுங்காலத்திற்கு முன்பே உள்ளுறை,இறைச்சி என  வகுத்து இலக்கணமாக்கித் தந்துவிட்டது.

மூன்று வரியில் சிந்தியல் வெண்பா  இரண்டு வரியில் குறள், ஒரு வரியில் ஆத்திச்சூடி இப்படி எல்லா வகைமைகளும் இங்கேயே உள்ளன.

புதுக்கவிதைகளை அந்த வகையில் எழுதிப்பார்த்தவர் நா. பிச்சமூர்த்தி தான். அவருக்குப் பின் சர்ரியலிஸக் கவிதைகளை‘பால் வீதி’ என்று கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதினார். New Verseலிருந்து தான் புதுக்கவிதை வந்தது. சொல்புதிது என்றார் பாரதி. என்ன சொல் புதிது? வசன கவிதையில் தீ இனிது என்றார், தீ இனிது  என்ற பதம் புதிது. அக்கினிக் குஞ்சு என்ற பொருள் புதிது.

இசங்களை மட்டும் முன்வைத்துக் கவிதை எழுவது, குழந்தைகளிருக்கப் பொம்மைகளைக் கொஞ்சுவதற்குச் சமம்.

திரைப்படத்தில் முதல்  பாடல் அனுபவம்?

 என் மனப்பத்தாயம் , பஞ்சாரம்  கவிதைத் தொகுப்புகளைப் படித்து விட்டு இயக்குநர் லிங்குசாமி என்னைச் சினிமாவுக்குப் பாடல் எழுத அழைத்தார் . அப்படி வந்த வாய்ப்பு தான்’ஆனந்தம்’ படத்தில்  வந்த ‘புல்லாங்குழலில் வட்டம் பார்த்தேன் ‘ பாடல். இரண்டாவது வாய்ப்பாக’ ரன்’ படத்தில் ‘காதல் பிசாசே’பாடலையும்  அவரே கொடுத்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகே  திரையுலக தட்பவெப்பம் எனக்குப் புரிந்தது. ஒரு கட்டத்திற்குப் பின்புதான், உலக சினிமா என்னவென்றும் சினிமா உலகம் என்னவென்றும் புரிந்தது. எத்தனையோ வித போராட்டங்களைக் கடந்து இன்று ஆயிரம் பாடல்களைத் தாண்டியிருப்பது ஆச்சர்யமளிக்கிறது.

சினிமாவில் வெற்றி முக்கியம். அந்த வகையில் முதல் பாடலுக்கான வெற்றி வெளிச்சம்  உங்கள் வாழ்க்கையை மாற்றியதா ?

இரண்டாயிரத்தில் என் முதல் திரைப்பாடல் வெளியானது. சகல திசையிலும் பெருவெற்றி பெற்ற அப்பாடலைத் தொடர்ந்து மொத்தத் திரையுலகமும் என்னை நோக்கி வந்துவிடும் என நான் எண்ணியிருந்தேன். ஆனால், அப்படி எந்தவொரு அதிசயமும் நிகழவில்லை. பாடலை எழுதிய நான் மட்டுமே காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு நடந்தேனே தவிர ஒரு ஈ எறும்புகூட என்னை எட்டிப் பார்க்கவில்லை. ஈ எறும்புகளே எட்டிப்பார்க்காத போது பெரும் திரை நிறுவனங்களைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. அதைவிட ஒரு ஹாசியம் என்னவென்றால் பலரிடமும் அப்பாடலை”நான் எழுதினேன், நான்தான் எழுதினேன்’’ எனச் சொல்ல வேண்டியிருந்தது.

திரைப்பாடல் எழுதிவிட்டால் உலகமே நம்மை உற்றுக் கவனிக்கும் என்னும் மடமையில் உலவிய காலம் அது. ‘அறிமுகம் யுகபாரதி’ எனத் திரையில் எழுத்துகள் வரும்போது என்னுடன் வந்திருந்த நண்பர் கைதட்டினார். அந்தக் கைதட்டை அகில உலகத்தின் கைதட்டாகக் கருதி அகம் மகிழ்ந்தேன். ”பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்” என்னும் அந்தப்  பாடலில் இலக்கியம் முழுவதையும் எழுதிவிட்ட திருப்தியில் லயித்திருந்தேன். 

முதல் பாடல் வந்த போது உங்கள் மனச்சூழல் எப்படி இருந்தது?

எழுத்தையே வாழ்வாக்கிக்கொள்வது, வாழ்வையே எழுத்திலிருந்து பெறுவது என்னும் அபாயகரமான முடிவை நான் எடுத்திருந்த நிலையில்தான் முதல் திரைப்பாடல் வெளிவந்தது. ஆயினும், அம்முடிவு குறித்து மறுபரிசீலனை செய்யுமளவுக்கு  மிகுந்த மனச்சோர்வை அந்தப் பதினாறு மாதங்கள் ஏற்படுத்தின. பின்னணிகள் எதுவுமில்லாத ஒரு மத்தியதர இளைஞன் சந்திக்கும் அத்தனைவிதமான சவால்களையும் அப்போதுதான் உணர்ந்தேன். முதல் தலைமுறையில் வெளிப்படும் ஒருவன் என்னென்ன சங்கடங்களை எதிர்கொள்வானோ அத்தனையும் எனக்கு நேர்ந்தன.  விரக்தி, கோபம், வெறுப்பு என மாறிமாறி என்னை ஆட்கொண்டன. எதிர்வரும் காலங்கள் குறித்த நம்பிக்கையை அறவே இழந்திருந்தேன். அந்தத் தருணத்தில்தான் ஏற்கனவே பத்திரிகைத் தொடர்பால் எனக்கு அறிமுகமான இயக்குநர் திருப்பதிசாமி இரண்டாவது பாடலை எழுதும் வாய்ப்பை வழங்கினார். விட்ட இடத்திலிருந்து தொடங்கும் கனவுபோல அவ்வாய்ப்பு அமைந்தது. முதல் பாடல் வாய்ப்பை வழங்கியவர் லிங்குசாமி.  இரண்டு சாமிகள் என் வாழ்வுக்கு வழிகாட்டின என அவ்வப்போது நான் சொல்லுவதுண்டு.   

முதல் திரைப்பாடல்  வெற்றிதானே பெற்றது ? பின் ஏன் இந்த தேக்கநிலை ஏற்பட்டது?

முதல் திரைப்பாடல் எனக்கு வழங்கிய அடையாளம் பெரிது. வாய்ப்புகள் வரவில்லையே தவிர பொதுவெளியில் அப்பாடல் உருவாக்கித் தந்த மதிப்பும் பெருமையும் அதிகம். பாடல் வெற்றி அடைந்தால் படக் கம்பெனிகள் வரிசை கட்டி வந்து நிற்கும் என்ற என் அறியாமையும் அப்பாடலில் இருந்தே விலகியது. நிலைபெற, நீடித்திருக்க வெற்றிக்கு மேலேயும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன என்று இப்போதும் ஆராய்ந்து சொல்லும் அறிவை நான் பெறவில்லை.

தொண்ணூறுகளின் இறுதியும் இரண்டாயிரத்தின் தொடக்கமும் திரைப்பாடல் துறையில் முக்கியமான காலகட்டம். ஏனெனில், என்னையும் சேர்த்து பல இளம் கவிஞர்கள் அவ்வாண்டுகளில்தான் திரைத்துறைக்குள் நுழைந்திருந்தோம். என்போல அவர்களுக்கு வாய்ப்புகளைப் பெறுவதில் சிக்கலில்லை. என்றாலும், அன்றைக்கு இருந்த திரைச்சூழலில் நாங்கள் சிறியவர்களாகவே பார்க்கப்பட்டோம். சிறு சிறு கவிதைத் தொகுப்புகள் மூலம் அடையாளப்பட்ட எங்களைத் திரையுலகம் வரவேற்றது. கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் நாங்களும் சரியாகவே பயன்படுத்தினோம். ஆனாலும், நாங்கள் கொண்டாடப்படவில்லை. இலக்கியப் பின்புலத்தை மட்டுமே நம்பிவந்த எங்களைத் தொடர்ந்து தூக்கிச் சுமக்கத் தோள்களில்லை.

ஏன் யாரும் வழிகாட்டவில்லையா?

