‘மஹாவீர்யர்’ விமர்சனம்

டைம் ட்ராவல் எனப்படும் காலத்தின் பயணம் சார்ந்த கதை இது. மன்னர் காலத்திற்கும் நடப்பு காலத்திற்கும் என காலப்பயணத்தை கதை ஆக்கி படமாக்கி இருக்கிறார்கள். நவீன இலக்கியங்களில் பின்பற்றப்படும் சர்ரியலிஸ பாணி என்று கூறலாம்.

அரசர்கள் காலத்தில் நடந்த குற்றம் ஒன்றுக்கான தீர்ப்பைத் தற்போதைய நவீன நீதிமன்றம் வழங்கினால் எப்படியிருக்கும் என்ற வினோதமான கற்பனையே இந்த `மஹாவீர்யர்’ (Mahaveeryar) படம்.

இந்தப் பாணி கற்பனைக்கெட்டாத சுவாரசியங்களுக்கு இடம் கொடுக்கும் ஒரு கதை சொல்லும் முறை .ஆனால் அதை நிகழ்த்திக் காட்டாமல் விளையாடி இருக்கிறார்கள்.

ராஜாவாக இருக்கும் லாலுக்குத் தீராத விக்கல் சிக்கல்.எந்த மருத்துவத்திலும் கட்டுப்படவில்லை. தன் ஆயுள் குறைவதை அறிந்தவர் இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நாட்டிலேயே அழகான ஒரு பெண்ணை அழைத்து வர ஆணையிடுகிறார்.மந்திரியும் தேடிப் புறப்படுகிறார்.இது ஒரு பக்கம்.

நிகழ்காலத்தில் அபூர்ணாநந்தன் என்னும் சாமியாராக ஊருக்குள்
வருகிறார் நிவின் பாலி. அருகிலிருக்கும் கோவிலின் சிலை ஒன்றைத் திருடிவிட்டதாக அவர்மேல் குற்றம் சுமத்தப்படுகிறது.

வழக்கு நீதிமன்றம் செல்கிறது. அதே நேரத்தில் ராஜா லால் மீது கிராமத்து ஏழைப் பெண் தொடுத்துள்ள வழக்கும் நீதிமன்றம் வருகிறது.

அரசர்கள் காலத்தில் நடந்த குற்றம் ஒன்றுக்கான தீர்ப்பைத் தற்போதைய நவீன நீதிமன்றம் வழங்கினால் எப்படியிருக்கும் என்ற அசாதாரண கற்பனையாக இப்படம் உருவாகி இருக்கிறது.

இந்த வழக்கின் விசாரணையில் காலத்தின் பயணம், அதீத மாயாஜாலக் கற்பனை, மந்திர தந்திரங்கள் எல்லாம் இணைத்து விளையாடும் நீதிமன்றக் காட்சிகளின் நாடகம் என்று கலக்கிக் கொண்டால் அதுதான் இப்படம்.

சாமியார் அபூர்ணாநந்தனாக நிவின் பாலி. இயல்பாகவே அந்த நமட்டுச்சிரிப்பு, குறும்புகள் போன்ற நகைச்சுவை அம்சங்கள் அவருக்கு கை கொடுத்துள்ளன. எனவே முதல் பாதை முழுக்க அவர் புகுந்து விளையாடுகிறார்.

குறிப்பாகச் சிலைத் திருட்டு வழக்கில் சாட்சிகளையும் காவலர்களையும் தன் வாதத் திறமையால் திணறடிக்கும் அந்தக் காட்சிகளில் அவரது நடிப்பு அபாரம்.

‘இடைவேளை’ வரும் வரை இந்த ‘மஹாவீர்யரின்’ கலகல நிவின் மட்டுமே.

அரசராக வரும் லால், சில இடங்களில் மிரட்டினாலும், பல இடங்களில் மிகை நடிப்பால் அலுப்பூட்டுகிறார்.

நீதிபதியாக வரும் சித்திக்கிற்கும் வக்கீலாக வரும் லாலு அலெக்ஸுக்கும் முக்கியமான பாத்திரங்கள். இரண்டு அனுபவசாலிகளும் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அமைச்சராக வரும் ஆசிப் அலிக்குக் கம்பீரமான ‘அடியாள்’ வேடம்.

முக்கிய உணர்ச்சிமிக்க காட்சிகளிலும் தன் பாத்திரத்திற்கு ஏற்றவாறு இறுக்கமான முகத்துடனே வந்து போகிறார். படத்தின் பேரழகியாக ஷான்வி ஶ்ரீவஸ்தவாவுக்கு ஆழமானதொரு பாத்திரம்.

சம்பந்தமில்லாத இருவேறு காலங்களை ஒன்றிணைக்க முயன்றிருக்கிறது எம்.முகுந்தனின் கதை.

வித்தியாசமான கதை சொல்லும் முறையில் சமூகக் கருத்து, அரசியல் கேலி, கிண்டல் எல்லாம் கலந்து கட்டி தாளித்துச் சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார் இயக்குநர்
இயக்குநர் அப்ரீட் ஷைன்.

ஒளிப்பதிவாளர் சந்துரு செல்வராஜ் இருவேறு காலத்தில் நடக்கும் காட்சிகளுக்கு நம்பும்படி உயிர்கொடுத்திருக்கிறார்.

இஷான் சாப்ராவின் பின்னணி இசை சுமாரான காட்சிகளையும் தூக்கி நிறுத்துகிறது.

அதிகாரம் உள்ளவர்கள் வைத்தது தான் எல்லாம். இங்கு ஏழைகளுக்குத்தான் விதிகள் சட்டமெல்லாம் என்கிற சமகாலப் போக்கை பேச முயன்று இருக்கிறது படம்.

நீதிபதிகளின் செயல்களை நம்பகமில்லாமல் காட்டி இருப்பதும் சில கசமுசா வசனங்களும் படத்தின் பலவீனம். படம் சொல்ல வந்த செய்தியை ஒரு விதத்தில் சொல்லாததால் அதன் வீர்யம் இழந்து நிற்கிறது.