தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நேற்று மாலை ராதா பார்க் ஓட்டலில் நடந்த விழாவில் பதவியேற்றனர்.அவர்களை கேயார் வாழ்த்தினார்.
தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கதமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதில் கலைப்புலி எஸ்.தாணு வென்று தயாரிப்பாளர் சங்கத் தலைவராகியுள்ளார்.
தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் 25.1.15 காலை அண்ணாநகரிலுள்ள கந்தசாமி கல்லூரியில் காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை நடைபெற்றது. ‘கலைப்புலி’ எஸ்.தாணு, ஏ.எல்.அழகப்பன், மன்சூர் அலிகான், ஹென்றி, கெட்டப் ராஜேந்திரன் ஆகிய ஐவர் இந்தத்தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டனர்.
பி.எல்.தேனப்பன், கே.எஸ்.ஸ்ரீனிவாசன், கே.ராஜன், எஸ்.கதிரேசன் ஆகிய நால்வரும் துணைத்தலைவர் பதவிக்கும், டி.ஜி.தியாகராஜன், ஏ.வெங்கடேசன் ஆகிய இருவரும் பொருளாளர் பதவிக்கும் போட்டியிட்டனர். இதில் ஏற்கனவே செயலாளர் பதவிக்கு டி.சிவா, ராதாகிருஷ்ணன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.
இவை தவிர, நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான 21 பதவிகளுக்காக 73 பேர் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர். சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின்பேரில் நீதிபதி டாக்டர்.ஏ.கே.ராஜன் இதில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
970 உறுப்பினர்கள் ஓட்டளிக்கத் தகுதி பெற்றிருக்க, 770 தயாரிப்பாளர்கள் மட்டுமே ஓட்டளித்த நிலையில் மாலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் எஸ்.தாணு 565 ஓட்டுகள் பெற்று தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவரானார். அவரிடம் போட்டியிட்ட ஏ.எல்.அழகப்பன் 127 ஓட்டுகளும், மன்சூர் அலிகான் 21 ஓட்டுகளும் பெற்றனர்.
எஸ்.கதிரேசன் 488 ஓட்டுகளும், பி.எல்.தேனப்பன் 355 ஓட்டுகளும் பெற்று துணைத் தலைவர்களானார்கள். டி.ஜி.தியாகராஜன் 621 ஓட்டுகள் பெற்று பொருளாளரானார்.
தலைவராக தேர்வான கலைப்புலி எஸ்.தாணு ஊடகங்களிடம் பேசும் போது
“உலகில் உள்ள அனைத்து திரையுலக சங்கங்களுக்கும் முன்னோடி முதன்மை சங்கம் என பெயர் எடுக்க உழைப்போம். எங்கள் காலம் தமிழ் திரையுலகின் பொற்காலம் என சொல்லத்தக்க வகையில் பணியாற்றுவோம்.
தயாரிப்பாளர் சங்கம் அறவழியில் அமைதி வழியில் இழந்த பெருமையை மீட்டு இருக்கிறது. நம் முன்னோர்கள் ஏ.வி. மெய்யப்ப செட்டியார், எஸ்.எஸ்.வாசன், டி.ஆர். சுந்தரம், எல்.வி.பிரசாத், நாகிரெட்டி, ஏ.எல்.சீனிவாசன், டி.ராமானுஜம், டி.வி.எஸ். ராஜு போன்றோரால் காலம் காலமாக கட்டி காப்பாற்றப்பட்ட திரையுலகினரின் மாண்பினை புதிதாக தேர்வு பெற்றுள்ள நிர்வாகிகளாகிய நாங்கள் பேணி காத்திடுவோம். தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கும் மனுக்களை திரும்ப பெற்றவர்களுக்கும் போட்டியிட்டு வெற்ற வாய்ப்பை இழந்த சகோதரர்களுக்கும் சங்கத்தில் பொறுப்பினை தந்து ஒரு சேர கலையுலகை காப்போம்.
எதிர் காலத்தில் தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்து செயல் திட்டங்களையும் செயல் படுத்த நாளும் பணியாற்றுவோம். வெளிவராமல் முடங்கி கிடக்கும் 200–க்கும் மேற்பட்ட படங்களை திரையிட நடவடிக்கை எடுத்து தயாரிப்பாளர் நலனை பாதுகாப்போம். இதுவரை யாரும் செய்திராத சாதனைகளை செய்து சிறு பட தயாரிப்பாளர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருப்போம்.
தயாரிப்பாளர்கள் அனைவரும் திரையுலகின் மாண்பினை பேணி காத்திடவும் ஒன்று படவும் சபதம் ஏற்போம்.”இவ்வாறு தாணு கூறினார்.
வெற்றி பெற்றவர்களை தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவராக இதுவரை இருந்த கேயார் நேரில் வந்து வாழ்த்தினார்
வெற்றியடைந்த தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை ‘தமிழ் சினிமா ரிப்போர்ட்டர்’ வாழ்த்துகிறது..!