சந்தானம் , சுரபி, பெப்சி விஜயன், மாறன், சேது, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், முனீஷ் காந்த் டைகர் தங்கதுரை , மாசூம் சங்கர்,பிரதீப் ராவத் நடித்துள்ளனர்.பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார்.ரோகித் ஆபிரகாம் இசையமைத்துள்ளார்.
பேய்ப் பட சீசன் வந்து திரையுலகில் ஏற்படுத்திய மிகப்பெரிய மாற்றம் என்றால் வில்லன் நடிகர்களை எல்லாம் காமெடியன்களாக்கி சிரிப்பு மூட்ட வைத்தது தான்.அதனால்தான் மொட்டை ராஜேந்திரன், மகாநதி சங்கர் தொடங்கி இப்படத்தில் நடித்துள்ள பிரதீப் ராவத் வரை சிரிக்க வைக்கிறார்கள்.
சந்தானத்தின் டிரேட் மார்க் காமெடிகளுடன் அவரது நண்பர்கள் அணியும் சில பேய்களும் சேர்ந்து புதிய கூட்டணியில்
வந்துள்ள படம் தான் டி டி ரிட்டன்ஸ்.
பாண்டிச்சேரியில் பிரபல புள்ளியாக இருக்கும் பெப்சி விஜயனிடம் பணம் நகையைக் கொள்ளையடிக்க பிபின், முனீஷ்காந்த், மற்றும் மொட்டை ராஜேந்திரன் குழுக்கள் திட்டமிடுகின்றன.தன் காதலிக்காக 25 லட்ச ரூபாய் பணம் தேவைப்படுவதால் சந்தானமும் பணத்தைத் திருட முயல்கிறார் .ஒரு கட்டத்தில் அவரிடம் வரும் பணப்பை கைமாறி கார்மாறிப் பயணம் செய்கிறது.சந்தானத்தின் ஆட்கள் துரத்தி வரும் போலீசுக்குப் பயந்து அந்த பணப்பையை ஒரு பெரிய பங்களாவுக்கு ஒளித்து வைக்கிறார்கள்.மீண்டும் வந்து தேடும்போது பணப்பையைக் காணவில்லை.
பணத்தை மீட்க சந்தானம் தொடங்கி பல்வேறு நடிகர்கள் உள்ளே செல்கிறார்கள். ஆனால் அந்தப் பங்களாவுக்குள் சூதாட்டம் தடை செய்யப்பட்டதால் எரித்துக் கொல்லப்பட்ட பிரதீப் ராவத் மற்றும் அவரது குடும்ப ஆவிகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன.
உள்ளே நுழைந்தவர்கள் அந்த பேய்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள். ராவத், சந்தானத்திடம் தங்களிடம் கேம் விளையாடி ஜெயித்து வெளியேறலாம் ,
வென்றால் பணம் தோற்றால் மரணம் என்று வின்- ரன் என்ற ஒரு கேம் விளையாடுகிறார் .அதை ஏற்றுக் கொண்டு புத்திசாலித்தனமாகக் கையாண்டு சந்தானம் வெற்றி பெற்றாரா? அவர்கள் பணத்துடன் வெளியே றினார்களா?என்பதே கேள்விகள். அந்தப் பேயுடன் சந்தானம் கேம் விளையாடுகிறார். முடிவு என்ன? என்கிற இந்தக் கற்பனையைச் சிரிக்கச் சிரிக்க படமாக்கி இருக்கிறார்கள்.
சந்தானம், ரெடின் கிங்ஸ்லி, பெப்சி விஜயன், மாறன், சைதை சேது, முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், பிபின் என பலரும் காமெடி காட்சிகளில் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்து அணிக்காக ஆடியுள்ளார்கள். வித்தியாசமான பேயாக வில்லன் நடிகர் , பிரதீப் ராவத் வந்து கவர்கிறார். சுரபிக்கு பெரிய அளவில் படத்தில் வேலையில்லை .அளவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளார்.
சில படங்களில் சிரிக்க வைக்க வேண்டும் என்று எவ்வளவோ மெனக்கட்டு காட்சிகளை உருவாக்கி இருப்பார்கள் ஆனால் இந்தப் படத்தில் வரும் பாத்திரங்களின் சிறு சிறு அசைவுகளையும் சின்னச் சின்ன வசனங்களையும் கேட்டுப் பார்த்து நமக்குச் சிரிப்பு வருகிறது. அந்த வகையான சிரிப்பு பட ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பராமரித்துள்ளது படக் குழுவின் வெற்றி.
காமெடி கலாட்டா கிண்டல் கேலி பேய் என்று கலந்து கட்டி நம்மைச் சிரிக்க வைக்கிறார்கள்.
படத்தில் சந்தானமே இடத்தை அடைத்துக் கொண்டிருக்க நினைக்காமல் மற்ற நடிகர்களுக்கும் விளையாட இடம் கொடுத்துள்ளது சிறப்பு.
படத்தை ஒரு பெரிய படம் அளவிலான செலவில் எடுத்துள்ளார்கள். படத்திற்கான லொகேஷன் ஒளிப்பதிவு படத்தை தரப்படுத்தியுள்ளது. இசையும் பரவாயில்லை .ஆனால் இறுதியில் ஒலிக்கும் ஐ அம் சோ பிரபலம் பாடலை முன்பே காட்டி இருக்கலாம்.
சந்தானம் நம்பிக்கையுடன் கூறிவந்தது போல இந்தப் படம் அவரது வெற்றி வரிசையில் சேரும்.
டிடி ரிட்டர்ன்ஸ் முழு நீளமான சிரிப்புக்கு உத்திரவாதம்.