லைகா நிறுவனம் வெளியிட விஜய் இயக்கத்தில் வந்துள்ளது ‘மிஷன் சாப்டர் 1’.அருண் விஜய், எமி ஜாக்சன் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
சென்டிமென்ட் கதைகளுக்கு புகழ் பெற்ற இயக்குநர் விஜய் முழு நீள ஆக்சன் படமாகவும் அதில் செண்டிமெண்ட்டையும் கலந்து உருவாக்கி உள்ள படம் தான் மிஷன் சாப்டர்1.
படத்தின் முதல் காட்சியே பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவி விட்டதாகத் தொடங்குகிறது.தசரா மிஷன் என்ற பெயரில் இந்தியாவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டினைத் குலைப்பதே தீவிரவாதிகளது நோக்கம். அவர்களது முயற்சி இந்தியாவில் கண்டுபிடிக்கப்படவே லண்டன் சிறையில் உள்ள தங்களது கூட்டாளிகளை மீட்க அவர்கள் லண்டன் செல்கின்றனர்.
அருண் விஜய் தனது மகளின் மருத்துவத்திற்காக லண்டன் செல்கிறார். அங்கே அவரை சில கொள்ளையர்கள் தாக்க இவர் திருப்பித் தாக்க போலீஸ் வந்து பிடித்துச் செல்கிறது .சிறை செல்கிறார். பாகிஸ்தான் தீவிரவாதிகள் உள்ள அந்தச் சிறைக்குத்தான் அருண் விஜய்யும் செல்கிறார்.அந்தச் சிறையில் இருக்கும் தீவிரவாதிகளை விடுவிக்க,அவர்களின் தலைவன் கைதிகளிடையே கலவரத்தைத் தூண்டி விடுகிறான்.கைதிகள் தப்பிக்க முயல்கிறார்கள். சிறையை களேபரமாகிறது.
இதே நேரத்தில் தனது மகளுக்கு அவசரமாக ஆபரேஷன் செய்ய வேண்டி உள்ளது. இந்த கலவரத்திற்கு நடுவில் தனது குழந்தையை எப்படிக் காப்பாற்றுகிறார்? தசரா மிஷன் என்ற பெயரில் இந்தியாவில் பெரிய நாசகரமான சதியைச் செய்யத் திட்டமிட்டுள்ள அந்தத் தீவிரவாதிகளின் பின்னணி அறிந்து அவர்களை அவர் என்ன செய்கிறார் என்பதுதான் மிஷன் சாப்டர் 1 படம்.
.ASPEN தயாரிப்பில் லைகா நிறுவன வெளியீட்டில் ‘மிஷன் சாப்டர் 1’ வெளி வருகிறது
படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிறையின் பின்னணியில் படமாக்கப் பட்டுள்ளன.
சிறைக்குள் மற்றும் இண்டோரில் நடக்கும் சண்டைக் காட்சிகளில் சண்டை இயக்குநரின் உழைப்பு தெரிகிறது. அருண் விஜய்யும் சலிக்காமல் சண்டை போட்டு விறுவிறுக்க வைக்கிறார்.தீவிரவாதிகள் இந்தியாவில் கலவரம் ஏற்படுத்த சதி போன்ற வழக்கமான பாதையில் சென்றாலும் படத்தில் சண்டை காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன.
படத்தின் முதல் பாதி மாறுபட்ட காட்சிகளுடன், வித்தியாசமாக நகர்கிறது. இரண்டாம் பாதி அதிகம் சண்டைக் காட்சிகளுடன் அதிரடி ஆக்சன் பாதைக்குத் திரும்புகிறது.
தோற்றம் உடல் மொழி என்று அருண் விஜய்யிடம் இளமையும் மிடுக்கும் கொடி கட்டி பறக்கிறது.தனக்கான நடிப்பு வாய்ப்புகளை அழகாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். சண்டைக்காட்சிகளில் அதகளம் செய்கிறார். அதே நேரம் ஒரு பெண் குழந்தையின் தந்தையாகவும் தனது உணர்வுகளைக் காட்டியுள்ளார்.படத்தின் மறுபாதியில் அவர் ஒரு ஜெயிலராகத் தெரிவது அவரது பாத்திரத்தை மேலும் முறுக்கேற்றுகிறது.படத்திற்காக அவரது உழைப்பு கண் முன் தெரியும் காட்சிகளில் தெரிகிறது.
எதிர்மறை நிழல் படிந்தது போல் தோன்றும் பாத்திரத்தில் எமி ஜாக்சன் வருகிறார்.அவரும் கதாநாயகனுக்கு இணையாகச் சண்டைக் காட்சிகளில் கலக்கியுள்ளார். லண்டன் பீட்டர் மருத்துவமனையில் நர்சாக வரும் நிமிஷாவின் நடிப்பு ஒரு மலையாள நர்சை கண் முன் கொண்டு வருகிறது. ஜி. வி பிரகாஷ் பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியுள்ளார்.
அருண் விஜய்யுடன் சிறையில் பையா பயா பயா என்று நெருக்கமாகப் பழகும் பஞ்சாபி நண்பராக வரும் அந்த நடிகரும் மனதில் பதிகிறார்.ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என பல அம்சங்கள் படத்தில் இயக்குநர் விரும்பியபடி பயணம் செய்துள்ளன.
எப்போதும் இயக்குநர் விஜய் நல்லதொரு கதையை ஆழமான காட்சிகள் மூலம் பதிய வைப்பவர். இதில் அதிரடி ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். லாஜிக் கேள்விகளை மறந்து ஒவ்வொரு காட்சியையும் விறுவிறுப்பாகக் காட்டியுள்ளது ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்.
திரையரங்கு சென்று படம் பார்த்தால் தான் திருப்தி தரும் வகையில் படத்தை விழிகளை விரிய வைக்கும் ஆக்சன் காட்சிகளாக எடுத்துள்ளார்.பொங்கலுக்கு ஆக்சன் விருந்தாக வந்துள்ள படம் தான் மிஷன் சாப்டர் 1 எனலாம்