திராவிடம் என்பது செத்துப்போன பிணம் : சீமான் ஆவேசம்

seeman-222

திருச்சி மாநாட்டு வேலைகளில் தீவிரமாக இருந்த சீமானுடன் ஒரு நேர்காணல்

”நாம் தமிழர் கட்சி ஏன் உருவானது? அதற்கான அடிப்படை நோக்கம் என்ன?”
”நாங்கள் தொடங்கிய கட்சி அல்ல இது. தொடர்கிற கட்சி. தமிழர் தந்தை அய்யா சி.பா. ஆதித்தனார் அவர்கள்தான் நாம் தமிழர் கட்சியைத் தொடங்கினார். அவர் பிரிட்டனில் படித்தபோது அயர்லாந்து விடுதலைக்காக சின்ஃபைன் என்கிற கட்சியைத் தொடங்கி ஐந்து லட்சம் மக்கள் போராடினார்கள். அதைக்கண்ட அய்யா அவர்கள் ஐந்து லட்சம் பேர் தனிநாடு கேட்டுப் போராடுகிற போது ஐந்து கோடிக்கும் மேல் வாழும் தமிழர்களுக்கென தனிதேசம் இல்லையே என்கிற ஆதங்கத்திலும் அதனை நிறைவேற்றும் நோக்கத்திலும் தமிழகத்துக்கு வந்து ‘நாம் தமிழர்’ கட்சியைத் தொடங்கினார். தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஆக்கபூர்வப் பணிகளைத் தீவிரப்படுத்தினார். நாம் தமிழர் கட்சியைத் தொடர்ந்து நடத்த முடியாமல் அய்யா அவர்கள் தி.மு.க.வில் இணைந்தபோது, ‘வழிவழியாக வருகிற வீரத்தமிழ்ப் பிள்ளைகள் நாம் தமிழர் கட்சியைத் தொடர்வார்கள்’ எனச் சொன்னார்.

அய்யாவின் பாதை சரியாக இருந்தது. அவருடைய நோக்கம் சரியாக இருந்தது. அதனால் பாதியில் நின்ற அந்தப் பயணத்தை வீரத்தமிழ்ப் பிள்ளைகள் நாங்க தொடர்கின்றோம். கட்சியின் நிறுவனத் தலைவர் அய்யா சி.பா.ஆதித்தனார்தான்.

கண்முன்னே லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்றழிக்கப்பட்டபோது, போரைத் தடுக்கச் சொல்லி தம்பி முத்துக்குமார் உள்ளிட்ட பிள்ளைகள் தீம்பிளம்புக்குத் தங்களைத் தின்னக் கொடுத்துக் கருகியபோது நமக்காகக் குரல் எழுப்ப அதிகாரமும் இனப்பற்றும் கொண்ட எந்தத் தலைவனும் இங்கே இல்லை. பதவிக்காக இனத்தைக் காவு கொடுத்தவர்களைப் பொறுக்கச் சகிக்காமல், சாதி மதமாகக் கூறுபட்டுக் கிடக்கும் தமிழர்களை இன உணர்வோடு திரட்டி பச்சைத் தமிழனுக்கான அதிகாரத்தைப் பெற்றே தீரவேண்டிய காலக்கட்டாயமே நாம் தமிழர் கட்சியைத் தொடர வைத்தது. கேட்பார் நாதியற்றுக் கிடந்த தமிழ்ப் பிணங்களில் பிறந்தவர்கள் நாங்கள். மாற்று அரசியலுக்கான எளிய மக்களின் புரட்சியே எங்களின் திரட்சி!”

”இயக்குநர் சீமானை அரசியலுக்கு இழுத்து வந்தது எது?”
”புதைக்க நாதியற்ற பிணமும் துடைக்க நாதியற்ற கண்ணீரும்தான். சிறுவயதிலேயே ராமேஸ்வரத்துக்கு ஈழத்தில் இருந்து ரத்த சொந்தங்கள் ஏதிலிகளாக மூட்டை முடிச்சுகளோடு வருவதைப் பக்கத்து ஊர்க்காரனாகப் பார்த்திருக்கிறேன். ஏன் இந்த அவலம் எனத் துடித்திருக்கிறேன். பரந்த பார்வையை, வீரிய தேடலை பரிதவிப்புதான் எனக்குள் ஏற்படுத்திக் கொடுத்தது. வரலாறு காண வானளாவ விரிந்த தமிழன் சிங்கள வல்லூறுகளின் நெருக்கடிக்கு ஆளாகிக் கிடக்கும் அவலம் புரிந்தது.

