இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் – விஜய் சேதுபதி கூட்டணி இணைந்து நடித்துள்ள படம். இக்கூட்டணியே படத்துக்குப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.
சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் இருக்கும் மாணவர்களை தன்னுடைய ஆதாயத்துக்காக தவறான முறையில் பயன்படுத்தும் விஜய் சேதுபதியை ஒரு கல்லூரி பேராசிரியரான விஜய் ரெய்டு விடுவதுதான் ’மாஸ்டர்’ படத்தின் மையக்கரு. இதை மூன்று மணிநேர சினிமாவாக மாற்றியதில் சில இடங்களில் ஜெயித்திருக்கும் லோகேஷ் கனகராஜ் பல இடங்களில் பின்னடைந்திருக்கிறார்.

கதைப்படி விஜய் ஹீரோவாக இருந்தாலும் படத்தின் நிஜ ஹீரோவாக படத்தையே தாங்கி நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. படத்தின் மிகப்பெரிய பலம் அவர் வரும் காட்சிகளே.
முதல் பாதியில் குடிக்கு அடிமையான பேராசிரியராகவும் இரண்டாம் பாதியில் சீர்த்திருத்த பள்ளி ஆசிரியராகவும் விஜய்க்கு இப்படத்தில் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
படத்துக்குப் படம் ஏதோவொரு அரசியலை முன்னிறுத்திப் பேசும் விஜய், இந்த படத்தில் அரசியல் குறித்த விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் இருப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பேசியுள்ளார். மேலும் அரசியல்வாதிகள் பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதாகவும் மக்கள் சொல்வதை அரசாங்கம் கேட்பதில்லை என்பது போன்ற அரசியல் வசனங்களும் இப்படத்தில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.
’மாஸ்டர்’ விஜய் படமாகவும் இல்லாமல், லோகேஷ் கனகராஜ் படமாகவும் இல்லாமல் இரண்டும் கலந்த கலவையாகவே இருக்கிறது. ஆங்காங்கே விஜய்க்குரிய காட்சிகளும், சில இடங்களில் லோகேஷின் டைரக்டர் டச் மட்டும் தெரிகின்றன.

படம் முழுக்க ஏகப்பட்ட துணைப் பாத்திரங்கள். நாசர், அழகம்பெருமாள், ஸ்ரீமன், சஞ்சீவ், பிரேம், நாகேந்திர பிரசாத், ஸ்ரீநாத், ரம்யா, சாய் தீனா, ரமேஷ் திலக், சேத்தன், கல்யாணி நடராஜன், லல்லு, தீனா, சுனில் ரெட்டி, அருண் அலெக்ஸாண்டர், விஜய் முருகன் என்று படம் முழுக்கத் தெரிந்த முகங்களே தென்படுகிறார்கள். ஆனால், இவர்கள் யாருக்கும் முக்கியத்துவம் தரப்படவில்லை. சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷண் ஆகியோரும் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.இதையெல்லாம் மீறி (மாஸ்டர்) மகேந்திரன், சிபி புவன சந்திரன், பூவையார், அர்ஜுன் தாஸ் ஆகியோர் மட்டும் சில காட்சிகளில் தங்கள் இருப்பைப் பதிவு செய்கிறார்கள்.
விஜய் சேதுபதிக்கு அடுத்தபடியாக படத்தின் இன்னொரு பலம் அனிருத்தின் பின்னணி இசை. கதைக்கு தேவையில்லாத வகையில் பாடல்கள் தனியே தெரிந்தாலும் பின்னணி இசையில் படத்துக்குக் கூடுதலாக பலம் சேர்க்க முயற்சி செய்திருக்கிறார் அனிருத்.
வழிதவறிப் போகும் சிறுவர்களை வாழவைக்கப் போராடுவதன் அவசியத்தையும் சமூக அக்கறையோடு பதிவு செய்த விதத்தில் மட்டும் ‘மாஸ்டர்’ கண்ணியமான பெயரைச் சம்பாதித்துள்ளது.
மொத்தத்தில் மாஸ்டர் படத்தை விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்புக்காகவும் அவர் வரும் காட்சிகளுக்காகவுமே கூட ஒருமுறை பார்க்கலாம். அப்புறம் விஜய் ரசிகர்களுக்கான மசாலா தீனியும் இருக்கவே செய்கிறது.