‘ஜெயம் கொண்டான்’ ,’கண்டேன்காதலை’ ,’வந்தான் வென்றான்’, ‘சேட்டை’ ,’ஒருஊர்ல ரெண்டுராஜா’ படங்களைத் தொடர்ந்து ஆர். கண்ணன் இயக்கும் ஆறாவது படம் ‘போடா ஆண்டவனே என்பக்கம்’ .
தன்னம்பிக்கை ஒருவனை எவ்வளவு தூரம் கொண்டு செல்லும், தடைகளை வெல்கிற திறமையை எப்படி கற்றுத்தரும் என்பதைச் சொல்கிற படமாக இது உருவாக இருக்கிறது.
ஆர். கண்ணனின் மசாலா பிக்ஸ் வழங்கும் இப்படத்தை விஜய்ராஜ் ஜோதி தயாரிக்கிறார்.
விஷ்ணு நாயகனாக நடிக்கிறார் .’பிசாசு’ நாயகி பிரயாகா நாயகியாக நடிக்கிறார் . மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு- பி.ஜி. முத்தையா ,நடனம் -பிருந்தா, கல்யாண், எடிட்டிங்- செல்வா, கலை- லால்குடி இளையராஜா என பல திறமைசாலிகள் தொழில்நுட்பப் பணியில் பங்கெடுக்கிறார்கள்.
இப்படத்தின் காட்சிகளின் பின்புலத்தில் மழை இருக்கும். மழைக்காலத்திலேயே கதையின் பெரும் பகுதி நிகழும். மழையும் ஒரு பாத்திரமாக படத்தில் பங்கெடுக்கும்.ஆனாலும் படப்பிடிப்பை கோடைக் காலமான மே இறுதியில் தொடங்க இருக்கிறார்கள். இது ஒரு நகரம் சார்ந்த கதை. காதல், நகைச்சுவை, ஆக்ஷன் போன்றவை இருந்தாலும் இதை சாதாரண வியாபார பார்முலாவுக்குள் அடக்கிவிட முடியாதபடி ஜீவனுள்ள கதையோடு காட்சிகள் இருக்கும்.
தொடர்ந்து 45 நாட்கள் சென்னையில் படமான பின் பாடல்களுக்காக கனடா செல்லவும் உள்ளார்கள்.
” நாயகன் எலெக்ட்ரானிக்ஸ் தொழில் சார்ந்தவன். எனவே சென்னையில் எலெக்ட்ரானிக்ஸ் கடைகளின் தலைமைக் கேந்திரமாக விளங்கும் ரிச்சி தெருவை செட் போட்டு படமாக்க உள்ளோம். நாயகியின் வீடு ஒரு தியேட்டருக்கு அருகில் இருக்கும். அதற்கான பழைய தியேட்டரையும் பார்த்து விட்டோம் ” என்கிறார் படத்தை இயக்கும் ஆர். கண்ணன்.
படையப்பாவில் ரஜினிபேசும் வசனத்தைப் படத்தலைப்பாக ஆக்கியுள்ளது பற்றிக் கூறும் போது ” என் படங்களின் தலைப்புகள் எல்லாமே பளிச் வசனங்களாய்த்தான் இருக்கும். இநதப் படத்துக்கு ரஜினிசார் சொன்ன. வசனத்தை தலைப்பாக்கியுள்ளேன். அவர் படத்தில் இந்த வசனத்தை கூறியபோது 1000பேர் கொண்ட முழு தியேட்டருமே கைதட்டியது. அதில் நானும் ஒருவன். அந்த அளவுக்கு எளிமையான வலிமையான வசனம் அது. அதன் தாக்கத்தை உணர்ந்துதான் தலைப்பாக்கினேன்.நம்பிக்கை தரும் தலைப்பு அது ” என்கிறார் ஆர். கண்ணன்.
படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் நிறைவடைந்த நிலையில் படப்பிடிப்புக்கு தயாராக இருக்கிறது படக்குழு.