‘நீயே பிரபஞ்சம் ‘இதோ ஓர் புதுமை ஆல்பம்!
மனிதன் இயற்கையைப் புறக்கணித்து தீங்கு செய்வதைக் கண்டித்தும் எச்சரித்தும், இயற்கை மனிதர்களுக்குப் பாடுவதாக ஓர் ஒற்றைப் பாடல் ஆல்பம் உருவாகியிருக்கிறது. இதை இசையமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம் உருவாக்கியிருக்கிறார். அவர்வெண்ணிலா வீடு, சோன்பப்படி, டீக்கடை ராஜா, விசிறி, நிழல் உலகம், ரிங் ரோடு (கன்னடம்), ரகு, கீழக்காடு ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட குறும் படங்களுக்கும், விளம்பரப் படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். “நீயே பிரபஞ்சம்” இந்த ஒற்றைப் பாடல் முயற்சி பற்றி அவர் பேசும் போது,
“இது என் குழு படைப்பு. இந்தப்பாடல் எதைச் சார்ந்தது என்றால், வெகுநாட்களாகவே இயற்கையை மனிதர்களாகிய நாம் இழிவு செய்து கொண்டே இருக்கிறோம்; சேதப்படுத்தி கொண்டே இருக்கிறோம்;எல்லாமும் நமக்கு வழங்கிய இயற்கையை ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. பல வகையிலும் இயற்கைக்கு எதிராகவும் இருக்கிறோம். இறைவன் இயற்கையையும் உயிரினங்களையும் படைத்தான். மனிதன் படைத்தவனை உதாசீனப்படுத்தி, இயற்கையையும் உயிரினங்களையும் கொடுமை செய்கிறான், கொலை செய்கிறான், மாசு படுத்துகிறான், தான் இயற்கையுடன் சார்ந்து வாழ்வதை மறந்து, செயற்கை வழியில் சென்று மிருகமாக மாறிவிட்டான்.அனைத்து உயிர்களுக்கும் இயற்கைக்கும் அநீதி செய்கிறான்.அவனுக்குத் தெரியாது, இயற்கை ஒரு நாள் அவனை ‘வச்சு செய்யும்’ என்று.
தற்போது உலகமே முடங்கி கிடக்கிறது, மனித உயிர் இனங்களைத் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் மிக மகிழ்ச்சியாய், சுதந்திரமாய் இன்புற்று வாழ்கின்றன. தற்போது வந்திருக்கும் கொரோனா, மனித இனத்திற்கு ஓர் எச்சரிக்கை. தன்னிலை மறந்த மனிதனுக்கு, அதிரவைக்கும் ஒரு நினைவூட்டல். இனிவரும் காலங்களுக்கு இயற்கைக்குத் துணையாக மனித இனம் நிச்சயம் இருக்கும்.
தற்போது நான் இசையமைத்திருக்கும் இந்த பாடல், மேலே கூறிய அனைத்து கருத்துகளும் உள்ளடங்கியது.” என்கிறார்.
‘நீயே பிரபஞ்சம்’ என்கிற தலைப்பில் இதற்கானபாடல் வரிகளை பாடலாசிரியர் எஸ். ஞானகரவேல் எழுதி இருக்கிறார்.’வானமாய் நின்று கையசைத்தேன்
பூமியால் உன்னை நான் அணைத்தேன்
பச்சை இலைகளில் புன்னகைத்தேன்
சென்றாய் என்னை புறக்கணித்தே’ என்று தொடங்குகிறது பாடல் .
‘கடவுளை நீ தினம் தேடியே அலைகிறாய் எங்கோ?
இயற்கையும் தெய்வமும் ஒன்றென நீ உணரும் நாள் என்றோ ?என்று செல்கிற இப் பாடல்,’நீர் நிலம் காற்று நான், ஆகாயம் நெருப்பு நான் ,பேரண்ட வெளிச்சம் நான், பிரபஞ்ச இருட்டும் நான்’ என்று விரிந்து செல்கிறது.
தன்ராஜ் மாணிக்கம் மேலும் பேசும்போது “இயற்கை கொடூரமாய் ஆடியதை பார்த்துள்ளோம், பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அதுவே,இயற்கை நமக்காக ஒரு பாடல் பாடினால், எவ்வாறு இருக்கும்?அதுதான் இந்தப் பாடல் “நீயே பிரபஞ்சம்” இந்தப் பாடலை நான் இசையமைத்து பாடியும் உள்ளேன். மேலும் டிரெண்ட் மியூசிக் இப்பாடலின் உரிமைகளைப் பெற்றுள்ளது.மனிதனுக்கு தற்போது மிக அவசியமான கருத்துப் பாடல். “என்கிறார் திருப்தியுடன்.
பாடல்: நீயே பிரபஞ்சம்
இசை: தன்ராஜ் மாணிக்கம்
பாடல் வரிகள்: ச. ஞானகரவேல்
பாடல் மையக்கருத்து:மனோஜ் முருகன்
படத் தொகுப்பு:ராம் கோபி
தயாரிப்பு:DM புரொடக்சன்ஸ்