திரைப்பட இயக்குநர்கள் தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும்என்று கவிக்கோ அப்துல்ரகுமான் அறிவுரைகூறினார்.இது பற்றிய விவரம் வருமாறு:
தமிழ்த்திரைப்பட இயக்குநர் லிங்குசாமி ஏற்கெனவே’ லிங்கூ’ என்கிற தனது முதல் கவிதைத் தொகுப்பு நூலின் மூலம் பரவலாக அறியப்பட்டவர். அவர் இப்போது தனது இரண்டாவது படைப்பாக ‘லிங்கூ-2’ ‘ வாக ‘செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம்’ என்கிற ஹைக்கூ கவிதைகள் நூலைக் கொண்டு வந்திருக்கிறார். இதை டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பித்துள்ளது.இதன் வெளியீட்டு விழாவை வித்தியாசமாக நடத்தி புதுமை செய்திருந்தார். லிங்குசாமியின் நண்பரும் இயக்குநருமான கௌதம் வாசுதேவ்மேனனின் திருவான்மியூர் கடற்கரையோர அலுவலகத்தில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
‘லிங்கூ-2’ கவிதை நூலை கவிக்கோ அப்துல்ரகுமான் வெளியிட இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ்மேனனும் பார்த்திபனும் பெற்றுக்கொண்டார்கள்.
விழாவுக்குத் தலைமையேற்று கவிக்கோ அப்துல்ரகுமான் இலக்கிய அனுபவப் பகிர்வைத் தொடங்கி வைத்தார். அவர் பேசும் போது, ” இங்கே இயக்குநர்கள் ,கவிஞர்கள் இருவேறு ரகத்தினராய் காணப்படுபவர்கள் இதன்மூலம் இணைந்திருப்பது நல்ல மாற்றம்.கவிஞர்கள் என்பவர்கள் பேனாவால் கவிதை எழுதுகிறவர்கள்.இயக்குநர்கள் என்பவர்கள் கேமராவால் கவிதை எழுதுகிறவர்கள்.அவ்வளவுதான்.
திரைப்பட இயக்குநர்களுக்கு ஒரு அறிவுரை சொல்கிறேன்.நீங்கள் இலக்கியம் படிக்க வேண்டும். தமிழில் சங்க இலக்கியத்தில் எவ்வளவோ நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. ‘நெடுநல் வாடை’ படியுங்கள் நக்கீரர் எவ்வளவு அழகாக காட்சிகளை விஷுவலைஸ் செய்திருக்கிறார் என்பது புரியும்.இப்படி ஏராளமான காட்சிப்படுத்தல்களை இலக்கியங்களில் காணமுடியும். அதனால் நீங்கள் இலக்கியம் படிக்க வேண்டும்.அதிலிருந்து விஷுவலுக்கு நிறைய டிப்ஸ் கிடைக்கும்.” என்றார்.