திருட்டு விசிடியை சட்டப்பூர்வமாக்கி விடுங்கள் என்று ஒரு சினிமா விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி பரபரப்பாகப் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு.
லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள ‘பகிரி’ என்கிற படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் இன்று நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட்டார். பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் இயக்குநர்கள் வசந்தபாலன்,ஏ.வெங்கடேசன், ரவிமரியா, சமுத்திரக்கனி, டி.பி.கஜேந்திரன், ஐந்து கோவிலான், மாரிமுத்து, இப்படத்தை எழுதி தயாரித்து இயக்கியுள்ள இயக்குநர் இசக்கி கார்வண்ணன் ,ஒளிப்பதிவாளர்கள் செழியன், வீரக்குமார்,,நடிகைகள் நமீதா, சாக்ஷி அகர்வால், ‘பகிரி’ நாயகன் பிரபு ரணவீரன், நாயகி ஷார்வியா, ஆதிரா, ரேகாநாயர், படத் தொகுப்பாளர் அத்தியப்பன் சிவா, ‘ஹரிதாஸ்’ வசனகர்த்தா ஏ.ஆர் வெங்கடேசன். ஆகியோரும் கலந்துகொண்டனர்.
விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி பேசும்போது,
“நாங்கள் இந்தப் ‘பகிரி’ இயக்குநர் இசக்கி கார்வண்ணன் எல்லாருமே ஒரே ஆலமரத்திலிருந்து வந்த விழுதுகள்.. இப்படத்தின் இசையமைப்பாளர் கருணாஸ் ஜல்லிக்கட்டு பற்றி சட்டசபையில் பேசியிருக்கிறார். மகிழ்ச்சி.
இன்று தமிழ் சினிமா குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கிறது. சிறு படங்களுக்கு ஒரே நம்பிக்கை ஊடகங்கள்தான். ஆனால் படம் பார்த்து விமர்சனங்கள் பத்திரிகைகளில் வருவதற்குள் திரையரங்கில் படம் இருப்பதில்லை. தூக்கி விடுகிறார்கள்.
இன்று சினிமாவை யாரும் பார்க்காமலில்லை. திருட்டு விசிடியில் கூட காசு கொடுத்துதான் சினிமா பார்க்கிறார்கள். இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யக்கூட காசு கொடுத்துதான் பார்க்கிறார்கள். திரையரங்கில் போய்ப் பார்க்க ஒரு குடும்பத்துக்கு 2000 ரூபாய் செலவாகிறது.
ஏன் எல்லாரையும் திரையரங்கு போய் படம் பார்க்கக் கட்டாயப்படுத்த வேண்டும் ? கள்ளச் சாராயத்தை ஒழிக்க டாஸ்மாக் வந்தது போல் திருட்டு விசிடியை ஒழிக்க அதையும் சட்டப்பூர்வமாக்கிவிடுங்கள்.
அதனால் வரும் வருமானத்தை ஏன் இழக்க வேண்டும்? திரையரங்கிற்கு மக்கள் வரவில்லை என்கிறார்கள். சினிமா டிக்கெட்டை விட பார்க்கிங் கட்டணம் அதிகம். பார்க்கிங்கிற்கே 250 ரூபாய் செலவாகிறது. .பின் திரையரங்கிற்கு எப்படி வருவார்கள்?
காலை, மதியம் காட்சிக்கு கேண்டீனில் வியாபாரம் இல்லையென்றால் படத்தைத் தூக்கி விடுகிறார்கள்.கேண்டீனில் வியாபாரம் செய்வதற்கா தயாரிப்பாளர்கள் கஷ்டப் பட்டுப் படம் எடுக்கிறார்கள்?
தயாரிப்பாளர்கள் இவ்வளவு கஷ்டப் பட்டு படம் எடுக்கிறோம்.
ஆனால் காலைக் காட்சிக்குக் கூட முழுதாக கூட்டம் வரவில்லை. ஆனால் அதில் நடித்த நடிகர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்கிறார்.
இவை எல்லாமே மாறவேண்டும். திரையரங்கிற்கு படம் கொடுக்கும் போது ஏன் சதவிகித அடிப்படையில் வியாபரம் செய்ய மறுக்கிறார்கள்?” என்றார்.
முன்னதாக புதிதாகத் தேர்வான தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியனின் நிர்வாகிகள் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் A.ஜான்,பொருளாளர் விஜய முரளி, துணைத்தலைவர் வி.கே. சுந்தர், இணைச்செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் ‘பகிரி’ படக் குழுவின் சார்பில் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டனர்.