ஒருநாயை நம்பி படமெடுத்திருப்பதாக சத்யராஜ் கூறினார்.
‘நாயைக் கூட்டி வந்து நடுமனையில் வைத்தமாதிரி’ என்பார்கள். நிஜமாகவே ஒரு நாயை அழைத்து வந்து விழா ‘நாய்’ கனாக மேடையில் அமரவைத்திருந்தார்கள். .‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் சிபிராஜ்தான் நாயகன் என்றாலும் இதுவும் ஒரு நாயகன் போலும். அதாவது ‘நாய்’கன்.
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் உள்ளே நுழையும் போதே படத்தின் நாயகனாக நடித்திருக்கும் நாய் நம்மை கொஞ்சம் மிரட்டலுடன் வரவேற்றது.வழக்கம் போல புகைப்படக்காரர்களும் நாயையும் விடாமல் புகைப்படம் எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார்கள்.
60 வயதிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சத்யராஜ் நடிப்பில் அசத்திக் கொண்டிருக்க, அவருடைய மகன் சிபிராஜ், நான்கு வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்காமல் உண்மையிலேயே மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் மூலம் ரீ-என்ட்ரி ஆகிறார்.
படத்தின் டைட்டில் ரோலில் ‘இடா’ என்ற பெங்களூரைச் சேர்ந்த நாய்தான் நடிக்கிறது என்று படம் சம்பந்தப்பட்ட அனைவருமே பெருந்தன்மையாக ஒப்புக் கொள்கிறார்கள். பல ‘நாய்க் கடி’ வாங்கித்தான் படத்தில் நடித்திருக்கிறாராம் சிபிராஜ். படம் நன்றாக வந்திருப்பதைப் பார்த்து இன்னும் எத்தனை கடி வேண்டுமானாலும் வாங்கியிருக்கலாம் என்கிறார்.
சத்யராஜ் வழக்கம் போல கலகலப்பாக பேச ஆரம்பித்தார். “நான் இன்னமும் ஷுட்டிங் போயிட்டு, தெலுங்கு, ஹிந்தி, தமிழ் இப்படி பிஸியா நடிச்சிட்டிருக்கேன். வீட்டுக்கு வந்தால் சிபி கதை கேட்டுக்கிட்டிருப்பார். . இது சிபிராஜ் ‘நாணயம்’ நடிக்கும்முன் சொல்லப்பட்ட கதை. சிபிராஜுக்கு பட வாய்ப்புகள் இல்லாமலில்லை. கடந்த சில வருஷமா அதேதான் நடந்துக்கிட்டிருக்கு.வருகிறவர்கள் எல்லாரும் ஒரே மாதிரி அரைத்தமாவு கதைகளையே சொல்கிறார்கள். எனவேதான் நடிக்கவில்லை.என்னப்பா நீ இவ்வளவு கதை கேக்கற, ஒரு கதை கூடவா உனக்குப் பிடிக்கலைன்னு கேப்பேன்.இல்லப்பா, உங்க காலம் வேற, எங்க காலம் வேற, இப்பலாம் ஒரு படம் ஓடலைன்னா கூட க்ளோஸ்தான். அதனாலதான், அவ்வளவு பொறுமையா கேட்டுக்கிட்டிருக்கேன்னு சொல்வார்.
நான் எல்லாம் அந்தக் காலத்துல கிடைக்கிற படத்துல நடிச்சித் தள்ளிக்கிட்டே இருப்பேன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, நான்…இப்படி நாங்களலாம் வருஷத்துக்கு பத்து படம் மேல கூட நடிச்சிக்கிட்டிருப்போம். சில சமயம் தீபாவளிக்கெல்லாம் ரெண்டு படம் கூட ரிலீஸ் ஆகியிருக்கு. பத்து படத்துல ஏதாவது ரெண்டு படம் நம்மளைக் காப்பாத்திடும். ஆனால், இப்ப ரொம்ப பார்த்துப் பார்த்து செய்ய வேண்டியதாயிருக்கு.
நாயை நம்பி ஒரு படமெடுத்திருக்கிறோம்.நாய், நாயாக உழைச்சிருக்கு, சிபிராஜ் பேயா உழைச்சிருக்காரு படத்தைப் பார்த்துட்டு காஸ்மோ வில்லேஜ் தமிழ்நாடு முழுக்க 250 தியேட்டர்கள்ல ரிலீஸ் பண்றாங்க,” இவ்வாறு சத்யராஜ் பேசினார்.