ஒருதுறையில் நாம் கால் வைக்கும்போது நமக்கு முன்னே அந்தத் துறையில் ஆழக்கால் பதித்தவர்களின் அன்பும் வழிகாட்டலும் அவசியம். தன்காலத்தில் தன்னிலும் சிறப்பாகப் பாடல் எழுதிய கல்யாணசுந்தரத்தைத் தன்னுடைய படத்திற்குப் பாடல் எழுத அணுகியவர், அழைத்தவர் கண்ணதாசன். தன்னைவிடவும் தன் துறையின் செழுமைக்காக உழைத்தவர்கள் எங்கள் காலத்தில் அருகிப்போயினர். யாரைப் பார்த்தெல்லாம் எழுத வந்தோமோ அவர்களெல்லாம் எங்களை வாழ்த்தவில்லையே என வருந்தினோம். இறுதியில், நாம் எழுத வந்திருப்பது நமக்கு முன்னே எழுதிக்கொண்டிருப்பவர்களின் பாராட்டுகளைப் பெறுவதற்கல்ல. பாரபட்சமில்லாமல் உச்சிமுகர்ந்து வாரி அணைத்துக்கொள்ளும் மக்களுக்கென வெகு காலத்திற்குப் பிறகே விளங்கிக்கொண்டோம். எனவே, மூத்தோரின் வார்த்தைகளால் நாங்கள் முனை முறியவில்லை.

உங்களையெல்லாம் எப்படி விமர்சித்தார்கள்?

இளம் பாடலாசிரியர்களுக்கு எதுவும் தெரியவில்லை. குடித்துவிட்டு எழுதுவதால் அவர்களின் பாடல்கள் தள்ளாடுகின்றன என்றெல்லாம்  எங்களைப் பற்றி எங்கள் முன்னோர்கள் பேட்டியளித்தார்கள். ஒழுக்க விதிகளை உயர்த்திப்பிடித்து அதன்மூலம் எங்களை, எங்களுடைய வளர்ச்சியைக் கேள்விக்குட்படுத்துவதில் முன்னணிப் பாடலாசிரியர்களில் ஒருசிலர் குறியாயிருந்தார்கள். ஒருசிலர் என்றே சொல்கிறேன். எல்லோரும் இல்லை.யார் யார் என்பது நீங்கள் அறிந்ததே.

அப்படியான தருணங்களில் எங்கள் தோளோடு தோள் நின்ற ஊடகங்களின் ஆதரவு இல்லையாயின் நாங்கள் அத்தனை பேரும் என்றைக்கோ உதிர்ந்திருப்போம். காலமும் பத்திரிகைகளும் எங்களைக் காப்பாற்றின. அன்று விமர்சிக்கத் தொடங்கியவர்கள் இன்றும் எங்களை அங்கீகரிக்கத் தயங்குகிறார்கள். ஆனாலும், நாங்கள் தளர்ந்துவிடவில்லை. பெற்றுவிட்ட நட்சத்திர அந்தஸ்தை இழந்துவிட மனமில்லாமல் அவ்வாறு பொருமுகிறார்கள் என்றே புரிந்துகொள்கிறோம். முதல் முயற்சிகளில் எங்களிடமிருந்த எழுத்துக் குறைகளையும் பரிசீலித்து இப்போது முற்றிலும் பண்பட்டிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாகவே நானும் இன்னும் சிலரும் இத்துறையில் காலூன்றி நிற்கிறோம். .

இரண்டாவது வாய்ப்புக்குப்பின்  நிலைமை எப்படி இருந்தது?

இரண்டாவது வாய்ப்பாக’ ரன்’ படத்தில் ‘காதல் பிசாசே’பாடலையும்   லிங்குசாமியே கொடுத்தார். . இரண்டாவது பாடலிலிருந்து என் பயணம் சீரான வேகமெடுத்தது. அவ்வேகத்திற்கு ஆதாரமாக இசையமைப்பாளர் வித்யாசாகர் கிடைத்தார். 

இசையமைப்பாளர் வித்யாசாகர் எப்படி உதவினார்?

இளம் கவிஞர்களை வளர்த்தெடுப்பதில் வேறு எவரைக் காட்டிலும் அவர் காட்டிய அக்கறை அதிகம். ஒரு படத்தில் ஆறு பாடல்கள் என்றால் ஆறுபாடலையும் பிரித்து ஆளுக்கொன்றாக ஆறு இளம் கவிஞர்களை அவர் வளர்த்தெடுத்தார். ‘ரன் ‘திரைப்படத்தில்’காதல் பிசாசே’ என்னும் பாடலுக்குப் பின் எந்தத் தடையும் இல்லாமல் நான் பயணிக்க அவரே காரணம். ஒரு மூத்த சகோதரனுக்கு ஈடாக அவர் விளங்கினார். என்  வாழ்க்கையை  மாற்றி      யமைத்ததில் அவருக்குப் பெரும் பங்குண்டு. இயல்பிலேயே கவிதை மீது அதீத சிநேகம் கொண்டிருந்த அவர் எங்கள் எல்லோரையும் ஒரே தராசில் வைத்திருந்தார். என்ன படம்? யார் இயக்குநர்? என்பதையெல்லாம் கடந்து எங்கள் அறுவருக்கும் பாடல்களை அருளினார். எங்களுக்காக அவர் வாதாடினார். எங்களுக்காக அவர் போராடினார். எங்களை மீட்டுக் கொண்டுவந்து மேடையேற்றினார். இன்றைக்கு ஒவ்வொருவரும் ஆயிரம் பாடல்களுக்குமேல் எழுதியிருப்போம்.

அதன் பிறகு வாய்ப்புகள் நிலவரம் எப்படி, ?

முதல் படத்தின் பாடலின்  வெற்றிக்குப் பின்னால் இனியெல்லாம் சுகமே என்று நினைத்திருந்த எனக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வரவே இல்லை.

ஏறக்குறைய பதினாறு மாதங்கள். பார்ப்பவர்கள் எல்லாம் பாராட்டினார்கள். ‘ அடுத்த பாடல் என்ன?’  என்று விசாரித்தார்கள். அவர்கள் விசாரணைக்கு உரிய பதிலை என்னால் சொல்ல முடியாமல் போனது. கணையாழியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வந்த எனக்குத் திரைத்துறையின்  அரசியலோ சூட்சமமோ தெரிந்திருக்கவில்லை. வணிக ரீதியான வெற்றிக்குப் பிறகும்கூட ஏன் என்னை அவர்கள் அணுகவோ அழைக்கவோ தயங்கினார்கள் என்பது இன்றுவரை தொடரும் புதிர்களில் ஒன்று.

வரும் வரும் என்று வாய்ப்புகளை எதிர்ப்பார்த்து ஏங்கிக்கொண்டிருந்த எனக்கு மனச்சோர்வே மிஞ்சியது. என்ன செய்வதென்றும், என்திசை எதுவென்றும் யூகிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தேன். முதல் பாடலே கடைசிப் பாடலாகவும் ஆகிவிடுமோ? என்னும் அச்சத்தில் குழம்பிக்கொண்டிருந்தேன். யாரிடமும் எதையும் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. காரணம் புரியாத விநோதத்தில் எனக்கே என்மேல் ஒருகட்டத்தில் வெறுப்பு வந்துவிட்டது.

அதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்  ?

தெரியவில்லை. ஆற்றலைக் கைக்கொள்ள முடிந்த எனக்கு அதற்குரிய வாய்ப்பைப் பெறும் சாதுர்யம் இல்லையே என உடைந்திருந்தேன். எழுத்தையே முழுநேரத் தொழிலாக வரித்துக்கொள்ள முனைந்த எனக்கு அச்சூழல் ஏற்படுத்திய ஏமாற்றத்திலிருந்து விடுபட இன்றுவரை இயலவில்லை. ஏன்? எதனால்? எனத் தெரியாமல் பதறிக்கொண்டிருந்த அந்த நிகழ்வுகளை நினைத்தால் இப்போது சிரிப்பு வருகிறது.

ஷங்கர், மணிரத்னம்  போன்றபெரிய வணிகத்தரத்திலான இயக்குநர்கள் சிறிய வளரும் பாடலாசிரியர்களை ஆதரிக்காதது ஏன்?

ஒருபுறம் ஷங்கர், இன்னொருபுறம் மணிரத்னம் எனத் தொடர் வெற்றிகளில் வைரமுத்தும் ரகுமானும் உச்சத்தைத் தொட்டார்கள். அதுவரை இருந்த தமிழ் சினிமாவின் வியாபார எல்லைகளை ஷங்கரும் மணிரத்னமும் அகலப்படுத்தினார்கள். இந்திய சந்தையைத் தமிழ்த் திரையுலகை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தவர் கே. பாக்யராஜ். அவருக்குப் பிறகு அந்தப் பெருமை இவர்கள் இருவரையே சாரும். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளுக்கும் சேர்த்துப் படம் எடுக்கத் தொடங்கினார் மணிரத்னம். அதனால், ரகுமானின் வளர்ச்சி என்பது அசுர வளர்ச்சியைக் கண்டது. இந்தியாவைத் தாண்டியும் இசைக்கான அங்கீகாரத்தைப் பெற ரகுமான் உழைத்தார்.

