நடிகர் சங்கம் சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அன்புடையீர் வணக்கம்,
தென்னிந்திய நடிகர் சங்கம் 2016 – 2018 காலத்திற்கான தேர்தல் நடந்து மிக சரியாக ஒரு வருடம் நிறைவடையும் இந்த நேரத்தில் எங்களுடைய செயல்பாடுகளை நாங்கள் திருப்பிப் பார்த்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.
அதில் சரி தவறுகளை ஆராய்ந்து எங்களை நாங்கள் நேர்த்தி செய்து கொள்வது அதன்படி நாங்கள் பயணிப்பது என்பது மிக முக்கியமான செயல்.பொறுப்பிற்கு வந்தவுடன், கடந்த 1 வருடங்களாக முறைப்படுத்தப்படாமல் இருந்த அனைத்து உறுப்பினர்களின் விவரங்களை நேரில் சென்று முறைப்படுத்தி அவர்களை வயது வாரியாக பிரித்து பொருளாதார தேவைகளை கருத்தில் கொண்டு 70 வயது முதல் 90 வயது வரை உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் இப்பொழுது மாத ஓய்வூதியம் சென்று கொண்டிருக்கிறது. அடுத்து, குழந்தைகளுக்கு கல்வி வசதிகள் மிக சரியாக செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் மூத்த கலைஞர்கள் அனைவரையும் கௌரவப்படுத்தும் விதமாக பி.யூ.சின்னப்பாவிற்கு நூற்றாண்டு விழா மற்றும் மருத்துவ அடையாள அட்டை வழங்கும் விழா போன்றவைகளை இதுவரை இல்லாத அளவில் சிறப்பாக செய்திருக்கிறோம்.
திரைத்துறை சார்ந்து, தின ஊதியத்தை நம்பி இருந்த உறுப்பினர்களுக்கு அவர்கள் இதுவரை உழைப்பிற்கான ஊதியம், மாதங்கள், வருடங்கள் கடந்து கொடுக்கப்பட்ட நிலைமாற்றி 10 தினங்களுக்குள் கிடைக்கும் வகையில் முறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.
தன்னிச்சையாக செயல்பட்டுக் கொண்டு இருந்த ARO க்கள் பிரிவு இப்போது சங்கத்தின் நேரடி கண்காணிப்பில் இருக்கிறது. சங்கம், உறுப்பினர்கள், AROக்கள் உறவு என்றுமில்லாத வகையில் சுமூகமாகவே உள்ளது. அங்கத்தினர்கள் அல்லாதவர்களை பணியமர்த்தும் முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டதால் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு வேலை கிடைக்கிறது.
பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேசி உறுப்பினர்களின் குழந்தைகள் சுமார் 40 மாணவ மாணவியர்களுக்கு இலவச பட்டப்படிப்பும் வழங்கப்பட்டுள்ளது. 80வயதுக்கு மேல் உள்ள உறுப்பினர்களுக்கு இதுவரை 500 ரூபாய் கொடுக்கப்பட்டு வந்தது. அதை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. 70 வயது நிரம்பிய உறுப்பினர்களுக்கு 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கி வருகிறோம். உடல் ஊனமுற்ற உறுப்பினர்களுக்கு 1500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் 70 வயதுக்கு குறைவாக உள்ள உறுப்பினர்களுக்கு ரூபாய் 500 வழங்கப்பட்டு வருகிறது.பல்வேறு தனியார் கல்வி அறக்கட்டளைகள் மூலம் உறுப்பினர்களுக்கு தலா 1000 ரூபாய் வீதம் மாத ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மட்டும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையாக ரூபாய் 7,88,500/- வழங்கப்பட்டுள்ளது.
நிர்வாகக் பரிந்துரையின் பேரில், செயற்குழு, நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவின் ஒப்புதலோடு சங்க மூத்த உறுப்பினர்களை கொண்ட கட்டிட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு அனைத்து முதற்கட்ட பணிகளும் முழுமையடைந்திருக்கிறது. மிகப்பெரிய போராட்டத்திற்கிடையில் நட்சத்திர கிரிக்கெட் நடத்தி இன்று பொருளாதாரத்தை மேம்படுத்தியிருக்கிறோம்.
இவை அனைத்தும் 1 வருட காலத்தில் செய்து முடிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாங்கள் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறோம். இந்த செயல்பாட்டில் ஏதாவது குறைகள், சந்தேகங்கள் அல்லது விமர்சனங்கள் இருந்தால், இதை தெளிவுப்படுத்த வேண்டியது எங்களுடைய கடமை என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்.
அதற்கு நேரடியாக எழுத்து மூலமாக சட்டப்படி எங்களை தொடர்பு கொள்பவர்களை நாங்கள் என்றுமே மதித்து அவர்களுக்கு தெளிவுப்படுத்த கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், திட்டமிட்டு சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள் அதற்கு முரண்பாடாக இருந்தது. அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை எங்களால் யூகிக்க முடிகிறது. சங்கம் தனிப்பட்ட நபர்கள் மீது தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்காது, சட்டம் வழி காட்டும் திசையிலேயே பயணிக்கும்.
