சொந்தக்குரலில் பேசிய ரெஜினா கஸாண்ட்ரா !

வசீகரிக்கும் அழகான தோற்றம், மயக்கும் திரை ஆளுமை மற்றும் நம்பிக்கை அளிக்கும் சிறப்பான நடிப்பு ஆகியவை தான் ஒரு நடிகைக்கு வெற்றியை ஈட்டித் தருகின்றன. ஆனால் முழு திருப்தியை அளிப்பது அவர்களின் சொந்த குரலில் டப்பிங் பேசுவது தான். அப்படி ஒரு அளவில்லா மகிழ்ச்சி ரெஜினா கஸாண்ட்ராவுக்கு கிடைத்துள்ளது.
 
தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிப்பு மற்றும் அழகான தோற்றத்தால் மிகவும் கொண்டாடப்படும் ஒரு அழகான இளவரசி ரெஜினா. அடுத்து வெளியாக இருக்கும் மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் மூலம் அவரது திரையுலக கேரியரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி இருக்கிறார். படத்தில் அவரின் கவர்ச்சி அவதாரத்துக்காக  இடையறாத பெருமழையாக பாராட்டுக்களை பெற்று வரும் வேளையில், அவரே முதன்முறையாக சொந்தக் குரலில் டப்பிங்கும் பேசி இருக்கிறார்.
 
படக்குழுவில் உள்ள அனைவரும் அவரின் இந்த முயற்சியைப் பாராட்டி வரும் இந்த  வேளையில் படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் மிக மகிழ்ச்சியோடு கூறும்போது, “ரெஜினா இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவர் தமிழ் ஸ்க்ரிப்டை படித்ததும், தமிழில் அவரின் மொழி ஆளுமையையும் கண்டு மிகவும் ஆச்சர்யப்பட்டோம். அவர் நம்ம ஊரு சென்னை பொண்ணு, சென்னையில் தான் கல்லூரி படிப்பையும் முடித்தார். அவரிடம் ஏன் இதற்கு முன்பு சொந்த குரலில் டப்பிங் பேசவில்லை என்று கேட்டபோது, யாரும் டப்பிங் பேச என்னை இதுவரை அணுகவில்லை என்றார். ரெஜினா சொந்த குரலில் டப்பிங் பேச இயக்குநர் திரு வாய்ப்பு அளிக்க, ரெஜினா எந்த குறையும் இல்லாமல் பேசி, அவரின் மொழி ஆளுமையால் எங்களை பிரமிக்க வைத்தார். மேலும் அவரின் கேரக்டருக்கு அவரே டப்பிங் பேசியதன் மூலம், கதாபாத்திரம் முழுமை அடைந்ததாக அவர் தெரிவித்தார்.
 
கௌதம் கார்த்திக், நவரச நாயகன் கார்த்திக், ரெஜினா கஸாண்ட்ரா, வரலக்‌ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடித்திருக்கும் மிஸ்டர் சந்திரமௌலி போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை முடிக்கும் கட்டத்தில் உள்ளது. சாம் சிஎஸ் இசையமைத்த பாடல்கள் தரவரிசையில் முன்னணியில் இருக்கின்றன. படம் ரிலீஸ் குறித்த நல்ல செய்தியை விரைவில் அறிவிக்க உள்ளோம்”  என்றும் அவர் தெரிவித்தார்.