இரண்டு ஆஸ்கார் பெறும்வரை அவருடைய உழைப்பில் சோர்வோ சுணக்கமோ தென்படவில்லை. ரகுமானின் வளர்ச்சி வைரமுத்தின் எழுச்சி இரண்டும் ஒருசேர நிகழ்ந்த காலத்தில் இளம் பாடலாசிரியர்களாக நாங்கள் திரைத்துறைக்கு உள்ளே வருகிறோம். உள்ளே வந்த இளம் பாடலாசிரியர் பட்டாளத்தை ரகுமானோ இளையராஜாவோ ஆதரிக்கவில்லை. பழக்கப்பட்ட தங்கள் பாதையில் போய்க்கொண்டிருந்தார்கள். எத்தனையோ புதுப் பாடகர்களை அறிமுகப்படுத்திய ரகுமான், பாடலாசிரியர்கள் விஷயத்தில் பாராட்டும்படி நடந்துகொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை.

ஆரம்பத்தில் இளையராஜா, ரகுமான் இரண்டு பேரின் ஒலிப்பதிவுக்கூடத்துக் கதவுகளும் இளம் பாடலாசிரியர்களுக்குத் திறக்கப்படவில்லை. வணிக வெற்றிகளை நாங்கள் ஓரளவு பெறத் தொடங்கிய பின்னரே ஓரிரு இயக்குநர்கள் வலுக்கட்டாயமாக அவர்களிடம் எங்களை அழைத்துப் போனார்கள். சின்னவர்கள் சிறப்பாக எழுதுவார்கள் என சிபாரிசு செய்தார்கள். அப்போதும் தொடர்ச்சியான வாய்ப்புகளை எங்களில் எவருமே பெறவில்லை. இதைவிடப் பெரிய விஷயம் என்னவென்றால், அன்றைக்கு  பெரும் இயக்குநர்களாக உருவெடுத்திருந்த ஷங்கரோ மணிரத்னமோ எங்களைப் பற்றி அறிந்திருந்தார்களா? என்றுகூடத் தெரியவில்லை. 

வணிக சினிமாவிற்காக சகல சமரசங்களையும் செய்யத் துணியும் அவர்கள் பாடலாசிரியர்கள் விஷயத்தில் பற்றுறுதியோடு இருந்ததற்கு என்ன காரணமோ? பிரமாண்டத்தின் மொழியே தமிழ் சினிமா என்றானபொழுது சின்னச்சின்னப் படங்களில் எழுதிக்கொண்டிருந்த எங்களுடைய பாடல்களும் மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கைப் பெறத் தொடங்கின. ஒவ்வொருவராகத் தெரியத் தொடங்கினோம். இந்தக் காரியத்தில் எங்களுக்கு இன்றளவும் உதவிக்கொண்டிருக்கும் இசையமைப்பாளர்கள். எஸ்.ஏ. ராஜ்குமார், சிற்பி, தேவா, தினா, வித்யாசாகர், மணிசர்மா, யுவன் ஷங்கர்ராஜா, ஹாரீஸ் ஜெயராஜ், ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் என்றும் எங்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். இந்த இடத்தில் எங்களில் பெரும்பாலானோரை அறிமுகப்படுத்திய சூப்பர் குட் ஃபிலிம்ஸை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

திரைஇலக்கியமாக மதிப்பில் இருந்த திரைப்பாடல்கள் இன்று தரம் தாழ்ந்ததேன்? ஒரு காலத்தில் மொழியை ஆண்ட, பொருளைஆண்ட ,கருத்தைஆண்ட ,சொல்லை ஆண்ட திரைப்பாடல்கள், இன்று ஒலியை அதாவது வெறும் சப்தத்தை ஆளும் அவலநிலைக்குக் காரணம் என்ன?

 இந்தக் குற்றச்சாட்டை மறுப்பதிற்கில்லை. ஒரு காலத்தில் கொள்கையும்  போராட்டமும் முன்னிருந்தன. அவற்றைப்  பிரதிபலிக்கும் விதத்தில் பாடல்களில் பதிவுகள் இருந்தன. குறிப்பாக மதுரகவி பாஸ்கரதாஸ், உடுமலை நாராயணகவி, கண்ணதாசன்,பட்டுக்கோட்டையார் ஆகியோரின் பாடல்களை எடுத்துக்கொண்டால் போதும், நூற்றாண்டு கால சினிமாவை நான்கு பகுப்பாகவே பிரித்துவிடலாம்

மதுரகவி பாஸ்கரதாஸ் காலத்தில் சுதந்திரப்போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்த்து.‘வெள்ளை வெள்ளை கொக்குகளா.. விரட்டியடிச்சாலும்  வாரீகளா..’ என்று அவர்எழுதினார். உடுமலை  நாராயணகவிகாலத்தில் முழுக்க பெரியாரின் சுயமரியாதைக் கருதாக்கம் இருந்தது. கு. மா பா, கவி.கா. மு. ஷெரிப் காலத்தில் தமிழ் தேசிய உணர்வு மேலோங்கியிருந்தது. கண்ணதாசன் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகப் பற்று அதிகம் இருந்தது. பட்டுக்கோட்டையார் காலத்தில்  இடதுசாரி சிந்தனை இருந்தது.  இப்படி இயக்கங்கள் மேலோங்கியிருந்த காலங்களில் மக்களும் அப்படிப்பட்ட கருத்துகளை வரவேற்றார்கள். இப்போதோ அரசியலற்ற காலம்.

ஒரு காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி என இருவரும் அரசியல் பின்புலம் கொண்டிருந்தனர். பிறகு தான் இளையராஜா வந்தார். அவர் இடது சாரிப் பின்புலத்துடன் வந்தார். ஆனாலும், சினிமாவில் அவர் தன்னை ஓர் இடது சாரிப் பின்புலம் கொண்டவராகக் காட்டிக்கொள்ளவேயில்லை. சொல்லப்போனால் அதற்கு நேர்மாறான திசையில் போனார். அதே போல்தான் ரஜினிகாந்தும் கமலஹாசனும். இந்த இருபெரும் நட்சத்திரங்களும் தங்களுக்கு எந்தக் அரசியல் கட்சி அடையாளமும் வந்துவிடக் கூடாதென்பதில் கவனமாயிருந்தார்கள். ஒரு எம். ஜி. ஆரோ, சிவாஜியோ இல்லாது போனதால் கருத்துக்களில் கனமில்லாது போயின. யாருடைய குரல் என்பதில்தானே கருத்துக்களின் வலிமையே. வலிமையற்ற கதாபாத்திரங்கள் வாழ்வை சொல்வதில்லையே. கதைகள் நிர்பந்திக்காதபோது பாடல்களில் நீங்கள் சொல்லும் குறைபாடு வரவே செய்யும். அரசியல் மாற்றத்தில் அத்தனையும் மாறிவிடும்.

கவிதைக்கும் பாடலுக்குமான வேறுபாடாக நீங்கள் கருதுவது எது? ஒப்பிட முடியுமா?

 கவிதையின் குரல் என்பது என் குரல். அது, சித்தாந்தத்தை உள்வாங்கிய குரல். பாடல் எனப்படுவது கதாபாத்திரத்தின் தேவைக்கான பதிவு. அதில் என் சுயமான பதிவு இருக்கிறதா?என்பதே சந்தேகம்தான். சில நேரங்களில் சில வடிவங்களையும் செய்து ஜெயிப்பதே பாடல்களின் நிலை. கவிதைகள் அப்படியில்லை. இப்படி ஒரு கவிதை எழுதிவிட்டேனே என சஞ்சலப்பட்டதில்லை. முழுக்க முழுக்க அது என் கட்டுப்பாட்டிலுள்ளது. பாடலின் நிலை வேறு. பாடலிலும் வருத்தப்படும் வகையில் என்னுடைய பதிவுகள் இல்லையென்பதை நீங்களே அறிவீர்களே.

கவிதைக்கு முரண்பட்டதான  திரைப்பாடல் குறித்து வருத்தம் உண்டா?

கவிதைக்கு முரண்பட்டதாக திரைப்பாடல்களைக் கருத வேண்டியதில்லை. இந்த ஊடக உலகத்தின் தன்மையை உணர்ந்துதான் எழுதுகிறேன். எனவே இது பற்றிய மனக்கசப்போ, விரக்தியோ வருத்தமோ எனக்கு இல்லை.

 ஆனால், ஏக்கம் இருக்கிறது. சினிமாவிற்கு வரவில்லை என்றால் தமிழக அரசு பரிசுகள்,சில நூல்கள் எழுதிய அடையாளத்தோடு போயிருக்கும். உலகமெங்கும் பரவிய பெரிய வெளிச்சம்  சினிமா என்பதன் மூலமே எனக்குக்  கிடைத்தது. என் லௌகீகத் தேவைகளின் அடிப்படை எல்லாமே பாடல்கள் மூலமாகத்தான் கிடைத்தது. நான் கவிதைகளில் எழுதியவை சத்தியமான வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால் என் பருக்கைக்கான சம்பாத்தியத்தை திரைப்பாடல்களே வழங்கின.

 நல்ல பாடலுக்கான தடைகளாக எதை உணர்கிறீர்கள் ?

