புன்னகை இளவரசி சினேகா தனது பிறந்த நாளை திறன்குன்றியோர் இல்லத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினார். ஒவ்வொரு பிறந்த நாளையும் ஆடம்பரமாக கொண்டாடாமல் அனாதைக் குழந்தைகள் இல்லத்திலோ, அல்லது திறன்குன்றியோர் இல்லத்திலோ அவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடி வருகிறார். இது வருடம் தவறாமல் நடந்து வருகிறது.
சமீபத்தில் விஹான் என்ற ஆண் குழந்தைக்குத் தாயான பின்பு வெளியே எங்கும் தலை காட்டாமல் இருந்து வந்தார் சினேகா. அக்டோபர் பன்னிரண்டாம் தேதி கொளத்தூரில் உள்ள ஸ்ரீ அருணோதயம் சாரிட்டபிள் ட்ரஸ்ட்டில் உள்ள மன நலம் குன்றிய குழந்தைகள் நடுவே தனது கணவர் பிரசன்னாவுடன் வந்து கொண்டாடினார். அவர்களுக்கு கேக் ஊட்டியும் உணவு பரிமாறியும் மகிழ்ந்தார்.
நிறைவாக ட்யூப் மூலமாக உணவு பெற்றுக்கொள்ளும் நிலையில் உள்ள குழந்தைகள் நிரம்பிய அறைக்கு சென்ற சினேகா அவர்களின் நிலையைப் பார்த்ததும் தாங்க முடியாமல் கலங்கி அழ ஆரம்பித்துவிட்டார். மகிழ்வாக கொண்டாட வந்தவர் அழத்தொடங்கியதும் அங்கு பணிபுரிந்த ஊழியர்களும் கலங்கிவிட்டனர். பின் பிரசன்னா அவரைத் தேற்றி அழைத்து வந்து காரில் உட்கார வைத்து அழைத்துச் சென்றார்.
