சூர்யா, பாபி தியோல், திஷா பதானி,யோகிபாபு, நட்டி, கருணாஸ், கோவை சரளா, கே.எஸ். ரவிக்குமார், கலை ராணி,போஸ் வெங்கட்,ரெடின் கிங்ஸ்லி, பிரேம்குமார் மற்றும் ஏராளமான துணை நடிகர்கள் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார் .தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கலை இயக்கம் மிலன்.எடிட்டிங் நிஷாத் யூசுப்.ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
இப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல்வேறு மொழிகளில் பத்தாயிரம் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. விழிகளை விரிய வைக்கும் பிரம்மாண்டத்துடன் முப்பரிமாண தொழில்நுட்பத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது என்று எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்தப் படம் இன்று வெளியாகி உள்ளது.
தொல்காலத்தையும் சமகாலமான தற்காலத்தையும் இணைக்கிற ஒரு கதை.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தனது நாட்டையும் மக்களையும் காப்பாற்றப் போராடும் ஒரு பழங்குடி வீரனின் கதைக்கும் ,சமகாலத்தில் அதாவது 2024 -ல் அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் மூளை நரம்புகளைக் கட்டுப்படுத்தி இயங்க வைக்கும் அளவிற்கு அறிவியல் முன்னேறிய இந்த காலத்திற்கும் முடிச்சு போட்டு உருவாகி இருக்கிறது இந்தக் கதை.கதையின் பெரும்பகுதி தொல்காலத்தில் தான் நடக்கிறது.
வீரம், பாசம், தங்களது இனப்பற்று என்று ஐந்தீவின் ஐந்து பிரதேசங்களில் மக்கள் குழுக்களாக வாழ்ந்து வருகிறார்கள். ரோமானிய படையெடுப்பின் மூலம் இவர்களை ஒவ்வொரு குழுவையும் பலவீனப்படுத்தி ஆக்கிரமிக்க சூழ்ச்சி நடக்கிறது. அந்நியர்களின் கூட்டம் அதற்காக கப்பலில் வந்து தொல்குடி மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி மேற்கொள்கிறார்கள். அவர்களின் நயவஞ்சக வலையில் இருந்து மக்களைக் காப்பாற்ற வீரர்கள் போராடுகிறார்கள்.ஐந்தீவின் பெருமாச்சி பகுதியின் இளவரசனான கங்குவா தங்கள் மக்களுக்கு எதிராக விலை போகும் பிறதீவு தலைமையுடன் மோதுகிறார். அதனால் உதிரனின் பகை வருகிறது.ஒரு கட்டத்தில் கங்குவாவான சூர்யாவுக்கும் உதிரனான பாபி தியோலுக்கும் நேரடி மோதலாக விஸ்வரூபம் எடுக்கிறது பகை.அதற்கும் சமகால கதைக்கும் என்ன சம்பந்தம் என்றால்,சமகாலத்தில் சோதனைப் பிராணி போல் ஒரு சிறுவனை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் பிடியில் இருந்து அவன் தப்புகிறான். அவன் சமகால சூர்யா- பிரான்சிஸைத் தேடி ஓடுகிறான்.அந்த சூர்யாவுக்கும் இந்த சூரியாவுக்கும் ஒரு ஜென்மாந்திர முடிச்சு போட்டுப் பத்தாம் நூற்றாண்டையும் 21 ஆம் நூற்றாண்டையும் தனது கற்பனை மூலம் இணைத்துள்ளார் இயக்குநர் சிவா.இந்தக் கற்பனையும் பட உருவாக்கமும் ஒரு புதிய முயற்சிதான்.
இயக்குநர் சிவா தமிழ் சினிமாவிலிருந்து இப்படியொரு படமா? என ரசிகர்கள் வியக்கும் படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.ஐந்தீவில் ஏராளமான ரகசியங்கள் மர்மங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்ற கலை ராணியின் குரலோடு வரும் காட்சியிலிருந்து படம் வேறு உலகத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது. இயக்குநரின் பிரம்மாண்ட கற்பனைக்குக் கதாபாத்திரங்கள் மூலம் உயிர் கொடுத்திருக்கும் நடிகர்களும் அரங்கமைப்பின் மூலம் அந்தக் காலத்திற்கு இட்டுச் செல்லும் கலை இயக்கமும் கண்கொள்ளா காட்சிகளை கேமராவுக்குள் சிறைப் பிடித்து தந்திருக்கும் ஒளிப்பதிவும் திரையில் மாயாஜாலம் நிகழ்த்தும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சித் தொழில் நுட்பமும் இயக்குநருக்கு பக்கபலமாக இருந்து உதவியுள்ளன.
