‘மாவீரன் ‘விமர்சனம்

ஹாலிவுட் படங்களில் தான் ஃபேன்டஸியைச் சரியாகக் கையாண்டு வெற்றி பெற்று வருகிறார்கள். நம்மவர்கள் அதைத் தொடுவதற்குச் சற்று அச்சம் காட்டுவார்கள். அதுவும் சமூகக் கதைகளில் பேண்டஸியைக் கலப்பது என்றால் குழப்பம் பலருக்கும் வரும். ஆனால் மாவீரன் என்கிற  ஃபேன்டஸி ரகப் படத்தில் மக்கள் பிரச்சினையைக் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.அந்தத் தெளிவுக்கும் துணிவுக்குமே இயக்குநர் மடோன் அஸ்வினைப் பாராட்டலாம். இவர் ஏற்கெனவே’ மண்டேலா’ படத்தின் மூலம் சமூகக் கதையை அழகாகச் சொல்லி வெற்றி பெற்றவர்.

தனக்கென ஒரு வணிக மதிப்பை வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் இந்த ரகப் படத்தில் நடிக்கத் துணிந்ததற்கு அவரைப் பாராட்டலாம்.
அதனால்தான் வழக்கமான சிவகார்த்திகேயன் மசாலாவில் இருந்து விலகி நின்றுத் தெரிகிறது இந்தப் படம்.

படத்தின் கதை என்ன?

சிவகார்த்திகேயன் ஒரு காமிக்ஸ் ஓவியர்.நிறைய கேலிச் சித்திரங்கள் வரைகிறார்.சென்னையின் கூவம் நதிக்கரையில் தனது அம்மா, தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். கூவம் ஓரம் உள்ள மக்களை அரசு அப்புறப்படுத்துகிறது.புதிதாகக் கட்டி இருக்கும் அடுக்குமாடி பகுதிக்கு மாற்றுகிறது.ஆனால் முறைகேடும் ஊழலும் கலந்து கட்டப்பட்ட அந்த தரம் இல்லாத கட்டடத்தால் அப்பகுதி மக்களுக்குப் பிரச்சினை. அதன் பின்னே உள்ள அதிகார வர்க்கத்தை மக்களால் எதிர்க்க முடியவில்லை. அங்கே வாழும் எளிய மனிதரான சிவகார்த்திகேயனாலும் மோத முடியவில்லை.ஒரு சந்தர்ப்பத்தில் அம்மா திட்டியதால் தற்கொலைக்கு முயல்கிறார் சிவகார்த்திகேயன் .அப்போது அவரது காதில் ஒரு குரல் கேட்கிறது. எங்கிருந்தோ அசரீரியாக வரும் அந்தக் குரல் அவரை எப்படி ஆட்டுவிக்கிறது? அவர் எப்படி மாவீரன் ஆகிறார்? தரம் இல்லாத குடியிருப்பு வாசிகளான அம்மக்களை அவர் காப்பாற்றினாரா? இல்லையா ?அதிகார வர்க்கத்திற்கு அவரது பதில் என்ன ? என்பதற்கெல்லாம் பதில் அளித்து படத்தில் விளக்கி இருக்கிறார் இயக்குநர் மடோன் அஸ்வின்.

ஓவியராக சத்யா பாத்திரத்தில் வரும் அப்பாவியாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார் .பிறகு அதிரடி மாவீரனாக மாறிக் கலக்குகிறார்.அவர் தனதான கலகலப்பு பாதையில் இருந்து விலகி, பயம், நடுக்கம் ,பதற்றம் என்று அந்தப் பாத்திரத்தில் மாறுபட்ட தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எனவே இது வேறு மாதிரியான பாத்திரம்தான்.அந்த முகமிலிக் குரல் அவருக்குள் ஏற்படுத்தும் மாற்றங்களை முக பாவங்களில் காட்டி உள்ளார் . பின்னர் வீறுகொண்டு எழும் ஆவேச நாயகனாகவும் அவர் ஸ்கோர் செய்கிறார்.
அந்த அசரீரிக்குரலுக்கு உரிய குரல் விஜய் சேதுபதி.அவர் குரலில் வரும் வசனங்களும் ரசிக்க வைப்பவை.

கதாநாயகி அதிதி ஷங்கர் முதல் பாதியில் வருகிறார். மனதில் பதிகிறார். இரண்டாவது பாதியில் ஆளையே காணோம்.சிவாவின் அம்மாவாக வரும் சரிதா தன்மானம் கொண்ட ஒரு தாயாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.மோனிஷா பிலஸ்ஸி தங்கையாக வருகிறார். அவ்வளவுதான்.
மிஷ்கின் இதில் வில்லனாக வருகிறார்.மிரட்டல் பாத்திரத்தை அனாயாசமாகச் செய்துள்ளார்.இன்னொரு வில்லன் சுனில் .அவரை மேலும் பயன்படுத்தி இருக்கலாம்.

யோகி பாபு தனது நகைச்சுவையால் பார்ப்பவர்களைக் கலகலப்பூட்டுகிறார்.அவரது பாத்திரம் படத்திற்கு சாதகமாக உள்ளது. படத்தின் சிறு சிறு பள்ளங்களை அவரது நகைச்சுவை நிரப்புகிறது.சமன் செய்து விடுகிறது.

குடிசை மாற்று வாரியத்தின் குளறுபடிகளையும் அவலத்தையும் அழகாகப் பதிவு செய்துள்ளார்கள்.விது அய்யனாவின் ஒளிப்பதிவு சிறப்பு. பரத்சங்கரின் இசையும் சோடை போகவில்லை. பிலோமின் ராஜ் படத்தொகுப்பும் பொருத்தம்.

படத்தில் ஆங்காங்கே வரும் காமிக்ஸ் ஓவியங்களும் கவனிக்க வைக்கின்றன.ஓடாத படத்தில் நல்ல கருத்துக்களைச் சொல்வதை விட வணிக ரீதியில் வெற்றி பெறும் கதையில் நல்ல கருத்துக்களைச் சொல்வதுதான் மக்களைச் சென்று சேரும் என்பதை உணர்ந்து இயக்குநர் சரியாகப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்ல வேண்டும். ‘மாவீரன்’ ஏமாற்ற மாட்டான்.