‘பாபநாசம்’ பல பாத்திரங்களில் சமைக்கப்பட்ட சமையல்: கமல்

Papanasam Press Meet Stills (31)கமலின் அடுத்த படம் ‘பாபநாசம்’ வெளியீட்டுக்குத் தயாராகிவட்டது. அது குறித்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர் படத்தின் தயாரிப்பாளர்களான வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸும், ராஜ்குமார் தியேட்டர்ஸும்.

கௌதமியுடன் சந்திப்பில் கலந்துகொண்ட கமலை படத்தில்பணி புரிந்த  அனைவருமே கமலை  புகழ்ந்தே பேசினார்கள். கடைசியில் கமல் பேசிய போது

“பேசியவர்கள் எல்லோருமே ஏதோ படத்தில் நான் மட்டுமே நடித்திருப்பது போல் என்னைபற்றியே பேசினார்கள். ஒரு பாத்திரத்தில் செய்த உணவு அல்ல இது. பல பாத்திரங்களிலிருந்து சமைக்கப்பட்ட சமையல்தான். இதில் நான் மட்டுமே நன்றாக நடித்திருப்பது எனக்குப் பெருமையைச் சேர்க்காது. எல்லோரும் நன்றாக நடித்திருந்தால்தான் என் படத்துக்குப் பெருமை.

kamalஎல்லோருமே படத்தில் நன்றாக நடித்திருந்தார்கள். இங்கே பேசப் பயந்த அருள்தாஸ் படத்தில் நடிக்கும்போது பயப்படுபவராக இல்லை. நான் இல்லை என்று ஒருபக்கம் கடவுளை சொல்லிக்கொண்டிருக்க, என்னையே கடவுளாக்கிய எம்.எஸ்.பாஸ்கரும் ஒரு இஸ்லாமியர் வேடத்தில் கடவுள் இருப்பதாகவே நம்பும்படி நடித்திருக்கிறார்.

கௌதமியின் நடிப்பைப் பார்கும்போது ஒரு நல்ல நடிகையை இத்தனை நாள் நடிக்கவைக்காமல் இருந்துவிட்டோமே என்று தோன்றியது. எங்கள் செலவில் கற்றுக்கொள்ளாமல் தன் செலவிலேயே இசையைக் கற்றுக்கொண்டு வந்த ஜிப்ரானும் அருமையாக இசையமைத்திருக்கிறார். படப்பிடிப்பு நடைபெறுவதே தெரியாமல் எல்லோரிடமும் நன்றாக வேலை வாங்கிவிட்டார் இயக்குநர் ஜீத்துஜோசப்.

நான்கு எழுத்தாளர்கள் ஒத்துப்போய் பணியாற்றிய படம் இது என்றார் சுகா. இரண்டு எழுத்தாளர்கள் என்றால்தான் பிரச்சினை வரும். நான்கு பேர் என்றால் ஒத்துப்போய் விடுவார்கள். இதில் நான் நெல்லைத் தமிழ் பேசி நடிப்பது எளிதாக இருந்தது என்றால்தான் தவறு. ஏனென்றால் படத்தில் நான் பிரெஞ்ச் மொழி பேசி நடித்திருந்தால் எப்படியும் பேசி நடிக்கலாம். இங்கு பெரும்பாலும் யாருக்கும் பிரெஞ்ச் தெரியாது. கமல் அற்புதமாக பேசியிருக்கிறார் என்பார்கள். ஆனால், இங்கு எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த நெல்லைத்தமிழ் பேசி நடிக்கும்போது கவனமாக பேச வேண்டும். இல்லாவிட்டால் தவறாகிவிடும்.

மூன்று மொழிகளில் வெற்றிக்கு ஒத்திகை பார்த்த படம் என்பதாலும், இந்தப்படம் நன்றாக வந்திருப்பதாலும் இந்தப்படத்தை வெற்றிபெறச் செய்ய உங்களிடம் நாங்கள் மன்றாடும் நிலையில் இல்லை. நல்ல படங்களை வெற்றிபெறச்செய்யும் வேலையை நீங்களே செய்துவிடுவதால் இதுவும் உங்கள் கடமைகளில் ஒன்றாகிவிடுகிறது..!”என்றார்.