வாழ்ந்துகெட்ட வீட்டைப்போல் தமிழினம் வீழ்ந்துகிடந்த வேதனை பொறுக்காமல் கலை உலகில் இருந்தபோதே அண்ணன்கள் அறிவுமதி, சுபவீ, கொளத்தூர் மணி, அய்யா வீரமணி எனத் தமிழ்த் திண்ணைகளில் தேடிப்போய் அமர்கிறவனாக ஆனேன். அறிவார்ந்தவனாக, புரிதல் கொண்டவனாக, எதற்கும் அஞ்சாதவனாக பெரியார் திடல் என்னைப் பிரசவித்தது. அய்யா பழ.நெடுமாறன், தோழர் தியாகு என வட்டம் விரிந்து மருத்துவரய்யா ராமதாசு, அண்ணன் திருமாவளவன் என நீண்டது.

கிடைக்கிற மேடைகளில் எதையும் உடைக்கிற குரலோடு பேசிய பேச்சுகள் ஈழத்தின் கவனத்துக்குப் போனது. 2004-ல் ஈழத்துக்கு வரச் சொல்லி அழைப்பு வந்தது. அப்போது ‘தம்பி’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரம். போக முடியவில்லை. ஈழத்தின் வீரக்குருத்துகளான அண்ணன்கள் தமிழ்ச்செல்வன், நடேசன், சேரலாதன் ஆகியோருடன் தொலைபேசி மூலமாகத் தொடர்ந்து கொண்டிருந்தது பேச்சு.

2008-ல் போர்மேகம் பெரிதாகச் சூழ்ந்த வேளையில் மீண்டும் அங்கிருந்து அழைப்பு. சென்றேன். தமிழ்ப் பிறப்பின் வீரத்தை – வரலாற்றில் படித்த போர்க்கலைகளை – வரலாறு கண்டிராத கட்டமைப்பை – ஆகச்சிறந்த பெருமக்களாலும் வீரமிகு தம்பிகளாலும் வடிவம் செய்யப்பட்டிருந்த தேசத்தைக் கண்ணில் பார்த்த கணம். எல்லாவிதப் புரிதலோடும் பேசிய தலைவர், ‘ஒரு ஐயாயிரம் பேரைத் திரட்டி உன்னால் போராட முடியாதா?’ என்றார். ‘சாகத் துணிந்தவர்களுக்குத்தான் இனத்தின் தலைமையை ஏற்கிற தகுதி’ என தலைவர் கொடுத்த தைரியத்தோடு திரும்பினேன்.

போர் தீவிரம் எடுத்து, இரண்டு மாதத்திலேயே மொத்த கனவும் நொறுங்கிய நேரம். ‘மேதகு பிரபாகரன் என் சொந்த அண்ணன்’ எனச் சொன்னதற்காக புதுவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். ஈழத்தில் நான் நின்ற இடமெல்லாம் சிங்கள வெறி வென்ற இடமானது. என்னை அழைத்துச் சென்ற, வரவேற்ற, வாழ்த்திய, அறிவுரைத்தவர்கள் எல்லாம் கொல்லப்பட்டதாக சேதி வரவர, தன்மை மறந்த வெறிநிலையில் தத்தளித்துச் செத்திருந்தேன். சிறையின் கழிவறையிலேயே கிடந்து கதறினேன். யாராவது, ஏதாவது செய்து போரை நிறுத்திவிட மாட்டார்களா எனப் புலம்பினேன்.

பேரதிர்வு நடந்தபோதும், பூமி நழுவாதவர்களாக, புலன்கள் கதறாதவர்களாகப் பதவியைப் பத்திரப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார்கள் இங்கே ஆண்டவர்கள். பதவிக்காக எதையும் செய்யும் இந்த ஈனப்பிறவிகளை நம்பியா இத்தனை நாள் நின்றோம் என வெட்கித்துப்போனவன் தான், ஒருகட்டத்தில் வெடித்துக் கிளம்பினேன். ‘பாதையைத் தேடாதே, உருவாக்கு’ என்கிற தத்துவத்தின் அடிப்படையில் இயலாமையில் துடித்து அழுதவர்கள் நாம் தமிழராகத் திரண்டோம். அழுகையும் துயரமும்தான் என்னை அரசியலுக்கு இழுத்துவந்தது!”

”நாம் தமிழராய்த் திரள நீங்கள் அழைக்கிறீர்கள். ஆனால், திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்து இதனைச் செய்வது சாத்தியமா?”
”தமிழகத்தில் உள்ளவர்களுக்கு அ.தி.மு.க., தி.மு.க. என்கிற கட்சிகளைத் தெரிந்த அளவுக்குக்கூட திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது. நோக்கத்தைவிட்டு விலகிப்போனவர்கள் திராவிடம் என்கிற வார்த்தையை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மதவாதத்துக்கு எதிரானது திராவிடம். ஆனால், திராவிடக் கட்சிகள் எந்த அடிப்படையில் மதவாத பாரதீய ஜனதாவோடு கூட்டணி வைத்தன? ஆரியத்துக்கு எதிரானது திராவிடம். ஆனால், திராவிடக் கட்சியின் தலைமையே ஆரியமாக அமைந்திருக்கிறதே… அப்புறமென்ன திராவிடம்?

இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட போது இந்தத் திராவிடம் என்ன செய்தது? இனம் காக்க, மொழி காக்க தமிழ்த்தேசிய அரசியலே இப்போதைய அவசியம். தமிழர் என்கிற உணர்வு இல்லாது தமிழினம் எப்போதுமே வெல்லாது. திராவிடக் கட்சிகளான அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் மாறி மாறி ஆண்டு எத்தகைய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தி இருக்கின்றன. தமிழக மக்களை இலவசங்களுக்குப் பின்னால் அலையவிட்டத்தைத் தவிர இந்தத் திராவிடக் கட்சிகள் செய்த புரட்சி என்ன? என்னைப் பொறுத்தமட்டில் திராவிடம் என்பது செத்துப்போன பிணம். அதனை எடுத்து அடக்கம் செய்ய வேண்டியது மட்டும்தான் பாக்கி!”

”உங்களது ஆவேசப் பேச்சுக்கு அச்சாரம் போட்டது யார்?”
”ஆள் பார்த்து பிறந்த பேச்சல்ல இது. நமக்கென ஆள் இல்லையே என்கிற ஆதங்கத்தில் வெடித்த பேச்சு. ஆரம்பத்தில் பெரியாரிய மேடைகளில் சாதாரணனாகத்தான் பேசிக் கொண்டிருந்தேன். ‘நன்றாகப் பேச வரும்’ என்பதுகூட எனக்கு அப்போது தெரியாது. ஈழப் போர் தீவிரமான சூழலில் தத்தளிப்பு அடங்காமல் தாங்கொணா வேதனையோடு ராமேஸ்வரம் கூட்டத்தில் கதறினேன். துண்டிப்பான பல்லியின் வால் துடிப்பதைப்போல் துண்டாடப்பட்ட நம் சொந்தங்களுக்காக என் வாய் துடித்தது. ‘வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சு’ என்றார் அய்யா காசி ஆனந்தன். ‘பேசுகிற போது உன்னுடைய உடல்மொழியைக் கவனித்து வியந்து போனேன்’ என்றார் அப்பா பாலு மகேந்திரா. விடுதலைக்காகப் போராடுகிற ஓர் அடிமையின் குரல் ஆவேசம் கொண்டதாகத்தானே இருக்கும். ஈழ சொந்தங்கள் எல்லா விதத்திலும் நாசமாக்கப்பட்ட வேதனை பொறுக்காமல், நமக்கென யாருமில்லையே என்கிற ஆதங்கம் அடங்காமல், அடிக்கிற போது துடிக்கிற புழுவாகவே ஒவ்வொரு மேடைகளிலும் நிற்கிறேன். இழவு வீட்டு ஒப்பாரியாகவே ஒலிக்கிறது எனது குரல்.”

”உங்களுடைய பேச்சில் நீங்கள் தி.மு.க.வை மட்டுமே திட்டுகிறீர்கள். அ.தி.மு.க.வுக்கு எதிராக நீங்கள் பெரும்பாலும் பேசுவதே இல்லையே?”
”என்னுடைய எல்லா பேச்சையும் கேட்டிருந்தால் இப்படியொரு கேள்வியையே கேட்டிருக்க மாட்டீர்கள். அ.தி.மு.க., தி.மு.க. இரண்டுக்குமான மாற்று நாங்கள்தான் எனச் சொல்லும்போதே புரியவில்லையா நாங்கள் அ.தி.மு.க.வையும் எதிர்க்கிறோம் என்று. கொள்கையிலோ கொள்ளையிலோ இந்த இரண்டு கட்சிகளுக்குமே பெரிய வித்தியாசம் இல்லை. குவார்ட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் வாக்காளர்களை வளைத்து வைத்திருக்கும் இந்தக் கட்சிகளை அடியோடு வீழ்த்துவதே நாம் தமிழர் கட்சியின் இலக்கு. சம தராசாக இருந்தே தத்துவமற்ற இந்த இரண்டு கட்சிகளையுமே நாங்கள் பார்க்கிறோம். அம்மையார் ஜெயலலிதாவைக் காட்டிலும் அய்யா கலைஞரை நான் அதிகம் திட்டுவதாக உங்களுக்குத் தெரியலாம். அதற்குக் காரணம் இந்த அம்மையாரை ஆட்சிக் கட்டிலுக்குக் கொண்டுவந்ததே அய்யா கலைஞரின் கேடுகெட்ட ஆட்சிதானே…”

