போராட்டம் வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம் : ‘ டிராஃபிக் ராமசாமி ‘ விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு !

 போராட்டம் வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம் என்று ‘ டிராஃபிக் ராமசாமி ‘ விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.

கிரீன் சிக்னல் வழங்கும்’ டிராஃபிக் ராமசாமி ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று மாலை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது, பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.

விழாவில் இயக்குநரும் கதை நாயகனுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது,

“நான் 40 நாட்களுக்கு முன்பு இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் கேட்ட போது விழா எப்போது? என்றவர் , எங்கிருந்தாலும் வருவேன் என்றார். அவருக்கு நன்றி. காதலா , கோபமா , வீரமா , சமூக சிந்தனையா , மண் வாசனையா எனதயும் வித்தியாசமான முறையில் எழுதுபவர் அவர்.

உலகமே வியக்கும் ஷங்கருக்கு அழைப்பு தரவில்லை. மெசேஜ்தான் அனுப்பினேன். உறுதியாக வருவேன் என்றார். அவருக்கு நன்றி. அவர் என்னிடம் திட்டு வாங்காமல் புத்திசாலித்தனமாக இருந்தவர் .அதனால் தான் என்னுடன் 17 படங்களில் பணியாற்ற முடிந்தது.இங்கே இருக்கும் ராஜேஷ் மெய்மறந்து இருந்த போது , என்னை இவரெல்லாம் ஒரு டைரக்டரா என்றவர்.

இந்த விக்கி என்னுடன் 6 ஆண்டுகள் இருந்தார். அவர் சொன்ன கதைகள் பிடிக்கவில்லை என்று சொல்லி வந்தேன். ஒரு நாள் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கைக் கதையைப் படிக்கக் கொடுத்தார். இரவே படித்து விட்டேன். மறுநாளே படமாக எடுக்கலாம் என்றேன். முடிவு செய்ததும் ஐந்தாறு முறை டிராபிக் ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். அவரது நடை உடை பாவனைகளை உற்று நோக்கினேன். எனக்குள் பொருத்திக் கொண்டேன்.

இது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால் கூட குழந்தை அழுதால் தான் கிடைக்கும், போராட வேண்டாம் என்றால் எப்படி. ? காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா? மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது . ? தூத்துக்குடி போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது ? போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் . டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும் ” இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.

விழாவில் , திருமதி ஷோபா சந்திரசேகரன் ,இயக்குநர்கள் எம்.ராஜேஷ் , பொன்ராம் , சாமி , நடிகைகள் அம்பிகா , ரோகினி , உபாசனா , அபர்னதி ,நடிகர்கள் ஆர்.கே.சுரேஷ் , மோகன்ராம், சேத்தன் , தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கதிரேசன் , தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் , சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி , ஒளிப்பதிவாளர் குகன் , இசையமைப்பாளர் பாலமுரளி பாலு , கலை இயக்குநர் வனராஜ் , எடிட்டர் பிரபாகர் , படத்தின் இயக்குநர் விக்கி ஆகியோரும் கலந்து கொண்டனர் .விழாவை முன்னிட்டு  அரங்க மேடையில் நீதிமன்ற செட் போடப்பட்டு இருந்தது.
விழாவில் பேசியவர்கள் சாட்சிக் கூண்டில் நின்று கொண்டு தான் பேசினார்கள்
. இது பார்வையாளர்களுக்கு  புதுமையான தோற்றத்தையும் அனுபவத்தையும்
கொடுத்தது.