பள்ளிக்கூட பின்னணியில் உருவாகியுள்ள மற்றும் ஒரு திரைப்படம். இயக்குநராக அறிமுகம் ராஜமோகன்.சந்தோஷ் தயாநிதி இசையில், சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில் விஜய் வேலு குட்டி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. .தனியார் பள்ளிகள் கொடி கட்டிப் பறக்கும் சேலம் மாவட்டத்தில் இக்கதை நடக்கிறது.
பிரபல கல்வி நிறுவனம் ஒன்று ஆண்கள் பள்ளி, இருபால் மாணவர்கள் படிக்கும் பள்ளி என இரண்டு பள்ளிகள் நடத்துகிறது. நிர்வாக வசதிக்காக இரண்டையும் ஒன்றிணைக்கிறார்கள்.
இரண்டு பள்ளிகளையும் சேர்ந்த மாணவர்கள் எலியும் பூனையுமாக மோதிக் கொண்டிருக்கிறார்கள். இணைந்த பிறகு என்ன ஆகிறது? கடைசி பெஞ்சுக்கு அவர்களுக்குள் போட்டி நடக்கிறது. யார் சுமாராக படிப்பது மோசமாக படிப்பது என்று அவர்களுக்குள் பந்தயமே நிகழ்கிறது. இதற்கிடையே காதல், தற்கொலை முயற்சிக் கடிதம் ,அதைத் தேடும் படலம் என்று ஒரு முழு நீள நாடகமாக படம் சென்று விடுகிறது.
பள்ளி மாணவர்களாக ஆர்ஜே விக்னேஷ்காந்த், அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத், அதிர்ச்சி அருண், விவேக் போன்ற யூடியூப் சேனல் முகங்களே இதில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.அவர்களது முகத்தோற்றம் திரைத் தோற்றத்திற்குப் பெரிதும் உதவவில்லை.ஆளாளுக்கு நகைச்சுவை செய்கிறார்கள்.அவர்களுக்குள்ள பாத்திரச் சித்தரிப்புகள் பெரிதாக மனதில் பதியவில்லை. ஏதோ நகைச்சுவை செய்கிறார்கள் போனால் போகிறது என்று விட்டுவிடலாம்.ஆனால் காதல், சென்டிமென்டில் , செயற்கைத்தனமே மேலோங்கி நிற்கிறது.முற்றிய முகங்கள் பள்ளி மாணவர்கள் என்பதை நம்ப தயங்கச் செய்கின்றன.
பள்ளி மாணவியாக வரும் அம்மு அபிராமிக்குப் பெரிதாக நடிப்பு வேலை இல்லை.
போஸ் வெங்கட், வினோதினி, சுப்பு பஞ்சு, அபிராமி, ஓ.ஏ.கே சுந்தர் என ஏராளமான மூத்த நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள் இருந்தாலும் அவர்களைச் சரியான படி படத்தில் பயன்படுத்திக்கொள்ளவில்லை.படத்திற்குப் பலமாக அவர்களது முகங்களை மட்டும் தேடிய இயக்குநர் அவர்களது நடிப்பைப் பயன்படுத்தவில்லை
அதிகம் பேசாமலேயே பேராசிரியர் ஞானசம்பந்தன் வருகிறார்.பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி கூட ஒன்று இரண்டு வசனங்களோடு போய்விடுகிறார்.
மதுரை முத்து நகைச்சுவை என்கிற பெயரில் படுத்துகிறார். மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் ஜி.பி.முத்து உள்பட எந்தப் பாத்திரமும் மனதில் நிற்கவில்லை.
சுவாரசியம் இல்லாத காட்சிகள் ,லாஜிக் இல்லாத சம்பவங்கள் , திரைக்கதை,பழக்கப்பட்டு போன நகைச்சுவைகள் என துணுக்குத் தோரணங்களாக காட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன.இயக்குநர் ராஜ்மோகன் திரைப்பட உருவாக்கத்தை எளிதாக நினைத்து விட்டார் போலும்.
எனவே படமே ஒரு யூடியூப் காணொலிகளின் தொகுப்பாக மாறி, பலவீனப்பட்டு நிற்கிறது.