”திருச்சி மாநாட்டின் நோக்கம் என்ன?”
”தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி அச்சாரத்துக்காகப் போடப்படும் வழக்கமான மாநாடு அல்ல இது. இன உணர்வும் மான உணர்வும் கொண்ட ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளும் கூடி நமக்கான மாற்று அரசியலை முன்னெடுக்கிற முடிவு. அடிபட்டும் மிதிபட்டும் கிடந்த தமிழர்கள் தங்களின் வலிமை திரட்டி ‘பகையே வா’ என நெஞ்சு நிமிர்த்தி நிற்க வேண்டிய நேரம் இது. நாம் தமிழர் கட்சி என்பது கட்சியின் பெயர் அல்ல.  அது நம் இனத்தின் பெருமைமிக்க அடையாளம் . நம் இனத்தின் எழுச்சிக்கான அரசியலை முன்னெடுக்கும் தமிழ்த் திருவிழாவே திருச்சி மாநாடு.

இதுகாலம் வரை சாதிக்காக, மதத்துக்காக, இந்திய தேசிய அரசியலுக்காக, திராவிட அரசியலுக்காகத் திரண்ட தமிழன், முதன் முறையாகத் தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் திரள வேண்டிய இன எழுச்சி அரசியல் மாநாடு இது. தமிழ்த் தேசிய எழுச்சியை உலகுக்கு உரைக்கும் நாளாக – தமிழர் மறுமலர்ச்சித் திருவிழாவாக இந்த மாநாடு அமையும். ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர நாள், ஜனவரி 26 குடியரசு நாள் என்பதுபோல்  2015 மே 24 -ஐ தமிழர் இன எழுச்சி அரசியல் நாளாக நிச்சயம் இருக்கும்.

சிங்களத் தாண்டவங்கள் மட்டும் அல்லாது அக்கம்பக்க மாநில அதிகார வெறிக்கும் தமிழர்கள் பலியாகும் பரிதாபக் காலம் இது. அடிபட்டே கிடப்பதற்கு நாம் ஒன்றும் அடிமைக்கூட்டம் அல்ல. ஆண்டாண்டு காலமாக பெரு நிலத்தை ஆண்ட தமிழ் மறவர்களின் வம்சாவழிப் பிள்ளைகள். முறிந்து கிடந்த கிளை, நிமிர்ந்து நிற்கும் நேரம் இது!”

”தனித்துப் போட்டி என்பதில் உறுதியாக இருக்கின்றீர்கள். இது எந்த விதத்தில் சாத்தியமாகும்?”
”சாத்தியத்தில் இருந்து எதுவும் பிறப்பதில்லை. தேவையிலிருந்துதான் பிறக்கிறது. ‘தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்’ என்பார்கள். நல்ல மாற்றத்துக்கான தேவை தமிழகத்துக்கு இப்போது அவசியம். தனித்துப் போட்டி என்பது என் விருப்பம் அல்ல. என் நிலத்தின் விருப்பம். சகிக்க முடியாத ஊழலையும், மோசடிகளையும், சமூகக் கேடுகளையும், பாரபட்சங்களையும், தீவினைகளையும் உருவாக்கியதைத் தவிர, தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் எதையும் செய்துவிடவில்லை. கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான அரசியலைக் காணச் சகிக்காமல் ஒவ்வொரு வாக்காளனும் மனதில் கொந்தளிப்போடு ‘மாற்றம் வராதா’ என ஏங்கி அலைகிறான். கலைஞரையும் ஜெயலலிதாவையும் விட்டால் வேறு வழியில்லை என்பது தமிழகத்துக்கு எவ்வளவு பெரிய அவமானம்? தனித்துப் போட்டியிட்டால் பரப்புரை தொடங்கி தேர்தல் முடிவு வரை எத்தகைய இக்கட்டுகளுக்கெல்லாம் நாம் ஆளாகுவோம் என்பது எனக்கும் தெரியும். தற்காலிகத் தோல்விக்கும் பயந்தால் நிரந்தர வெற்றியை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. நாலைந்து சீட்டுக்காக கூட்டு வைக்கிற குறுகிய கொள்கை கொண்டவர்கள் நாங்கள் அல்ல. பத்து வாக்கு வாங்கினாலும் ஒரு தமிழனுக்குத் தமிழ்ப் பிள்ளைகள் அளித்த வாக்கு அது. ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. எங்களுக்குத் தேவை அரசியல் மாற்றம். தொடக்கத்திலேயே வெற்றியைக் கண்டுவிட வேண்டும் எனத் துடிப்பவர்கள் அல்ல நாங்கள். தனித்து நின்று தோற்கத் தயார், ஆனால் தரம் கெட்ட ஆட்சிகளை ஏற்கத் தயார் இல்லை. ஒரு வண்டி குப்பையை எரிக்க ஒரு வண்டி தீக்குச்சிகள் தேவை இல்லை. ஒரு தீக்குச்சி போதும்.