‘எல்ஜிஎம் ‘விமர்சனம்

தோனி என்டர்டெயின்மெண்ட் சார்பில் உருவாகி உள்ள படம் எல் ஜி எம் .அதாவது Let’s Get Married என்பதன் சுருக்கமே எல்ஜி எம்.
படத்தின் கதை, திரைக்கதை , இசை, இயக்கம் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி .

ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு,விடிவி கணேஷ்,வெங்கட் பிரபு,வினோதினி, ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஹரிஷ் கல்யாண், இவானா வை இரண்டு ஆண்டுகளாகக் காதலிக்கிறார்.ஹரிஷ் கல்யாண் சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால் அம்மா நதியாவின் அரவணைப்பில் வளர்கிறார். எதையும் பளிச்சென்று சொல்ல முடியாத, துணிவில்லாத ,தாழ்வுணாச்சி கொண்டவர். இவானாவோ அவருக்கு நேர் எதிர்.. எதையும் முகத்துக்கு நேரே கூறுபவர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் புரிதல் ஏற்பட்டு மனத்தால் இணைகிறார்கள்.

திருமணத்திற்கு பின் கூட்டுக் குடும்பமாக இணைந்து வாழ வேண்டும் என்பது ஹரிஷின் விருப்பம். அது தங்கள் மகிழ்ச்சிக்குத் தடையாக இருக்குமோ என்று இவானா நினைக்கிறார்.

இந்த நிலையில் திருமணத்திற்குப் பிறகு தன் தாயும், தன் மனைவியும் முரண்பாடுகள் பிணக்குகள் இல்லாமல் இணக்கமாய் வாழ ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் விதத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஹரிஷ் நினைக்கிறார்.ஒரு குடும்ப சிற்றுலா சென்று ஒத்திகை பார்ப்பது, என்று காதலர்கள் முடிவு எடுக்கிறார்கள்.அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதற்குப் பதில் சொல்வதே தோனி தயாரித்திருக்கும் Lets Get Married LGM படத்தின் ஒருவரி.

 

படத்தில் இடம்பெற்றுள்ள இளமை ததும்பும் காட்சிகள் தெளிவான அழகான இயல்பான ஒளிப்பதிவின் மூலம் கண்களுக்கு குளிர்ச்சியூட்டுகின்றன.

இயல்பான வசனங்கள் மூலம் கதை நகர்கிறது.

சுற்றுலா கூர்க் செல்வதாகத் திட்டம். கோவாவும் செல்கிறார்கள்.ஜாலி ட்ரிப் செல்லும் காட்சிகள் கலகலப்பாக உள்ளன.

நடிப்பைப் பொறுத்தவரை ஹரிஷ் கல்யாண் இவானா ஆகியோர் அந்த காதலர்களாகவே வாழ்ந்துள்ளார்கள்.காதலர்களின் மெல்லுணர்வுகள் இயல்பாக காட்டப்பட்டுள்ளன. அவர்களுக்குள் ஈகோவின் விளைவாக மனதில் எழும் சின்ன சின்ன அசைவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காதலர்களின் தோற்றமும் உடல் மொழியும் இளைஞர்களைக் கவரும். அவர்களுக்கு இணையாக நதியா நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். யோகி பாபு , விடிவி கணேஷ், ஹரீஷ் கல்யாணின் நண்பர்கள் என அனைவருமே கலகலப்பூட்டுகிறார்கள்.

காட்சிகளில் நிறைய பேசுகிறார்கள் என்பது படத்தில் சிறு பலவீனம். ஆனால் பேசிக் தீர்க்க வேண்டிய சிக்கலாக ஒன்று இருப்பதால் பேச வேண்டியுள்ளது.

மொத்தத்தில் இப்படம் இளமை துள்ளும் அனுபவமாக உள்ளது.

இளைஞர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் பிடிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.