‘நதி’ விமர்சனம்

சாம் ஜோன்ஸ், ஆனந்தி இருவரும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள்.

சாம் ஜோன்ஸ் கூச்ச சுபாவம் கொண்டவர் என்றால் ஆனந்தி கலகலப்பானவர்.

ஆனந்தியின் குடும்பத்தினரைப் பழிவாங்க தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் அரசியலில் முன்னுக்கு செல்வதற்காக துடிக்கும் அரசியல்வாதி கரு. பழனியப்பன்.

கல்லூரியில் படிக்கும்போது நண்பர்களாகப் பழகி வருபவர்களைக் காதலர்களாகச் சித்தரித்துப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார். அதனால் வரும் சிக்கல்களை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்?

கரு.பழனியப்பனின் வில்லத்தனம் வெற்றி பெற்றதா என்பதுதான் நதி படத்தின் திரைக்கதை செல்லும் பாதை.

கதை சாதிப் பிரச்சினை, மதுரை, அரசியல், கௌரவம், வன்முறை என்று பழைய கருத்து போலத் தோன்றினாலும் அதைப் படத்தில் வெளிப்படுத்தக்கூடிய காட்சிகள் நன்றாக உள்ளன. இது ஓர்உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட கதையாக இருப்பதால் காட்சிகளில் நம்பகத்தன்மை கூடுகிறது.

நாயகனாக கூச்ச சுபாவம் உள்ள கல்லூரி மாணவராக நடித்திருக்கும் சாம் அந்த பாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி பொருந்தி இருக்கிறார்.ஆனந்தியை சந்திக்கும்போது அவர் காட்டும் தயக்கமும் விலகலும் பாத்திரத்தை நம்ப வைக்கிறது.

கயல் ஆனந்தி தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பினைப் புரிந்து கொண்டு தேவையான நடிப்பினை வழங்கியுள்ளார். நாயகன் சாம் ஜோன்ஸின் தந்தையாக முனிஷ்காந்த் நடித்துள்ளார். இதுவரை அசட்டு நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் , குணச்சித்திர நடிகராக மாறியுள்ளார். அரசியலில் கரு. பழனியப்பனன் எதிர் அணியில் இருப்போர், ஆனந்தியின் தந்தையாக வரும் இயக்குநர் ஏ. வெங்கடேஷ், பெரியப்பாவாக வரும் வேலராமமூர்த்தி இருவரும்தான்.

கரு.பழனியப்பன் அரசியல்வாதிகளை வாங்கு வாங்கு என்று வாங்கியுள்ளார்.அரசியல்வாதிகளின் முரண்பட்ட பேச்சுகளையும் செயல்பாடுகளையும் நினைவூட்டி உள்ளார்.

ஒரு தெளிவான கதையை எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த காட்சிகளில் சுவாரஸ்யம் கூட்டித் திருத்தமான படமாக உருவாக்கி இருக்கும் இயக்குநர் தாமரைச்செல்வனைப் பாராட்டலாம்.அனுபவம் மிக்க ஒளிப்பதிவாளரான எம் .எஸ். பிரபுவுக்கு ஏற்ற தீனி இப்படத்தில் கிடைக்கவில்லை.விபுநிலன் தாமஸ் இசை சுமார் ரகம்.

திரைக்கதையில் மேலும் நகாசு செய்திருந்தால் இந்தப் படத்துக்குக் கூடுதல் கவனம் கிடைத்திருக்கும், நதியின் எழுச்சி பெரிதாக இருந்திருக்கும்.