சினிமாப்பாடலுக்கு சமூக நெருக்கடி இருக்கிறது. அரசியலற்ற சூழலில் மக்களுக்கானதைப் பேச முடியாமல் அவர்களின் வலியை எழுத முடியாத நிலை உள்ளது. சில இரண்டு மூன்று சூழல்களுக்கு மேல் சூழல்களேயில்லை. இது மாறவேண்டும் என்கிற ஏக்கம் எனக்குள் உண்டு. ‘ஜோக்கர்’படத்தில் தமிழக வாழ்வாதாரப் பிரச்சினைகள் பலவற்றையும் ஒரே பாடலில் சொல்லியிருக்கிறேன்.

திரைப்பாடல்  எழுத எப்படி வசப்பட்டது.? 

எனக்கு சரஸ்வதி நாக்கை நீட்டி எழுதி வைக்க வில்லை. தீவிர தேடலுடன்தான் பாட்டு எழுத வந்தேன். எதிலும் ஈடுபடும் முன் தீவிரமாக பயிற்சி எடுத்துக் கொள்வேன். அப்படித்தான் பாடல் எழுத என்னைத் தயாரித்துக் கொண்டேன்.

பாடல் ஆசிரியர்களுக்கு உரிய தகுதியாக எதைக்கூறுவீர்கள்?

பாடல் ஆசிரியர்களுக்கு சமூக அக்கறை தேவை. அரசியல் புரிதல் வேண்டும். அரசியல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், சமூக அக்கறை தேவை.  சினிமா என்பது பெரிய களம். உங்களுக்கு வரும் பந்தை நீங்கள் சரியாக அடிக்கவேண்டும். அடுத்தவர் பந்தை அடிக்க முடியாது.

 ஒரு பாடலாசிரியராக பரவசப்படுவது எப்போது?

முகமறியா நபர் நம்மைப் பற்றி, நம் கவிதைகளைப் பற்றி, நம்முடைய பாடல்களைப் பற்றி, நமக்கு பிடித்த பாடல் வரிகளைப் பற்றி விவரிக்கும் போது எழும் நெகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதனை இறுமாப்பில்லாமல்  எதிர் கொண்டு அல்லது அதற்கு இடங்கொடாமல் கவனத்துடன் கடக்கவேண்டும்.

 உங்கள் முன்னோடியாக இருக்கும் பாடலாசிரியர்கள் பற்றி?

மதுரகவி பாஸ்கரதாஸிலிருந்து கு.உமாதேவிவரை திரைப்பாடல் ஆசிரியர்களுக்கு ஒரு நீண்ட தொடர்ச்சி இருக்கிறது. சுதந்திர எழுச்சியைக் கொண்டிருந்த பாஸ்கரதாஸின் காலத்தைப் போலவே உடுமலை நாராயண கவிக்கும் கண்ணதாசனுக்கும் பகுத்தறிவுச் சிந்தனைகள் பாடுபொருளாய் அமைந்தன. நிலையாமைத் தத்துவம் மற்றும் திராவிடக் கொள்கைகளை அவர்கள் இருவரும் நீக்கமற நிறைத்தார்கள். அவர்களின் சமகாலத்தில் வாழ்ந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் மருதகாசியும் பொதுவுடமைச் சிந்தனைகளைத் திரைப்பாடலுக்கான களமாக அமைத்துக்கொண்டார்கள். 

ம.பொ.சியின் தமிழரசுக் கழகத்தைச் சேர்ந்த கு.மா.பாலசுப்ரமணியமும், கவி.கா.மு.ஷெரிப்பும் தமிழ்த்தேசியக் கருத்தியலைக் கொண்டிருந்தார்கள். ஆலங்குடி சோமு, அவினாசி மணி, கு.சா.கிருஷ்ணன், முத்துக்கூத்தன் ஆகியோரும் அக்காலத்தில் கவனிக்கப்பட வேண்டியவர்கள்.

எம்.ஜி.ஆரின் அன்புக்குப் பாத்திரமான புலவர். புலமைப்பித்தன், முத்துலிங்கம் இருவரும் அரசவைக் கவிஞர்கள் எனும் அந்தஸ்தைப் பெற்றவர்கள். இவர்களிலிருந்து தனித்தும் இணைத்தும் பார்க்கப்பட வேண்டியவர் வாலி. சந்தைக்கு ஏற்றதை சமைத்துத் தருவதில் சலிக்காதவராக இருந்த அவர், காலத்தின் அவசியத்தைப் புரிந்துகொண்டு செயல்பட்டதால் இறுதி மூச்சுவரை எழுதிக்கொண்டேயிருந்தார். எண்ணிக்கையில் அதிக திரைப்பாடல்களை எழுதியவராகவும் எல்லோருக்கும் பிடித்தவராகவும் அவர் ஆனதற்கு அவருடைய தமிழ் ஒரு காரணம் என்றால் இயல்பு மற்றொரு காரணம். புதுக்கவிதைகளின் திரட்சியால் கிடைத்தவர்கள் இருவர். ஒருவர் நா. காமராசன். மற்றொருவர் மு. மேத்தா. இவர்கள் அனைவரும் கவிஞர்களாக அறியப்பட்டு பின் பாடலாசிரியர்களானவர்கள். 

அதேபோல, இயக்குநர்களாகவும் கவனம் பெற்றுப் பாடலாசிரியர்களாகவும் அறியப்பட்ட பஞ்சு அருணாசலம், டி. ராஜேந்தர், கங்கை அமரன், எம். ஜி. வல்லபன்,  ஆபாவாணன், ஆர்.வி. உதயகுமார் ஆகியோரையும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும். 

கவிஞர்கள் பாடலாசியராக ஆவதற்கும் பாடலாசிரியர்கள் கவிஞர்கள் என்னும் வகைக்குள் வராமல் போவதற்கும் நிறைய படிநிலைகள் உண்டு. பாடல் வேறு, கவிதை வேறு என்னும் தளத்திலிருந்து பார்த்தால்தான் அது பிடிபடும். இந்த இரண்டையும் இணைக்க முயன்றவராக வைரமுத்து தென்படுகிறார். 

வைரமுத்து எவ்வகையில் தனித்துவம் பெற்றவராக இருக்கிறார்?

கொஞ்சம் சிவப்பு சிந்தனை, கொஞ்சம் கறுப்பு சிந்தனை என அவர் தன்னை ஒரு கறுப்பு சிவப்புக்காரராக முன்னிருத்திக்கொண்டவர். தமிழ் இலக்கிய அறிவை திரைப்பாடலுக்குள் சிரமப்பட்டாவது திணித்துவிடும் ஆர்வத்தை அவர் பாடல்களில் காணலாம். அவர், எளிய சொற்களுக்குள்ளேயும் கவிதையின் அழகுகளைக் கொண்டுவருபவர். திரைமொழியின் வழக்கமான கட்டுமானத்தைச் சற்றே மாற்றி அழகியல் கூறுகளால் தமிழை அலங்கரித்தவர். ஆறு தேசிய விருதுகளைத் தமிழுக்குப் பெற்றுக் கொடுத்தவர். ஒரு திரைப்பாடல் ஆசிரியனுக்குப் பொதுவெளியில் அழுத்தமான அடையாளத்தையும் அறிமுகத்தையும் கண்ணதாசனுக்குப் பிறகு ஏற்படுத்தியவர் அவர் என்றால் மிகையில்லை. 

திராவிட முன்னேற்றக் கழக மேடைகளில் அவர் தன்னைப் பிரசன்னப் படுத்திக்கொண்டாலும் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவராகத் தன்னை நிறுவியவர். இது, முந்தைய பாடலாசிரியர்கள் எவருக்கும் வாய்க்காத ஒன்று.

கண்ணதாசனைத் தொடர்ந்து ஸ்ரீதர், கே. பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, மணிவண்ணன், கே. பாக்யராஜ் போன்றோரின் ஒப்பற்ற திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றவர் அவர் ஒருவரே. அவர் காலத்தில் இளையராஜா என்னும் ஆகப்பெரும் இசை சக்தி தமிழ்பேசும் மக்களை மட்டுமல்ல உலக இசை ரசிகர்களை எல்லாம் ஆட்கொண்டிருந்தது. அவருடன் இணைந்து பணியாற்றிய அத்தனை பாடல்களிலும் தன்னையும் தன் தமிழையும் நிறுவிக்கொள்ள அவர் பட்டிருக்கும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. எம்.எஸ்.வி காலத்துத் திரைப்பாடலில் தமிழ் அதிகமாகவும் இசை கொஞ்சமாகவும் இருந்தது. இளையராஜா காலத்துப் பாடல்களில் இசை மிகுதியாகவும் தமிழ் அதைவிடச் சற்று குறைவாகவுமே இருந்தது. இழுக்குடை பாட்டுக்கு இசை நன்று என்னும் சிந்தையுடன் செயல்பட்டவர் இளையராஜா.

வைரமுத்து -இளையராஜா கூட்டணி கூட பிரிந்து விட்டதே ?

அன்று வெளிவந்த அநேக திரைப்படங்களுக்கு அவர் ஒருவரே இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டார். ஒரே நேரத்தில் பல படங்களுக்கு இசையமைக்க வேண்டியிருந்ததால் அவரால்  பாட்டுக்கு மெட்டு என்னும் பழைய மரபைத் தொடர முடியவில்லை. மெட்டுக்கு மட்டுமே பாட்டு என்றானது. ஆற அமர பாட்டெழுதி இசையமைக்கும் சூழல் இல்லாமல் போனது. அதன் காரணமாகப் பல கவிஞர்கள் தங்கள் சுதந்திரத்தையும் ஏன், சிலசமயம் சுயமரியாதையையும்கூட  இழக்க நேர்ந்தது. அளவுக்கு மீறி இழுத்தால் நாண் (நான்) அறுபட்டுவிடும் என்பதைப் போல ஒரு கட்டத்தில் வைரமுத்து இளையராஜாவோடு முரண்படுகிறார். கூட்டணி முறிந்துவிடுகிறது. அந்த முறிவால் இழப்புக்கு உள்ளான வைரமுத்து இன்னொருவருக்காகக் காத்திருக்கிறார். அப்போது ஏ.ஆர். ரகுமான் வருகிறார். முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதைப் பெறுகிறார். இசைப் புயல் என்று எல்லோராலும் கொண்டாடப்படுகிறார்.

அதன் மூலம் வைரமுத்துவிற்கு மீள் வெளிச்சம் கிடைக்கிறது. ரகுமானின் இசை வெற்றிக்கு மிகமிக நெருக்கமானவராக வைரமுத்து பார்க்கப்படுகிறார். இன்னும் சொல்லப்போனால் தன்னுடைய தனித்த ஆளுமையை வைரமுத்து வெளிப்படுத்திய காலமும் அதுவே. இரண்டு பெரும் இசை ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைக் காலம் வைரமுத்துக்கு மட்டுமே வழங்கியது. ரகுமானின் வருகைக்கு முன்பிருந்த காலங்களில் பழநிபாரதி, அறிவுமதி, வாசன், பிறைசூடன் ஆகியோர் கவனம் பெற்றிருந்தார்கள்.

அரசியல் கருத்துகளை மக்களின் பொதுவெளிக்குக் கொண்டுவர இன்றைக்கு  திரைத்துறை அஞ்சுகிறதே?

தமிழ்நாட்டு அரசியலையும் தமிழ் சினிமாவையும் பிரித்துப் பார்க்க முடியாது. ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என  எம்.ஜி.ஆர் பாடுவதற்கான நியாயத்தைக் கொண்டிருந்த திரைப்பாடலின் இன்றைய நிலை நீங்கள் அறியாததல்ல. பட்டுக்கோட்டையாரின் எழுத்துகளில் வெளிப்பட்ட இடதுசாரிக் கொள்கைகள், திராவிட இயக்கத்தைச் சேர்ந்த மக்கள் திலகத்திற்குப் பயன்பட்டன, பொருந்தின. அல்லது அதைப் பயன்படுத்திக்கொள்வதில் எம்.ஜி.ஆருக்கு எந்த மனத்தடையும் இருக்கவில்லை. பாடலாசிரியனின் கொள்கை சார்ந்த பதிவுகளுக்கு அன்றைய பிரபலமான இயக்குநர்களும் இடமளித்திருக்கிறார்கள். அரசியல் கருத்துகளை மக்களின் பொதுவெளிக்குக் கொண்டுவர அன்றைக்கு இருந்த திரைத்துறையும் தயங்கவில்லை. ஆனால், எங்கள் காலத்தில் அப்படியான சாதகங்கள் அறவே இல்லாமல் போயின. அரசியல் கட்சிகள் தேர்தலை மட்டுமே குறியாகக் கொண்டுவிட்டன. எந்த அரசியல் கட்சி மேடைகளிலும் எங்களுக்கான இடம் வழங்கப்படவில்லை. சிவில் சமூகம், அரசியலை சாக்கடையாகப் பார்க்கத் தொடங்கிவிட்ட சூழலில் எங்கள் கைகளும் கட்டப்பட்டன என்பது கவனத்துக்குரியது.

தீவிர இலக்கிய வெளிக்குள் நாங்களும் தீண்டத்தகாதவர்களாகவே நடத்தப்படுகிறோம். இச்சூழலில் போக்கிடம் ஏதுமற்று புறம்போக்கில் வீடுகட்டும் நடைபாதைவாசிகளைப் போல நாங்களிருக்கிறோம். சுற்றுச்சூழல் மாசடைந்துவிட்டது. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு நிலத்தை, நீரை, காற்றை தாரை வார்த்துவிட்டு மத்திய மாநில அரசுகள் இலவசங்களை நம்பி பிழைத்துக்கொண்டிருக்கின்றன. சுதந்திரப் போராட்டம், பகுத்தறிவுச் சிந்தனை, பொதுவுடமை வேட்கை, தமிழ்த் தேசியப் பார்வை என எதையும் தமிழ்த் திரைப்படங்கள் பேசுவதில்லை. தலித்தியம், பெண்ணியம்கூட பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன.  ஈழப் போரை இங்குள்ள திரிபுவாதிகள் கலை இலக்கிய வட்டத்துக்குள் கொண்டுவரக் கூடாதென்பதில் குறியாயிருக்கிறார்கள். சமூக எழுச்சியுமில்லை. சார்ந்து நிற்கக் கொள்கையுமில்லை. ஆனாலும், சத்தான பாடல்கள் இல்லையென்னும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

அரசியல் பின்புலம் இல்லாத இக்காலம் ஒரு சோதனையான இருண்ட காலமா  ?

அரசியல் இல்லாத காலத்தில் படைப்புகளில் திரட்சியும் திண்மையும் இருக்க வாய்ப்பில்லை. திரைப்பாடலைப் பொறுத்தவரை அது சூழலின் கணத்தில் சூல் கொள்வது. காட்சிகளுக்குப் பின்னே சமூக அரசியல் இருந்த வரை பாடல்களில் உயிர் இருந்தது. கதாநாயகனின் செயல்பாடுகள் நாட்டுக்கானதாகவும் நல்ல நோக்கங்களுக்கானதாகவும் இருந்த வரை மக்களும் விரும்பி வந்திருக்கிறார்கள். ஆனால், நாங்கள் திரைத்துறைக்குள் நுழைந்த காலத்தில் திராவிட இயக்கங்கள் அதிகாரங்களைக் கைப்பற்றும் ஆவலை மட்டுமே கொண்டிருந்தன. மத்தியில் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதொன்றே கொள்கையானது. கொள்கை லாபத்தைவிட கொள்ளை லாபத்தைக் குறிக்கோள்களாகக் கொண்டன. பொதுவுடமை இயக்கங்கள் மக்கள் செல்வாக்கை முற்றிலுமாகத் தவறவிட்டிருந்தன.

இன்றைய பாடுபொருளின் வட்டம் சுருங்கிவிட்டதே?

கட்சி அரசியலிலும் சமூக அரசியலிலும் ஏற்பட்ட தேக்க நிலையில் எங்கள் எழுத்துகளில் கவிதை உத்திகள் மட்டுமே எஞ்சியிருந்தன. உலகமயமாக்கல், நகரமயமாக்கல், நுகர்வுக் கலாச்சாரம் என்று சகல திசையிலும் படைப்பூக்கத்தை இழந்த அபலைகளாக நாங்களிருக்கிறோம். ஆனாலும், எங்கள் உழைப்பால் முடிந்தவரை முந்தைய தலைமுறையைத் தாண்டியிருக்கிறோம். 

உங்களுக்கு ஆத்ம திருப்தி தந்த பாடல்கள்?

எதை எழுதுவது? எப்படி எழுதுவது? என்ன எழுதுவது?  யாருக்கு எழுதுவது? என கடந்துவிட்ட என்னுடைய பதினைந்தாண்டுகளைக் கணக்குப் பார்க்கிறேன். தொகுத்து வைக்கும் அளவுக்கு என் பாடல்களில் சுரத்து இருக்கிறதா? வேகமான தாளத்திற்கு விருப்பமான வார்த்தைகளை இட்டு நிரப்பியவை பாடலாகுமா? காலத்தையும் கதைச் சூழலையும் சொல்லி, செய்யாத செயலுக்கு சிறப்பு தேடுகிறேனா? எனப் பலவாறாக யோசிக்கிறேன். நானென்ன செய்வது என்று தப்பிப்பதைவிட நான் என்ன செய்தேன் எனக் கணக்கு வைப்பது கட்டாயம். வரவாகியிருக்கிறேனா? செலவாகியிருக்கிறேனா? என்பதைக் காலம் சொல்லும். சொல்லாமல் போனாலும் துக்கமில்லை. விரும்பிய பணியைச் செய்திருக்கிறேன். விருப்பத்தோடு என் வேர்வையும் இப்பணியில் கலந்திருக்கிறது அவ்வளவே. 

உங்கள் இலக்கிய அறிவு சினிமாவில் செல்லுபடியானதா?

தமிழ் இலக்கிய அறிவோ கவிதைகளின் நுட்ப திட்பங்களோ என் காலத்தில் செல்லுபடியாகவில்லை. இரைச்சல்,  கேளிக்கை என்னும் குறுகிய வட்டத்துக்குள் தமிழ்சினிமா குதிரை ஓட்டியது. பாரதிராஜாவுக்குப் பிறகு தமிழ்சினிமாவை வேறு தளத்திற்கு இட்டுப்போக ஒருவரும் வரவே இல்லை. தொழில் நுட்பத்தில் சிறந்தவர்கள், வியாபாரத்தில் உயர்ந்தவர்கள், பிரமாண்டத்தில் மிரட்டுபவர்கள் வந்திருக்கிறார்கள். மண்ணையும் மக்களையும் அறிந்த புரிந்த ஒருவர்கூட வரவில்லை. அவ்வப்போது தூரத்தில் ஒருவர் வருவதுபோல் தோன்றும். ஆனால், வரமாட்டார். என்ன கொடுமையென்றால் அதீத ஆவேசத்தோடு முதல் இரண்டு படங்களில் தன்னைப் பறைசாற்றிக்கொள்ள முனையும் ஒருவரை வியாபார சினிமா முட்டித்தள்ளி மூன்றாவது படத்தில் மூச்சுவாங்க வைத்துவிடும். பாலாவையும் பாலாஜி சக்திவேலையும் கூட இந்தப் படுபாதக வியாபாரம் பாடாய்ப் படுத்தியெடுக்கிறது. களமே இல்லாமல் அவர்களும் எவ்வளவு காலத்திற்குத்தான் கர்ணமடிப்பார்கள்?

மதநல்லிணக்கம், ஊழல், கறுப்புப் பணம், ஈழப் பிரச்சினை இவற்றைத் தவிர்த்து, சொல்லுதற்கான களங்களே இல்லை என்பது போன்ற தோற்றத்தைத் தமிழ் சினிமா ஏற்படுத்தி வைத்திருக்கிறது.  

காதல் , துய்ப்புக்கலாச்சாரம்,வன்முறை இவைதான் தமிழ்ப்படங்கள் என்றாகிவிட்டனவே?

பாடல் எழுத இரண்டு மூன்று சூழல்களே திரும்பத்திரும்ப வருகின்றன.

குடும்பக் கதைகள் அறவே இல்லாமல் போயின. குடும்பங்களே சிதையுண்ட பின் குடும்பக் கதைகளுக்கான சாத்தியங்களை எதிர்பார்ப்பது சரியல்ல. ஆக, விரிந்த தளத்தில் இயங்கிய சினிமா வெறும் தொழில் நுட்ப சங்கதி என்றாகிவிட்டது.

மூன்றாம் உலக நாடுகளில் வெளிவரும் சினிமாவை அடியொற்றி இங்கேயும் படங்களை எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். ‘டார்க் ஃபிலிம்’ என்கிறார்கள். ‘டர்டி ஃபிலிம் ‘ என்கிறார்கள். அதெல்லாம் சரி, ‘தமிழ் ஃபிலிம்’ எங்கே என்றால் தலையைச் சொறிகிறார்கள்.

அத்தி பூத்தாற்போல் அரிய படங்கள் வருகின்றன. தேசிய விருதைக் குறிவைத்துப் படமெடுப்பது சமீபத்தில் பரவியிருக்கும் வியாதி. பெரும் திரை நிறுவனங்கள் பலவும் படமெடுப்பதை நிறுத்திக்கொண்டன. திரையரங்குகள் கல்யாண மண்டபங்களாகிவிட்டன. கஷ்ட காலத்தில் பிறந்த குழந்தையைப் போல யாதொரு துணையுமில்லாமல் யாருடைய ஆதரவுமில்லாமல் இன்றைய தமிழ்த் திரையுலகம் தவித்துக்கொண்டிருக்கிறது. உப்புச்சப்பில்லாத கதைகள். காதல் ஒன்றே பிரதானம் என எடுக்கப்படும் அத்தனை படங்களும் இளைஞர்களையே குறிவைக்கின்றன. வயது முறுக்கில் செய்யும் சேட்டைகளே கதாநாயகனின் தன்மை அல்லது செயல். சூதும் வாதும் இன்றைய தமிழ் சினிமாவைக் கவ்விக்கொண்டு விட மறுக்கின்றன. இந்தக் கேடுகளைப்  பொறுக்கமாட்டாத மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி விட்டார்கள். 

தொலைக்காட்சிகளின் பெருக்கத்தால் நெடுந்தொடர்களே போதும் என்று திரையரங்குகளைப் புறக்கணிக்கிறார்கள். இந்த நெருக்கடி நிலைக்குள் நானும் என் பாடலும் என்ன அவஸ்தைபட்டிருக்கிறோம் என்பது தனிக்கதை. வணிக சினிமாவே வாழ்விழந்து நின்ற கோலத்தில் எனக்கான வாய்ப்புகளையும் வசதிகளையும் பெருக்கிக்கொள்ள பெரும்பாடு பட்டிருக்கிறேன். தீவிர தமிழ்த்தேடலையும்  தீவிர இலக்கியப் பயிற்சியையும் திரைத்துறை நிராகரித்த பொழுதெல்லாம் நெக்குருகி அழுதிருக்கிறேன். ‘ஏன் இந்தப் பிழைப்பு?’ என்று அழுத வெறுமை சூழ்ந்த பொழுதுகள் அநேகம். கண்ணதாசனின் அரசியலோ வைரமுத்துவின் அழகியலோகூட எனக்கு வாய்க்கவில்லை. ஆனாலும், தமிழை நானும் தமிழ் என்னையும் கைவிடவில்லை.

பாடல்களே படத்தில் வேண்டாம் என்கிற குரல் ஒலிக்கத்தொடங்கியுள்ளதே..?

தமிழ் மரபு என்பது இசை மரபோடு இணைந்ததுதான். வாழ்வில் எல்லா மட்டத்திலும் பாடலுக்கான முக்கியத்துவத்தைத் தமிழ்ச்சமூகம் கொண்டிருக்கிறது. இதைப் புரிந்துகொள்ளாமல் அல்லது புரிந்துகொள்ள மனமில்லாமல் சிலர் பாடல்களே இல்லாத படங்களை எடுக்கத் துணிகிறார்கள். நல்ல திரைப்படத்திற்குப் பாடலே தேவையில்லை என்று கூவுகிறார்கள். உண்மையில், நல்ல திரைப்படத்திற்குப் பாடலின் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அது தமிழ்த் திரைப்படமாக இருக்குமா? என்பது சந்தேகம். தாலாட்டில் இருந்து ஒப்பாரி வரை முழுக்கவும் பாடலோடு பின்னிப் பிணைந்த ஒரு சமூகத்தைப் பாடல் இல்லாமல் காட்ட நினைப்பது துடுப்பில்லாமல் படகில் செல்வதற்கு ஒப்பானது. சடங்கு சம்பிரதாயங்களில் பாடல் இடம்பெறுகிறது என்பதால் பாடலையும் சடங்காக சம்பிரதாயமாகப் பார்ப்பது அறிவீனம்.

என் திரைப்பாடல் பயணமென்பது இங்கிருந்துதான் தொடங்குகிறது. மரபு, புதிது என்ற வகைப்பாட்டைத் தாண்டி நவீனம் என்ற பதத்தை இலக்கிய உலகம் சொல்லத் தொடங்கியதும் நான் திரைத்துறைக்குப் பாடல் எழுத வந்ததும் ஏககாலத்தில் நிகழ்ந்தது. காலத்தின் பிரதிபலிப்பாக வார்த்தை அழகுகளை மட்டுமே நானும் வார்த்திருக்கிறேன். அரசியல் எழுச்சிகளைக் காணாத தலைமுறையில் படைப்பாளனுக்கும் படைப்புக்கும் என்ன கதி நேருமோ அதுதான் எனக்கும் என் படைப்புகளுக்கும் நேர்ந்திருக்கிறது. இலக்கணத் தமிழை முற்றிலுமாக விடுத்து இயல்பு தமிழில் பாடல் இயற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கிறேன். எப்போதாவது கரு. பழனியப்பனை, சேரனைப் போன்ற இயக்குநர்கள் கிடைக்கையில் அந்தாதிகளையும், அடுக்குத் தொடர்களையும், உவமைத் தொடைகளையும் உருவாக்கியிருக்கிறேன். 

