ஆசியாக் கண்டத்தின் சிறந்த திரைப்படதிற்கான விருது’ உட்பட நான்கு விருதுகளை பெற்று இருக்கிறது, இயக்குநர் பிரியதர்ஷனின் ‘சில சமயங்களில்’ திரைப்படம்
‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ சார்பில் பிரபுதேவா – டாக்டர் கே கணேஷ் மற்றும் ‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’ சார்பில் இயக்குநர் விஜய் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் ‘சில சமயங்களில்’. இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி, பல சர்வேதசத் திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற இந்த திரைப்படம் தற்போது ‘ஜெய்ப்பூர் சர்வேதேச திரைப்பட விழாவில்’ மூன்று விருதுகளையும், சென்னை சர்வேதச திரைப்பட விழாவில் ஒரு விருதையும் பெற்று இருக்கிறது.
பிரகாஷ் ராஜ், நாசர், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரங்களிலும், வருண் மற்றும் சண்முகராஜன் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் இந்த ‘சில சமயங்களில்’ திரைப்படம் வருகின்ற பிப்ரவரி மாதம் வெளியாகிறது.
“விருது பெறுவது என்பது உழைப்புக்கும் சிந்தனைக்கும் கிடைக்கும் அங்கீகாரம் ஆகும். திறமையான நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் ஒருங்கிணைப்பு மூலமே இது சாத்தியம். இந்த விருதுகளை பெற்று இருப்பதை மிக பெரிய கௌரவமாக நான் கருதுகிறேன். சிறந்த முழு நீள திரைப்படத்திற்கான பிரிவின் கீழ் எங்களின் ‘சில சமயங்களில்’ – ‘கிரீன் ரோஸ் அவார்ட்’ மற்றும் ‘யெல்லோ ரோஸ் அவார்ட்’ ஆகிய விருதுகளை பெற்று இருக்கின்றது. அதுமட்டுமின்றி ஆசிய கண்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த திரைப்படதிற்கான விருதையும் ‘சில சமயங்களில்’ பெற்று இருக்கின்றது. மேலும் சென்னையில் நடைபெற்ற சர்வேதச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான ஜூரி விருதையும் எங்கள் படம் வாங்கி இருக்கிறது. இந்த விருதுகளை, ‘சில சமயங்களில்’ படத்தின் ஆணி வேராகச் செயல்பட்ட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர், கலை இயக்குநர் சாபு சிரில், வசனம் எழுதிய இயக்குநர் விஜய், படத்தொகுப்பாளர் பீனா பால் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்” என்கிறார் இயக்குநர் பிரியதர்ஷன்.