சூர்யாவுடன் 5வது முறை இணையும் இயக்குநர் ஹரி!

hari-newதமிழில் வணிகத் தரத்திலான படங்கள் இயக்கும் இயக்குநர்களிடையே ஹரிக்குத் தனியிடம் உண்டு.

ஆக்ஷன், செண்டிமெண்ட். விறுவிறுப்பு, ரொமான்ஸ், கலவையில் இவர் படைக்கும் கமர்ஷியல் படங்கள் தனி கைமணம் கொண்டவை. அவை அனைவரும் ருசிக்கும் அறுசுவை விருந்து போல ‘ஹரிசுவை‘ விருந்தாக இருப்பவை.

அவரது படங்களைப் போலவே அவரும் பரபரப்பாக இயங்கி விரைவில் படத்தை முடித்து தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையாக வலம் வருபவர்.

சூர்யா, விக்ரம் போன்ற பல கதாநாயகர்களுக்கு ஆக்ஷன் அதிரடி படங்கள் வழங்கியவர்.குறிப்பாக சூர்யா இவரது பேவரைட்.
நடிகர் சூர்யாவும், இயக்குநர் ஹரியும், ‘ஆறு’ படத்தில் முதன்முதலாக இணைந்து பணியாற்றினார்கள். அதைத்தொடர்ந்து, ‘வேல்,’ ‘சிங்கம்,’ ‘சிங்கம்-2’ ஆகிய படங்களிலும் இருவரும் இணைந்தார்கள்.

இப்போது சிங்கம்–3 க்காக 5 -வது முறை சூர்யாவோடு களத்தில் இறங்கியுள்ளார் ஹரி.. முன்பை விட அதிக முறுக்கோடும் ,மேலதிக செருக்கோடும், அதிக மிடுக்கோடும் அளப்பரிய துடுக்கோடும் சூர்யா பாத்திரத்தை வடிவமைத்துள்ளார்.

சூர்யா-அனுஷ்காவுடன், ‘சிங்கம்’ படத்தின் மூன்றாவது பாகத்தில் சுருதிஹாசனும் கதாநாயகியாக நடிக்கிறார் .

‘சிங்கம்’3 ‘ படம் பற்றி ஹரி கூறும் போது

‘‘தமிழ் பட உலகில் இதற்கு முன்பு ‘முனி,’ ‘காஞ்சனா’ போன்ற படங்களின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளன. ஆனால், அவை வேறு வேறு கதையம்சம் கொண்ட படங்கள். ‘சிங்கம்’ பட கதையின் தொடர்ச்சியாக, ‘சிங்கம்-2’ வந்தது. இப்போது, ‘சிங்கம்-2’ படத்தின் தொடர்ச்சியாக, ‘சிங்கம்-3’ வர இருக்கிறது.

ஒரே கதையின் தொடர்ச்சி மூன்றாம் பாகமாக தயாராவது, இதுதான் முதல் முறை. மூன்று பாகங்களிலும் ஒரே கதாநாயகன், ஒரே டைரக்டர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து பணிபுரிவதும் இதுதான் முதல் தடவை.” என்கிறார்.

> நாயகிகள் அனுஷ்கா-சுருதிஹாசன் பற்றிக் கூறும் போது:

>
> ‘சிங்கம்’ படத்தில், சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்தார். இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா, ஹன்சிகா ஆகிய இருவரும் ஜோடிகளாக வந்தார்கள். ‘சிங்கம்-3’ படத்தில் அனுஷ்காவும், சுருதிஹாசனும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் இரண்டாம் பாகம் படத்தில் இடம்பெற்ற ராதாரவி, நாசர் உள்பட அத்தனை நடிகர்-நடிகைகளும் மூன்றாம் பாகத்தில் இருக்கிறார்கள்.

> இதில், சூர்யா பாதி நல்லவராகவும், மீதி வல்லவராகவும் வருகிறார். இரண்டாம் பாகத்தை விட, மூன்றாம் பாகத்தில் அவருடைய கதாபாத்திரம் இன்னும் கூர்மையாக அமைக்கப்பட்டு இருக்கிறது. ‘‘தப்பு பண்ணுகிறவர்களை கைது செய்பவர் மட்டும் போலீஸ் அல்ல. தப்பே நடக்காமல் பார்த்துக் கொள்கிறவர்தான் போலீஸ்’’ என்ற ‘பஞ்ச்’ வசனத்துடன் சூர்யா அறிமுகமாவார்.

சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் நான்காவது படம் இது. கதாபாத்திரத்துக்காக கடினமாக உழைப்பவர், அவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். கதாபாத்திரத்துக்காக என்னென்ன செய்யலாம்? என்று தூங்காமல் யோசிப்பவர், அவர். என் படத்துக்கு வந்து விட்டால், வெறி பிடித்தவர் போல் நிற்பார்.”என்கிறார்.

கதை பற்றிக் கூறும் போது:

”இந்த படத்தின் கதைக்காக 9 மாதங்கள் செலவிட்டு இருக்கிறேன். நான் இதற்கு முன்பு இயக்கிய ‘சாமி,’ ‘சிங்கம்’ மாதிரி கதை மிக உறுதியாக அமைந்து இருக்கிறது. கதையும், திரைக்கதையும் தரமானதாக இருந்தால், வெற்றி நிச்சயம் என்பது என் கணிப்பு. ‘சிங்கம்-3’க்கு அனிருத் இசையமைக்கிறார். என் டைரக்ஷனில், சூர்யா படத்துக்கு அனிருத் இசையமைப்பது, இதுவே முதல் முறை.

படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. காரைக்குடி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. கோவா மற்றும் பிரான்சு நாட்டின் தலைநகரான பாரீசில் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

பொதுவாக, நான் தினமும் 5 மணி நேரம்தான் தூங்குவேன். படப்பிடிப்பு தொடங்கி விட்டால், தூக்கம் தொலைந்து போகும். தினம் 4 மணி நேரம் தூங்கினால் அதிகம்.’’இவ்வாறு இயக்குநர் ஹரி கூறினார்.. தன் விறு விறு படத்தைப் போலவே தன் உழைப்பைப் பற்றியும் கூறி நெற்றியடியாக அடிக்கிறார்