வெற்றிமாறனுக்கு தமிழ் ராப்பை யோகி.பி.யுடன் இணைந்து திரைப்பாடலின் புதுவகைக்கு பலம் சேர்த்திருக்கிறேன். சமுத்திரக்கனியிடம் வாழ்வையும் ஆரோக்கியதாஸிடம் தேர்தல் அரசியலையும் சொல்லியிருக்கிறேன். தரணி, என். லிங்குசாமி, ஏ.ஆர். முருகதாஸ், லெனின்பாரதி, சுப்ரமணியம்சிவா, அன்பழகன், சசிக்குமார், பாண்டிராஜ், எஸ். எழில், பொன்ராம், என். ராகவன், ஆர். பன்னீர் செல்வம், எஸ்.ஆர். பிரபாகரன், ஆர். கண்ணன், சுசீந்திரன், ராஜசேகர், முத்தையா, கோவிந்தமூர்த்தி, ஆர். பாலகிருஷ்ணன், ஸ்டாலின் ராமலிங்கம் என நீளும் பட்டியலில் என்னுடைய இருப்பைத் தக்கவைக்க எவ்வளவோ முயன்றிருக்கிறேன்.

இந்நெடிய பயணத்தில் கும்கி, குக்கூ ஆகிய திரைப்படங்களின்  வருகை, என் திரைப்பாடல் மொழியை மாற்றியமைத்தது. தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகளை வாங்கவும் காரணமானது. அள்ளி அள்ளிக் கொடுக்க ஆசையிருந்தும் வாங்கிக் கொள்ள யாரும் இல்லாத நிலையில் என் திரைத் தமிழ் ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

திரைப்பாடலில் கவிதை சாத்தியமா?  பிரபல  கவிஞர்களே சினிமாவில் எழுதத் திணறுவது ஏன்?

திரைப்பாடலில் கவிதை சாத்தியப்படும். நவீன கவிஞர்கள் எழுத வந்திருக்கிறார்கள் மொழியை நவீனமாகக் கையாள நினைக்கிறார்கள். ஆனால் அது பாடலுக்குள் நிற்காது. பாடல் என்பது பாடப்படுவது. பாடப் படுவதற்கான வாக்கிய அமைப்பு முக்கியம். ஏழு ஸ்வரங்களுக்குள் கொடுக்கும் சந்தங்களுக்கு குறில் நெடில், ஒற்று என்கிற மூன்றே ஓசைகளுக்குள் திரைப் பாடல் எழுதப்பட வேண்டும். இதற்கு முடியாவிட்டால் திணற வேண்டியிருக்கும்.

திரைப்பாடலில் எது  உங்கள் பாணி?

நேரடித் தன்மையில் எளிய சொற்கள் மூலம் நானறிந்த உலகையும் தமிழையும் எழுதியிருக்கிறேன். வியாபார சினிமாவின் தேவைக்காகச் சில சமரசங்களையும் செய்திருக்கிறேன். கடந்த பதினைந்து ஆண்டுகளில் வெளிவந்த பல முக்கியமான திரைப்படங்களில் என் பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்னால் நான் கற்றிருந்த தமிழை விடக் கூடுதலாகத் தற்போது கற்றிருக்கிறேன். சந்தங்களுக்கு வேகமாக எழுதும் பயிற்சியும் சூழலை உள்வாங்கி வெளிப்படுத்தும் திறனும் அதிகரித்துள்ளன. மக்களின் வழக்கு சொல்லாடல்களைத் திரைப்பாடலின்  மொழியாகவும் வழியாகவும் மாற்றியிருக்கிறேன்.  நாட்டார் பாடல்களில் உள்ள தெறிப்புகளைத் துள்ளலிசைப் பாடல்களிலும் சாஸ்திரிய இசை வடிவத்திற்குச் செந்தமிழையும் பயன்படுத்துவதைப் பழக்கப்படுத்தியிருக்கிறேன். இந்த முயற்சிகளுக்கு எல்லாம் உறுதுணை புரிந்த இசையமைப்பாளர் டி.இமான் என்றென்றும் என் நன்றிக்குரியவர். சமீபத்திய வரவுகளில் அனிருத், சந்தோஷ் நாராயணன், ஷான் ரோல்டன், கே, ரகுநந்தன், சத்யா, கண்ணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஒரு பாடலாசிரியரின்  வளர்ச்சிக்கு யாரோ ஒர் இசையமைப்பாளரின்  ஆதரவும் அணுக்கமும் தேவை என்று கருதலாமா? அவ்வகையில் உங்களுக்கு இமான் கிடைத்துள்ளார் என்று கூறலாமா? 

நிச்சயமாக தேவைதான். பாடலாசிரியர் ஒருவர் பலருக்கும் பாடல்கள் எழுதினாலும் குறிப்பிட்ட ஒருவருடன் நல்ல புரிதல் ஏற்பட்டு நெருக்கம் ஏற்பட்டு விடும். இந்த பரஸ்பர புரிதலால் ,அன்பால் ,நெருக்கத்தால் பல நல்ல பாடல்கள் உருவாகும். ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டும்  ஒருவரால் ஒருவர் தூண்டப் பட்டும் பணியாற்றி   பாடலுக்குச் செழுமை சேர்ப்பார்கள். இவ்வகையில் நல்ல புரிதல் கொண்ட கூட்டணியாக எம்.எஸ்.விஸ்வநாதன்  – கண்ணதாசன் கூட்டணி  , இளையராஜா  மற்றும் ஏ.ஆர்.ரகுமான் – வைரமுத்து கூட்டணி , யுவன் ஷங்கர் ராஜா – நா.முத்துக்குமார் கூட்டணி .ஹாரிஸ் ஜெயராஜ் – தாமரை கூட்டணி வரை  இப்படி நிறையவே கூறலாம்.

அதுபோலவே இமானுக்கும் எனக்குமான நட்பையும் குறிப்பிடலாம்.  இருவருமே சினிமாவில் நீண்ட காலமாகப்  போராடியவர்கள் ஒரு நல்ல வெற்றிக்காகக் காத்திருந்தவர்கள்  புதியவை தேடுபவர்கள் என்கிற வகையில்  நாங்கள்  இருவரும்  எண்ணங்களால் ஒத்திருக்கிறோம். அதனால் எங்களுக்குள் நல்ல நட்பும் அன்பும் புரிதலும் உள்ளன. இணைந்து பணியாற்றும் போது சுலபமாக இருக்கிறது.

இந்த நேரத்தில் எங்களை இணைத்து வைத்த  இயக்குநர்  பிரபு சாலமனை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்.

உங்களுக்குள்ள ஒரே ஆறுதல் என்ன?

முழுக்க முழுக்க தொழில்நுட்பமயமான சினிமாவில் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத எவரும் பாடலாசிரியராகத் தொடர முடியாது. வேற்று மொழிக்காரர்கள் இயக்கலாம், நடிக்கலாம், ஒளிப்பதிவு செய்யலாம், நடனம் அமைக்கலாம், பாடல் பாடலாம், இன்னபிறவற்றில் ஈடுபடலாம் என்றாலும், தமிழ் சினிமாவின் அசலான முகத்தைக் காட்டக் கூடியவர்கள் பாடலாசிரியர்கள் மட்டுமே. மண்ணையும் மக்களையும் தொடர்ந்து கவனித்து வருபவர்கள் அவர்களேயாவர்

‘இதுவரை நான்’ என்று நீங்கள் உணர்வதென்ன?

பல சமரசங்களையும் பலவிதமான சமர்களையும் கடந்தே இத்துறையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். சராசரியாக வருடத்திற்கு எண்பது பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறேன்.

இரண்டாவது பாடலுக்காக ஏங்கிக்கொண்டிருந்த என்னைத் தமிழ்த் திரையுலகம் ஆயிரம் பாடலை தாண்ட அனுமதித்திருக்கிறது.  ஓர் எழுத்து ஊழியனாக எனக்கிடப்பட்ட பணியை என்னால் முடிந்த அளவுக்குச் செய்திருக்கிறேன். காலம், சூழல், இசை, கதை இவற்றைக் கடந்தும் சில பதிவுகளைச் செய்திருக்கிறேன். அடுத்தடுத்த வாய்ப்புகளில் இன்னும் செறிவான பாடல்கள் வெளிப்படும் என நம்பலாம். 

உங்கள் பாடல்களின் வெற்றியில் வேறு யாருக்குப் பங்கு உண்டு?

.ஒரு பாடலின் வெற்றியென்பது வார்த்தைகளாலும் வாத்தியக் கருவிகளாலும் மட்டுமே நிகழுவதில்லை. குரல், ஜீவனுடைய குரல்களால்தான் ஒவ்வொரு பாடலும் ஆண்டுகள் பலகடந்து அடிநெஞ்சில் வாழ்கிறது. அத்தகைய குரலுக்குச் சொந்தக்காரர்கள் அத்தனை பேருக்கும் என் வாழ்நாள் வணக்கத்தைச் சொல்லிக்கொள்கிறேன். 

