மனித இனமே இன்று பாசமற்ற சூழலில் வாழ்கிறது. குறிப்பாக தமிழர்கள் போதையிலும், அதைவிட மோசமான சமூக ஒழுங்கின்மையை உண்டாக்கும் திரைப்படங்களாலும் திசைமாறிக் கொண்டிருக்கும் சூழலில், உறவுகளின் மேன்மையை உயர்த்திப் பிடிக்க வந்திருக்கும் கங்காரு படத்தைப் பாராட்டுகிறேன் என்று செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சாமி இயக்கிய கங்காரு படம் நேற்று வெளியானது. படத்துக்கு சாதகமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில், படத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
படம் குறித்து அவர் கூறியதாவது:
தம்பி சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சாமி இயக்கியுள்ள கங்காரு படத்தைப் பார்த்தேன். தங்கையின் மீது அளப்பற்ற பாசம் வைத்துள்ள அண்ணன், அந்தத் தங்கையைப் பிரியாமலிருக்க எந்த எல்லைக்கும் போவதை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சாமி. அவர் இதற்கு முன் இயக்கிய படங்களுக்கும் இந்தப் படத்துக்கும் இடையே அவ்வளவு வேறுபாடுகளைப் பார்க்க முடிகிறது.
அண்ணன் – தங்கை பாசத்தை மிக அழகாக, வேறு கோணத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
இன்றைக்கு தமிழர்கள் பாசமற்ற, உறவுகளற்ற ஒரு சூழலில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு சூழல்களால், ஒரு குடும்பத்தில் இரு குழந்தைகள், ஒரு குழந்தை என்ற நிலை வந்துவிட்டதால், எதிர்காலத்தில் அண்ணன், தங்கை, மாமன், அத்தை, அத்தாச்சி என்ற உறவு முறைகளே அருகிவிடுமோ என்ற அச்சம் உள்ளது. உடன்பிறந்தவர்கள் இருந்தால்தானே உறவுகள் நீடிக்கும்.
இதனால்தான் சமூகத்தில் வன்முறையும் வக்கிரங்களும் மலிந்து போய்விட்டன. பெண் என்றாலே அனுபவிக்கும் போகப் பொருள் என்ற நினைக்கும் அளவுக்குப் போய்விட்டார்கள் ஆண்கள். அதன் விளைவுதான் ஆறு வயது சிறுமி முதல் அறுபது வயது மூதாட்டி வரை சிதைக்கப்படுகிறார்கள். பெண்ணைப் பெற்றவன் வயிற்றில் நெருப்போடு காத்திருக்கிறான்.
தமிழர்கள் போதையிலும், அதைவிட மோசமான சமூக ஒழுங்கின்மையை உண்டாக்கும் திரைப்படங்களாலும் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி சூழ்நிலையில்தான் கொம்பன், கங்காரு போன்ற உறவுகளின் மேன்மையைச் சொல்லும் படங்கள் அவசியம் தேவைப்படுகின்றன. தங்கை என்ற உறவைக் கொண்டாடும் கங்காரு, இந்த தமிழ்ச் சமூகம் ஆதரிக்க வேண்டிய படம். ஒரு கங்காரு தன் குட்டியை ஈன்றதிலிருந்து அது தானாக தன் வேலைகளைச் செய்யும் வரை வயிற்றின் கதகதப்பிலேயே வைத்து வளர்த்து எடுக்கிறதே.. அப்படி தன் தங்கையைப் பாதுகாக்கும் அண்ணனை இந்தப் படத்தில் பார்த்தேன்.
கங்காரு படத்தை இயக்கிய சாமி, தயாரித்த சுரேஷ் காமாட்சி, நடித்த கலைஞர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற வேண்டும்,” என்றார்.