சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அவர்களின் சந்திப்பு பற்றி முதல்வர் குறிப்பிடும்போது,
‘சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் வாழ்த்து பெற வந்தபோது, அரசு பல்வேறு பத்திரிகையாளர் நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செய்து வந்தாலும், இன்னும் சில கோரிக்கைகள் இருப்பதாகத் தெரிவித்தனர். அரசு அவற்றையும் படிப்படியாக நிறைவேற்றித் தரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘Journalism’-த்திற்கும் ‘Sensationalism’-த்திற்கும் உள்ள வேறுபாட்டினையும், அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் இளைய தலைமுறை ஊடகவியலாளர்களுக்குப் பயிற்றுவித்து, அறமுடன் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் உணர்த்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி உள்ளார்.
பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்ப உதவி நிதியாக ரூ.5 இலட்சம் வழங்கப்பட்டுவருவதை ரூ.10 இலட்சமாக உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கடந்த ஆட்சிக்காலத்தில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கு ஒரு குழு மட்டுமே அமைக்கப்பட்டு, அது தொடர்பாக பிற நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றவுடன் பத்திரிகையாளர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பத்திரிகையாளர் நலனைப் பேணிப் பாதுகாத்திடும் வகையில், பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து உத்தரவிடப்பட்டு, நாளது தேதி வரையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 3,335 பத்திரிகையாளர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளர் மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிர்வாகிகள் நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது, தங்கள் மன்றத்தின் சார்பிலான சில கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
அதை ஏற்று பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ.5 இலட்சம் என்பதை 24 மணி நேரத்தில் ரூ.10 இலட்சமாக உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டார். இதற்குரிய அரசாணை இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்றும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.