படப்பிடிப்பு இடைவேளைகளில் இயக்குநர்களை நடிகர் நடிகைகள் வறுத்தெடுக்கிறார்கள் என்று படவிழாவில் பேரரசு பேசினார்.
ஆனந்த் வீணா வழங்கும் ‘ரு’ படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை ஆர் கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு பேசும் போது ” இந்தப் படத்தில்தான் முதல்முதலில் சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்தேன். மகிழ்ச்சி. பேசிய சம்பளம் கொடுத்தார்கள் இங்கே விஜிபி குழுமத்தின் வி.ஜி.சந்தோஷம் வந்திருக்கிறார்கள்.நான் அவர் அருகில் அமரும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
அவரைப் பார்க்கும் போது என் உதவி இயக்குநர் வாழ்க்கை நினைவுக்கு வருகிறது. நான் ராமநாராயணன் சாரிடம்உதவி இயக்குநராக இருந்தேன். அப்போது ஏவிஎம் ஸ்டுடியோ, விஜயா ஸ்டுடியோ, வாகினி ஸ்டுடியோ, கற்பகம் ஸ்டுடியோ, அருணாசலம் ஸ்டுடியோ, ஏ.ஆர்.எஸ் கார்டன் ஸ்டுடியோ போன்ற ஸ்டுடியோவில் எல்லாம் படப்பிடிப்பு என்றால் உதவி இயக்குநர்கள் அனைவரும் போவோம். விஜிபி தங்கக் கடற்கரையில் படப்பிடிப்பு என்றால் அது சிட்டி இல்லை. வெளியூர் படப்பிடிப்பு மாதிரி நினைப்பார்கள்.
ஒருநாள் அங்கே படப்பிடிப்பு நடந்தது. அதனால் போகிற ஆட்களைக் குறைத்துக் கொண்டார்கள். எனனை விட்டுவிட்டு போய் விட்டார்கள். நான் சும்மா இருக்கவில்லை. வடபழனியில் பஸ் பிடித்து விஜிபி தங்கக் கடற்கரை போய்விட்டேன் அப்போது எனக்கு அவ்வளவு விவரம் போதாது.உள்ளே விடமாட்டார்கள் என்று டிக்கெட்டும் எடுத்துக் கொண்டு போய் விட்டேன்.
அப்போது எனக்கு அவ்வளவு விவரம் போதாது. இப்போதும்எனக்கு அவ்வளவு விவரம் போதாதுதான். என்னைப் பார்த்ததும் எல்லாரும் இவனா, இவனைத்தான் விட்டுவிட்டு வந்தோமே என்று ஷாக் ரியாக்ஷன் கொடுத்தார்கள்.
படப்பிடிப்பில் புகுந்து கொண்டு வேலை பார்த்தேன்.. சாயங்காலம் பேட்டா பிரச்சினை வருமே. இவனுக்கு பேட்டா கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்களே என்று மாலை பேட்டா வாங்காமலேயே மறுபடியும் பஸ் ஏறி வடபழனி வந்து சேர்ந்தேன். இதில் பேரரசுவாகவே நடிக்கிறேன். முதலில் சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்த படமிதுதான்.
உதவி இயக்குநராக இருந்த பொதெல்லாம் படப்பிடிப்பின் இடையில் நடிகர் நடிகைகள் சிரித்து ஜாலியாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். அழுது புரண்டு நடித்துவிட்டுக் கூட அப்படி சிரித்து ஜாலியாகப் பேசிக் கொண்டிருப்பார்கள்.அப்படி என்னதான் பேசுவார்கள் என்று ஒட்டுக் கேட்க ஆசை. ஆனால் அப்போது கவனிக்க நேரமில்லை. அப்படி என்னதான் பேசுகிறார்கள் என்று இந்தப் படப்பிடிப்பில் கவனித்தேன்.
அவரவர் படப்பிடிப்பில் நடந்ததை பற்றிப் பேசினார்கள். அந்தந்த இயக்குநர்கள் சொதப்பியதை எல்லாம் போட்டு கலகலப்பாக வறுத்து எடுத்தார்கள்.அதிலிருந்து நாம் இப்படிக் கிண்டல் பேசும்படி இயக்கக் கூடாது என்று பாடம் கற்றேன். “என்றார்.
நிகழ்ச்சியில் ‘ரு’ படத்தின் நாயகன் இர்பான், நாயகி ரக்ஷிதா, தன்மயா,சாண்ட்ரா ‘கொஞ்சம் நடிங்கபாஸ்’ ஆதவன், ரவி, மீரா கிருஷ்ணா, இயக்குநர்கள் பேரரசு, திருமலை, ரவிமரியா, ‘ரு’ படத்தின் இயக்குநர் சி.சதாசிவம் ‘ரு’ தயாரிப்பாளர்கள் ஆனந்த், வீணா, பி.எல். தேனப்பன். தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.’ரு’ படத்தின் பெயர் தமிழ் எண் 5 -ஐக் குறிக்குமாம்.