இந்த சினிமாத்துறை யார்யாரையோ தனக்குள் ஈர்த்து இருக்கிறது. விமானம் ஓட்டும் பைலட் முதல் தியேட்டரில் டிக்கெட் கொடுப்பவர் வரை.ஈர்த்து இருக்கிறது. சினிமாப் படப்பிடிப்பில் லைட்மேனாக இருந்த ஒருவரின் மகன் இப்போது இயக்குநராகி இருக்கிறார். அவர் பெயர் நிமேஷ் வர்ஷன். அவர் இயக்கிய படமான ‘திறந்திடு சீசே’, ,தொழில்நுட்ப ரீதியாகவும் நல்ல கருத்தை சொன்ன நோக்கத்திலும் ஊடக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இனி நிமேஷ் வர்ஷனுடன் பேசலாமா?
தன் முன்கதையைப் பற்றி பேசத் தொடங்கியவர்.
” என் அப்பா ஒரு லைட்மேன். அப்பா மட்டுமல்ல என் தாத்தா கூட லைட்மேன்தான்.அப்பா பெயர் மதுரை.அவருக்கு சினிமாமீது ஒரு கனவு இருந்தது. ஆனால் கடைசிவரை லைட் மேனாகவே இருந்து இறந்து போனார்.அப்பா ஜெமினி லேபில் லைட்மேனாக இருந்தார். ஒரு கட்டத்தில் ஜெமினிலேப்
மூடப்பட்டு விட்டது. அவருக்கு வேலையும் போய்விட்டது. அவர் தன் அனுபவங்களை எல்லாம் என்னிடம் கூறுவார்.அதனால் எனக்கு சினிமா மீது ஆர்வம் வந்தது.
நான் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.ஏ.முடித்துள்ளேன். இருந்தாலும் பெரிதும் அப்பாவால் கவரப்பட்டேன்.அப்பா நிறைய படங்களுக்கு வேலை பார்த்திருப்பார். சினிமா பற்றி நிறைய என்னிடம் கூறியிருக்கிறார்.அதனால் எனக்கும் சினிமா மீது ஆர்வம் வந்தது. பலதரப்பட்ட படங்கள் பார்ப்பேன். நிறைய கற்றுக் கொண்டேன். இயக்குநர் பத்மாமகனிடம் உதவி இயக்குநராகப் வேலை பார்த்தேன்.
ஷங்கர் சாரிடம் ‘எந்திரனி’ல் சிலநாட்கள் வேலை பார்த்தேன்.அதற்குள் இயக்க படவாய்ப்பு வந்தது. வெளியே வந்து விட்டேன். எனக்கு சினிமாபற்றிய புரிதலும் நம்பிக்கையும் வந்ததும் வெளியே வந்து வாய்ப்பு தேட ஆரம்பித்து விட்டேன்.” என்றவர் தன் சினிமா கனவைப் புரிந்து கொண்டு குடும்பம் ஆதரவு தந்ததை பெருமையுடன் கூறுகிறார்.
” என் கனவைப் புரிந்து கொண்டு 2 அக்காவும் அண்ணனும் எனக்கு தைரியம் கொடுத்தார்கள். ”
‘திறந்திடு சீசே’ கதை உருவான விதம் எப்படி?
” ஆனந்த விகடனில் வந்த சஞ்சீவ்குமார் எழுதிய புத்தகம் என்னை பாதித்தது. இந்தக் குடிப் ‘பெருமை’களை கொடுமைகளை நான் நிறையவே அறிந்திருக்கிறேன். என் கண் முன்னேயே காலைமுதல் இரவு வரை எப்போதும் குடித்துக் கொண்டு இருப்பவர்களை எனக்குத் தெரியும்.
குடிப்பவர்கள் எல்லாரும் தப்பானவர்கள் இல்லைதான் ஆனால் பல தப்புகளின் பின்னணியில் குடிப் பழக்கம் உள்ளதை மறுக்க முடியாது.குடியில் பல்வேறு நிலைகள் உள்ளன. ஜாலிக்காக குடிப்பவர்கலைவிட மன உளைச்சலில் குடிப்பவனை மீள முடியாமல் குடி அடிமையாக்கி விடும். அதற்காக ஜாலிக்காக குடிக்கலாமா என்று நினைக்க வேண்டாம். படத்தில் சொல்லி உள்ளதைப் போல விஷத்தில் சின்ன விஷம் என்ன?பெரிய விஷம் என்ன? ” என்கிறார்.
திறந்திடு சீசே அனுபவம்.?
“முதலில் இந்தக் கதையை எடுக்க சம்மதித்த தயாரிப்பாளர் சுதா, வீரவன் ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி.திறந்திடுசீசே மனிதனுக்குள் ஒளிந்து கிடக்கும் பூதத்தை அதாவது வேறு ஒரு மிருகத்தை வெளியே கூப்பிடுவது அழைப்பது என்கிற பொருளில் அப்படி தலைப்பு வைத்தேன். இது 65 நாட்களில் முடிக்கப்பட்ட படம் 2 பஃப் செட் போட்டோம். சில காட்சிகளுக்கு மட்டும் குமுளி, கேரளா போனோம். நிஜமான ஒயின் ஷாப்பிலும் சில காட்சிகள் எடுத்தோம்.
படத்தைப் பார்த்து மீடியா நண்பர்கள் பாராட்டியதும் எல்லாக் கஷ்டங்களும் போராட்டங்களும் நொடிப் பொழுதில் காணாமல் போன உணர்வு வந்தது.”என்கிறார் உற்சாகமாக.