இசைமேதை பாலமுரளி கிருஷ்ணாவிலிருந்து நேற்று பாடவந்த ஜெயமூர்த்திவரை எல்லோரும் என் பாடலை அழகு செய்திருக்கிறார்கள். ஆஷா போன்ஸ்லேவிலிருந்து மகிழினிமணிமாறன் வரையுள்ள அத்தனை பெண் பாடகர்களும் என் உணர்வுத் தமிழுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். என்னால் எழுதப்பட்ட  இந்தப் பாடல்களிலுள்ள வரிகளும் கருத்துகளும் சம்பந்தப்பட்ட இயக்குநர்களால் தேர்வு செய்யப்பட்டவை. இதிலுள்ள சிறப்புகள் அனைத்தும் அவர்களின் ரசனை மட்டத்தால் விளைந்தவை. நேர்த்தியும் வெற்றியும்கூட அவர்கள் நம்பிக்கையால் கிடைத்ததுதான். குறைகளும் அவர்களால்தான் என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள மாட்டேன். 

திரையிசைகுறித்த உங்கள் ஆதங்கம்,அல்லது ஏக்கம்?

திரையிசை குறித்துத் தொடர்ந்து எழுதிவரும் ஷாஜி போன்றோர் திரைப்பாடலின் ஆதார சுருதியாக விளங்கும் பாடல்வரிகளைப் பற்றி எங்கேயும் குறிப்பிடுவதில்லை. பாடல்வரிகள் இசையின் தன்மையைக் கெடுத்துவிடுவதாகக்கூட குறைபட்டுக்கொள்கிறார்கள். உண்மை அதுவே ஆயினும், ஒரு துறை சார்ந்த பங்களிப்பாளர்களை முற்றாக நிராகரிப்பது ஏற்புடையதல்ல.

திரைப்பாடல்கள்குறித்து உங்களால் புரிந்து கொள்ளமுடியாத முரண் என்ன?

தமிழ்த் திரையிசை தமிழர்களின் வாழ்வில் பெரும் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. காணுமிடமெல்லாம் பாடல்கள் கேட்கப்படுகின்றன. கைப்பேசியில் அழைப்பு மணியாகத் திரைப்பாடலை வைத்திருக்கவே பலரும் விரும்புகிறார்கள். வீட்டில், பொதுவெளியில், வேலைத் தளத்தில் என எங்கேயும் பாடல்களே நிறைந்திருக்கின்றன. உடல் மற்றும் மனச் சோர்விற்கான உடனடி மருந்தாகவும் பாடல்களே இருந்துவருகின்றன. ரசக் குறைவானவை திரைப்பாடல்கள் எனத் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வந்தாலும் திரைப்பாடல்கள் கட்டுக்கடங்காத வெள்ளமாகப் பாய்ந்த வண்ணமிருக்கின்றன. 

வருடத்திற்கு நூற்றி ஐம்பது திரைப்படங்கள் வெளிவருகின்றன. ஒரு படத்தில் ஐந்து பாடல். ஆக, சராசரி தொள்ளாயிரம் பாடல்கள் ஒரு வருடத்தில் வெளிவருகின்றன. பண்பலையிலும் இணையத்திலும் இப்பாடல்கள் இலவசமாக இசைக்கப்படுகின்றன. இதில், எத்தனை பாடல் தரமானவை தரமில்லாதவை என ரசிகர்களே தீர்மானிக்கிறார்கள். எழுதியவர் பெரிய பாடலாசிரியரா தேசிய விருது பெற்றவரா என்றெல்லாம் அவர்கள் பார்ப்பதில்லை. இலக்கணம் வார்ந்திருக்கிறதா வழுவி இருக்கிறதா என்றெல்லாம் கவனிப்பதில்லை. தங்களுக்கு விருப்பமான பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். விரும்பமில்லாதவற்றை எந்தத் தடையும் இல்லாமல் கடந்துபோகிறார்கள். அவர்களுக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? என்பதை அவர்களே முன்மொழியவும் வழிமொழியவும் செய்கிறார்கள். என் பாடல்களில் எத்தனையை ஏற்றார்கள் எத்தனையைக் கடந்து போனார்கள் என்பதை நானறியேன்.

உங்கள் பாடலின் தரம் பற்றி உங்கள் கருத்து?

எழுத்தை முழு நேரத் தொழிலாக வரித்துக்கொண்ட ஒருவன், தன் இருப்பையும் வாழ்வையும் தேடிக்கொள்ளப் பயன்பட்ட  இப்பாடல்களில் சில காற்றில் கரைந்திருக்கலாம். சில கவனிக்கப்படாமல் போயிருக்கலாம். சில பணம் ஈட்டுவதற்காகச் செய்த பாசாங்காகப் பார்க்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவை அத்தனையிலும் ஓர் ஆன்மாவின் தவிப்பு அடங்கியிருக்கிறது. அப்பழுக்கு இல்லாமல் என் கடனை நான் அடைத்திருக்கிறேன். எல்லா விமர்சனங்களையும் எல்லாவிதமான நெருக்கடிகளையும் எதிர்கொண்டிருக்கிறேன் என்றாலும், இப்போது எந்தவித மனச்சோர்வும் எனக்கில்லை. 

எழுதி வெளியிட்ட  20 நூல்களில் ,தொகுப்புகளில்  உங்களைக் கவர்ந்தது எது 

மனப்பத்தாயம்  பிடிக்கும். முன்தயாரிப்பில்லாத காலத்தில் வந்த ‘மனப்பந்தாயம்’ மலர் மலர்வது போன்ற அனுபவம் .அந்த முதல் தொகுப்பே தமிழக அரசு விருது பெற்றது. அடுத்து வந்த ‘பஞ்சாரம்’ தமிழக அரசு விருது மட்டுமல்ல, திருப்பூர் தமிழ்ச் சங்கவிருது , கோவை பாரதியார் பல்கலைக்கழக விருது,ஐந்தமிழ் விருது ,குறள்பீட விருது ,ஸ்டேட் பேங்க் விருது எனப் பல விருதுகள்  பெற்றது. 

பின்வந்த நொண்டிக்காவடி, தெப்பக்கட்டை, தெருவாசகம், ஒரு மரத்துக்கள்,நடைவண்டிநாட்கள், முனியாண்டி விலாஸ்  போன்றவை கவிதை தொகுப்புகள் ., கண்ணாடிமுன், அதாவது ,நேற்றைய காற்று, நடுக்கடல் தனிக்கப்பல், வீட்டுக்கு வெளியே வெவ்வேறு சுவர்கள், நானொருவன் மட்டிலும் , பக்கத்துமேசைபோன்றவை கட்டுரைத் தொகுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித மகிழ்ச்சி. குறிப்பாக ‘மராமத்து’ பரவலாக அறியப்பட்டு பேசப்பட்ட தொகுப்பாக எனக்குப் பிடிக்கும்.  

எழுத்தே ஓர் ஆயுதம்தான் என்றாலும், ‘படைப்பாளிகளும் களத்தில் இறங்கிப் போராட வேண்டும்’ என்கிற குரல்கள் ஒலிக்கின்றனவே?

படைப்பாளிகளும் களத்தில் இறங்கிப் போராடவேண்டிய அவசியம் உள்ளது. இன்குலாப்பையும், தணிகைச்செல்வனையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். அவர்கள் மக்களோடு மக்களாகக் களத்தில் நின்ற போராளிகள். ஈழத்தில் காசி ஆனந்தன்,புதுவை இரத்தினதுரை போன்றோரும் களப்போராளிகள்தான். படைப்பாளிகளும் களப்பணி ஆற்றவேண்டும்தான். மக்களை தவிர்த்த கலையோ இலக்கியமோ புறக்கணிக்கப்படும். களமும் போராட்டமும் அப்படியே. காலத்தை ஒட்டி எழுதவும் வாழவும் வேண்டுமானால் களத்தில் இறங்காமல் இருந்தால் எப்படி?

நிறைவாக சொல்ல விரும்புவது ஏதாவது …?

கால ஓட்டத்திற்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக்கொண்ட எனது பாடல்களில் எங்கேனும் ஓர் உண்மை ஒளி தென்பட்டால் அதுவே நான். அரசியல் தெளிவற்ற ஆன்மிக வெளியற்ற ஒரு துயரமான காலத்தின் பதிவாக இப்பாடல்கள் அமைந்திருக்கின்றன. வறுமையிலிருந்து மீள எழுத்தை நம்பிய ஒருவனின் சமூக சாட்சியாக இப்பாடல்கள் பார்க்கப்-படவேண்டும் என்பதே என்னுடைய அவா. ஒரேயொரு வேண்டுகோளை மட்டுமே இத்தருணத்தில் உங்களிடம் வைக்கிறேன். நம்புங்கள். என்றேனும் ஒருநாள், ஒரு நல்ல பாடலை உங்களுக்காக நானும் எழுதுவேன்.

-அருள்