இந்திய தேசியக் கொடியை 50 ஆயிரம் பேர் ஒன்றிணைந்து உருவாக்கும் முயற்சி என்று ரோட்டரி மாவட்டம் 3230 அறிவித்த போது, அப்படி நடக்க வாய்ப்பு உள்ளதா என்று யோசித்தவர்கள் பலர். ஆனால் அவர்களின் எண்ணங்களை தவிடு பொடியாக்கும் வகையில், டிசம்பர் 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ திடல் மனித தலைகளால் நிரம்பி வழிந்தது.
பட்டொளி வீசி பறக்கும் இந்தியாவின் மூவர்ணக் கொடியை உருவாக்கும் ரோட்டரி மாவட்டம் 3230-ன் முயற்சியில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள், தமிழ்நாட்டின் முக்கிய பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள், பள்ளி மாணவ – மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும், முன்னணி நடிகருமான சரத்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
கின்னஸ் சாதனை முயற்சிக்காக உருவாக்கப்பட்ட இந்த நிகழ்வில், கின்னஸ் குழுவின் நடுவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் 50 ஆயிரம் பேர் ஒன்று திரண்டு இந்தியாவின் தேசியக்கொடி உருவாக்கப்பட்டது கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு உலகில் வேறு எங்கும் நடக்காத ஒன்று. இது இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும், சென்னை மாநகரத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும். இதனை சாதித்த ரோட்டரி மாவட்டம் 3230 அமைப்பும், அதற்கு உறுதுணையாக இருந்த க்வாண்டா ஜி அமைப்பும் பாராட்டுக்குரியவை.
ரோட்டரி மாவட்டம் 3230 அமைப்பு நடத்தி 50 ஆயிரம் பேர் ஒன்று திரண்டு தேசியக் கொடியை உருவாக்கியதற்கான பட்டயத்தை கின்னஸ் குழுவினர், ரோட்டரி அமைப்புக்கு வழங்கினர். இந்த சாதனை, இந்தியாவின் செழுமை மிகு பாரம்பரியத்திற்கும், தேசியத்தின் மீது ஆர்வம் கொண்ட தமிழர்களுக்கும் ஒரு மிகப்பெரிய பாராட்டு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது.