சாதனை இயக்குநர் கே.பாலசந்தர் காலமான போது அவருடைய உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ,மற்றும் நடிகர் நடிககள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். கமல் எங்கே என்கிற கேள்வி எல்லாரது முகத்திலும் இருந்தது.
உத்தம வில்லன்’ பட வேலைகளுக்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருந்ததால், பாலசந்தரின் இறுதிச்சடங்கில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.
முதலில் கே.பாலசந்தரது உடல் இன்று 25.12.14 இறுதிச் சடங்கு செய்யப்படுவதாக இருந்தது. எனவே, அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு வந்து நேற்று இரவு பாலசந்தருக்கு கமல் நேரில் அஞ்சலி செலுத்துவார் எனக் கூறப்பட்டது. ஆனால், தங்கள் முடிவை மாற்றிக் கொண்ட குடும்பத்தார் நேற்றே இறுதிச் சடங்கை நடத்தி முடித்தனர். இதனால் தனது சினிமா குருவாகப் பாவித்த பாலசந்தரின் உடலைக் கடைசியாக நேரில் காணும் வாய்ப்பை இழந்தார் கமல். ஆனபோதும், பாலசந்தரின் இறுதி அஞ்சலிக்குக் கூட வர முடியாத படி அவர் கற்றுக் கொடுத்த சினிமா வேலைகளில் ஈடுபட்டிருப்பதே அவருக்கு தான் செலுத்தும் இறுதி அஞ்சலி தான் என கமல் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது :-
“”தமிழ் திரையுலகுக்கு தனது வாழ்நாளில் இத்தகைய தொடர் கொடையைக் கொடுத்தவர் வேறு யாரும் உள்ளார்களா என்ற கேள்விக்கே இடமில்லாமல் வாழ்ந்த ஒரு கொடை வள்ளல் கே.பாலசந்தர்.
100 படங்கள் இயக்கியதோடு அல்லாமல், பல நூறு கலைஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர்களில் நானும் ஒருவன்.
அவர் எனது வற்புறுத்தலின் பேரில் பங்கு கொண்ட “உத்தம வில்லன்’ என்ற அந்தப் பதிவு என் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான பதிவாகும். வர்த்தகத்திற்கு அப்பாற்பட்ட என் வாழ்வின் ஒரு பதிவாக அது அமைகிறது.
அதற்கு மட்டுமல்ல, நான் எத்தனை விஷயங்களுக்காக இயக்குநர் பாலசந்தருக்கு நன்றி சொல்வது என்று தெரியவில்லை. இதுவே என் அஞ்சலி… சடங்குகளில் அதிக நாட்டமில்லாத நான், அவரது இறுதிச் சடங்கில் கூட பங்கு கொள்ள முடியாமல் அவர் எனக்கு அளித்த இந்த சினிமா தொழிலைச் செய்து கொண்டிருக்கிறேன். இதுவே அவருக்கு நான் செய்யும் அஞ்சலியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
கே. பாலசந்தரின் குரல் அவரது மாணவர்களின் கலைவழி மூலம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும். அதைக் கேட்க வைப்பது என் கடமையும்கூட” என்றார் கமல்ஹாசன்.