இப்பொறுப்பை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் போதே எதிர்ப்புகள் வரும் என்பதை எதிர்பார்த்தே இருந்தோம். அவைகளை எதிர்கொள்ளும் தின்மையும் உறுப்பினர்களின் ஆதரவும் இருக்கும் பட்சத்தில் பயந்து பணிவது என்கிற “இழிச்செயலுக்கே இடமில்லை”. அரசின் முத்திரையில் இருக்கும் “வாய்மையே வெல்லும்” என்பதே எங்களை வழி நடத்தி செல்லும் தாரக மந்திரமாகும்.
உறுப்பினர்களின் நலனுக்காவும், நேர்மையோடு உழைத்துக் கொண்டிருக்கும் இந்த நிர்வாகத்தை சீர்குலைக்க வேண்டும் என்று யாராவது நினைத்தால்,அதைவிட இரண்டு மடங்கு பாய்ச்சலில் அதை எதிர் கொள்வோம் என்பதை இந்த நேரத்தில் உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறோம்.
தேவையில்லாமல் சங்கத்தின் மீது அரசியல் சாயம் பூசப்படுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அரசாங்கத்தோடு இணைந்தும், இயைந்தும் நடந்து கொள்வது சங்கத்தின் வளர்ச்சிக்கு முக்கியம் என்பதை நாங்கள் அறிந்தே இருக்கிறோம். நடந்து முடிந்த சங்க தேர்தலை நியாயமான முறையில் நடத்திட வழி செய்த மாண்புமிகு புரட்சி தலைவி டாக்டர் “அம்மா” அவர்களுக்கு சங்கம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது.
நாங்கள் அவர்களை அரசியல்வாதியாக பார்க்கவில்லை மக்கள் மனதார ஏற்றுக் கொண்ட அரசியாகப் பார்க்கிறோம். எங்கள் சங்கத்தின் மரியாதைக்குரிய மூத்த உறுப்பினராக இன்றளவும் அவர் தங்கக் கைகளால் அடிக்கல் நாட்டும் தருணத்திற்காக காத்து கொண்டு இருக்கிறோம்.
“கடற்கரையில் கட்டப்படும் மணற்கோட்டையல்ல அது, காலங்கடந்து சரித்திரம் படைக்கும் சின்னம்”. எல்லாக் கோணங்களிலும், சட்ட ரீதியாக பொருளாதார ரீதியாக, நடைமுறை ரீதியாக ஆயிரம் முறை அலச வேண்டியிருக்கிறது. அதற்கான காலத்தை அத்திட்டம் எடுத்துக் கொள்ளும்.
எங்கள் நிர்வாக குழு தங்கள் சொந்த வேலையும் கவனித்துக் கொண்டு, இரவும் பகலாக வாட்ஸ் அப், மின்னஞ்சல், குறுஞ்செய்தி என்று நவீன தொலைத்தொடர்புகள் மூலமாகவும், நேரம் கிட்டும் போது நேரிலும் சந்தித்தும், சங்கத்துப் பணிகளையும், வளர்ச்சியைப்பற்றிய கனவுகளையும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
கட்டிடம் கட்ட வேண்டுமென்பது தேவை, ஆனால் அதற்கு காலம் அனுமதிக்க வேண்டும். சட்டப்படியான அனைத்து முறைகளிலும் அது கட்டப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். சமீபத்தில் நடிகர் சங்கத்தினுடைய செயல்பாடுகளில் உறுப்பினர்களின் நலன், சட்டத்திட்டங்களை மீறி தங்களுடைய சுயநலத்திற்காக செயல்பட்ட சில உறுப்பினர்களை தற்காலிகமாக நீக்குவதற்கான தன்னிலை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம். சிலர் அதற்காக நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். நீதிமன்றத்தில் அந்த செயல்பாடுகள் நிலுவையில் இருக்கும் பொழுதே, சில நபர்களை சேர்த்துக் கொண்டு அலுவலக ஊழியர்களை தாக்குவது போன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அதை சாதாரணமாக எங்களால் எடுத்துக் கொள்ள முடியாது. இது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதற்காக மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம் . அதற்காக அவசர சிறப்பு செயற்குழு கூட்டம் உடனடியாக நடத்தப்படும். அதன்பின் நிர்வாகம் சார்ந்த அனைத்து முடிவுகளையும், ஒரு வருடத்திற்கான சிறப்பு கூட்டம் நடக்கயிருக்கிறது. அந்த கூட்டத்தில், நாங்கள் பல முடிவுகளை எடுத்து நாங்கள் இன்னும் வேகமாகவும், நேர்மையாகவும் செயல்படுவோம், என்றும் எதற்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் என்பதை இந்த தருணத்தில் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
சங்க கட்டிடத்தை கட்டுவதை தடுப்பதற்கும், நிர்வாகத்தை நேர்மையான சட்டப்படியான வழிமுறையில் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாததாலும் புதிய நிர்வாகத்திற்கு நற்பெயர் வருவதை பொறுத்துக்கொள்ள முடியாததாலும், சங்கத்திற்கு நஷ்டங்களை ஏற்படுத்திய சில நபர்களின் தூண்டுதலாலும் இச்சம்பவம் நடந்து இருக்கிறது. இது குறித்து 27.08.2016 அன்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சங்க மேலாளரால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை 29.08.2016 அன்று சென்னை காவல் துறை ஆணையரிடமும் நடிகர் சங்க தலைவர் அவர்களால் இது குறித்து விளக்கி புகார் அளிக்க இருக்கிறார் என்பதை நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது.