டாக்டர் அமர் ராமச்சந்திரன், நேஹா அமர் முதன்மைப் பாத்திரங்கள் ஏற்க இவர்களுடன் பாலாசிங், தீபக் பிரபாகர், பத்மஜா, நிமிஷா நம்பியார், குரு தட்சணா, தளபதி ஆனந்த், சரவணன் சொக்கம்பட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவ் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை பிரசாந்த் பிரணவ் செய்துள்ளார். ஔசேப்பச்சன் இசை அமைத்துள்ளார்.
படத்தொகுப்பை தீஜோ பி. வர்கீஸ், கலை இயக்கத்தை கைலாஸ் திரிப்பூனிதுறை ஆகியோர் கவனித்துள்ளனர்.
யாரோ ஒரு தனி மனிதனின் அகம்பாவ அரசியலால் உலகெங்கும் ஏதாவது ஒரு தேசத்தில் யுத்தம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. போர் என்பது சம்பந்தப்படாத மக்களுக்கு ஒரு செய்தி. சம்பந்தப்பட்டவர்களுக்கு பேரவலம்.போரின் உக்கிரமும் வக்கிரமும் வன்மமும் தீவிரமும் அளவிட முடியாத அழிவின் எல்லைக்குக் கொண்டு செல்பவை.
தமிழ் ஈழத்தில் இறுதி யுத்தம் நடைபெற்ற 2008 ஆம் ஆண்டு 17 ஜூலையில் கதை தொடங்கி நடக்கிறது.அப்படி இலங்கையில் போராளிகளின் போராட்டத்தினாலும் அதிகார வர்க்கத்தின் சூதாட்டத்தினாலும் ஏற்பட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் போரின் மூர்க்கத்தில் எங்கே செல்வது என்று செய்வதறியாது தவிக்கிறார்கள்.உயிர் பிழைத்தால் போதும் என்று தமிழகம் வருகிற ஒரு தந்தை மகள் பற்றிய கதைதான் இந்தத் ‘தாய் நிலம்’.
யுத்தத்தில் காதல் மனைவியைப் பறிகொடுத்து விட்டு உயிர் பிழைக்கத் தன் ஒரே மகளுடன் தமிழகம் வரும் நாயகன் அமர் ராமச்சந்திரன் இங்கே தமிழகத்தில் உள்ள தனது மனைவியின் உறவினர் வீட்டில் பெண் குழந்தையை ஒப்படைத்துவிட்டு மீண்டும் தாய் நிலம் செல்ல முடிவெடுத்து இங்கே வருகிறார். அவர் இங்கே எதிர்கொள்ளும் வாழ்க்கை தான் கதை,
இதில் போரினால் பாதிக்கப்பட்டுத் தமிழக வரும் குடும்பத் தலைவராக அமர் ராமச்சந்திரன் நடித்துள்ளார்.முகத்தில் எப்போதும் வருத்தத்தையும் துயரத்தையும் இழப்பின் வலியையும் தேக்கி வைத்துக் கொண்டு தனது மகள் மீது பாசத்தை வைத்துக்கொண்டு அந்தப் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். .அவரது மகள் தமிழினியாக வரும் சிறுமி நேஹா அமர் அதிகம் பேசாமல் தனது தோற்றத்தின் மூலமும் சின்ன சின்ன மழலை வார்த்தைகள் மூலமும் கவனிக்க வைக்கிறார்.
அவரது முகம் பார்ப்போர் மனதில் மனதில் பதிகிறது. இவர்களுக்கு தமிழகத்தில் உதவக்கூடிய நல்ல மனம் கொண்ட மனிதராக பாலாசிங் வருகிறார் .அவர் மறைந்து விட்டாலும் அந்தப் பாத்திரம் நினைவில் இருக்கும் .மேலும் இங்கு உள்ள நாயகன் எதிர்கொள்ளும் தமிழக மனிதர்களையும் அந்த அகதிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் சில மனிதர்களையும் பாத்திரங்கள் ஆக்கி உள்ளார்கள். அவர்களும் இயல்பான நடிப்பில் கவனிக்க வைக்கிறார்கள்.
இது ஒரு பரபரப்பான வணிக ரீதியான படம் இல்லை. என்றாலும் அந்தப் போரின் விளைவுகள் கூறும் துயரம் தோய்ந்த உணர்வோடு காட்சிகள் நகர்கின்றன. அதற்கேற்ற வகையில் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் கைகோர்த்து கொண்டு செல்கின்றன. இலங்கையின் போர்ச் சூழலைக் கண்முன் கொண்டு வந்ததுடன் தமிழகத்தில் அகதிகளாக வரும் அவர்கள் எதிர் கொள்ளும் சட்டச் சிக்கலையும் இங்கே யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத ஆதரவற்ற சூழலால் அவர்கள் படும் பாட்டையும் காட்சிகள் ஆக்கியிருக்கிறார் இயக்குநர். போரால் வீழ்ச்சியடைந்த ஒரு சமூகத்தின் அவலத்தை இரண்டு பாத்திரங்களை வைத்துக்கொண்டு வணிக மசாலாக்கள் இல்லாமல் சொல்ல முயன்றுள்ளார் இயக்குநர்.
அந்த வகையில் திரைப்பட சமரசங்களுக்கு இடம் தராமல் இந்தக் கதையை இயல்பாகக் கூற முயன்றுள்ள திரைப்பட முயற்சியைப் பாராட்டலாம்.
’தாய் நிலம் ’துயரம் தோய்ந்த முகம்.