நடிப்புக் கலைஞர்களை எடுத்துக் கொண்டால் தொல்குடி முகமாக கங்குவா பாத்திரத்திலும் சமகாலத்தின் முகமாக பிரான்சிஸ் பாத்திரத்திலும் வருகிறார் சூர்யா.படத்தில் கங்குவாவின் பகுதிதான் அதிகம்.அந்த கங்குவா பாத்திரத்தின் மூலம் விஸ்வரூபம் எடுத்துள்ள சூர்யா, தோற்றம், சண்டைக்காட்சிகள் போன்றவற்றில் பளிச்சிடுகிறார் .பாசத்தை வீரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் அவருக்கு வாய்த்துள்ளன. அதே வேளை நடிப்புத் திறன் மிக்க அவருக்கு நடிப்புத் தருணங்களை மேலும் உருவாக்கி அளித்திருக்கலாம்.
தீஷா பதானி சமகால வணிகப் படத்திற்கான கதாநாயகியாக வந்து கவர்ச்சி காட்டி விட்டுச் செல்கிறார்.பாலிவுட் நட்சத்திரம் பாபி தியோல் தனது தோற்றத்தினாலும் ஆக்சன் காட்சிகளாலும் ஆவேச நடிப்பாலும் மிரட்டுகிறார்.படத்தில் நட்டி, கருணாஸ், கோவை சரளா, கே.எஸ். ரவிக்குமார், கலை ராணி,போஸ் வெங்கட், பிரேம்குமார் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் அவர்கள் வெளித் தெரியாத அளவிற்கு பாத்திரங்களோடு கரைந்துள்ளார்கள்.யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி வரும் காட்சிகளில் நகைச்சுவை பெரிதாக எடுபடவில்லை. படத்தில் பிற காட்சிகளின் ஈர்ப்பால் அதற்கு அவசியமும் தோன்றவில்லை.
நடிகர் கார்த்தியின் எதிர்பாராத வருகையும் உண்டு . படத்தின் இரண்டாம் பாகத்தின் முன்னோட்டமாக அவர் பாத்திரம் வருகிறது.
எதிரிகளோடும் துரோகிகளோடும் செய்யும் ஒரு போர் வீரனின் யுத்தம் தான் இந்தக் கதை.தொல்குடி மக்களின் தோற்றங்களும் கூட்டம் கூட்டமாக வருவதும் போர்க் காட்சிகளும் நீர்க்காட்சிகளும் கண்களுக்கு மிரட்சி ஊட்டும் பிரம்மாண்டங்களும் ஒரு புது விதமான அனுபவம் தான். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளை த்ரீடி எனப்படும் முப்பரிமாணத்தில் பார்க்கும்போது அது வேறு விதமான உணர்வைத் தருகின்றன.
ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி தனது கடும் உழைப்பினால் தனது பணியை வெற்றிகரமாக செய்துள்ளார்.காடு, மேடு,மலை, பனி என்று விரியும் காட்சிகள் அவரது உழைப்பிற்குச் சாட்சியங்கள்.ஒரு வணிக வெற்றிப் படத்தை மனதில் வைத்து பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் .குறிப்பாக ‘மன்னிப்பு இல்லாமலே மண் மீதிலே ஏதுமில்லை’ என்கிற பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் துண்டும் ரகம்.
ஆடை வடிவமைப்பாளர்கள் அனுவர்தன், தட்ஷா பிள்ளை பத்தாம் நூற்றாண்டு மனிதர்களாகவே மாற்றியிருக்கிறார்கள் . கலை இயக்குநர் மிலனின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. சுப்ரீம் சுந்தரின் பழங்குடி மக்களின் போர்க்காட்சிகளில் ரத்தம் தெறிக்கிறது. ரத்தமும் சதையும் திரையில் தெறிப்பது 3D மூலம் நம் கண்களில் படும் உணர்வைத் தருகிறது.படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் நிஜக் காட்சிகள் போலவே உணர வைக்கும் அளவிற்கு துல்லியமாக இருக்கின்றன.முக்கியமாக, சூர்யாவுக்கும் முதலைக்குமான சண்டைக்காட்சி ஒரு சோறு பதம்.
மொத்தத்தில் இந்தப் படம் கண்களை மிரள வைக்கும் ஒரு முப்பரிமாண அனுபவம் என்பதில் சந்தேகம் இல்லை.
மொத்தத்தில் திரைக்கதையில் சில அழுத்தமான காட்சிகளை உருவாக்கி இருக்கலாம் என்று தோன்றினாலும் எல்லாவற்றையும் மறக்கச் செய்து படத்தை ரசிக்கச் செய்கிறது முப்பரிமாண பிரம்மாண்டம்.எனவே கங்குவா பிரம்மாண்டத்தை ரசிக்கும் ரசிகர்கள் மனதில் தங்குவான்.