‘அயலான் ‘விமர்சனம்

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கெல்கர் , யோகி பாபு, கருணாகரன், பால சரவணன், முனீஷ் காந்த், ஜார்ஜ் மரியான், கோதண்டம், செம்மலர் அன்னம் நடித்துள்ளனர்.

வேற்று கிரகத்திலிருந்து வரும் கதாபாத்திரங்களை மையமாக வைத்து ஹாலிவுட்டில் ஏராளமான படங்கள் வந்துள்ளன.குறிப்பாக சென்டிமென்ட்டை பிரதானமாக வைத்து வந்த ‘ET ‘ (E.T. the Extra-Terrestrial) பாணியில் உருவாகி இருக்கும் படம் தான் அயலான்’. இப்படத்தை ’இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கி உள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும்படி வணிக நோக்கிலான திட்டங்கள் தீட்டி வரும் வில்லனிடம் இருக்கும் ஸ்பார்க் என்கிற ஒரு பொருளைக் கைப்பற்ற வேற்று கிரகத்தில் இருக்கும் உயிரினம் இந்த பூமிக்கு குறிப்பாகத் தமிழ்நாட்டு சென்னைக்கு வருகிறது.சுற்றுச்சூழலில் ஆர்வம் உள்ள  கதாநாயகன் சிவகார்த்திகேயன் அதன் மீது பரிவு காட்டிப் பழகுகிறார்.இந்த அயலான் வருவது தங்களுக்கு ஆபத்து என்று வில்லன் குழுவினர் அதை நசுக்கவும் அழிக்கவும் முயற்சி செய்கின்றனர். பிடித்து வந்து சித்திரவதை செய்கின்றனர். அதைக் காப்பாற்ற கதாநாயகன் முயற்சி செய்கிறார் .முடிவு என்ன என்பதுதான் கதை.


வேளாண்மை, மண் பாதுகாப்பு, பல்லுயிர்ப் பெருக்கம் போன்ற சுற்றுச்சூழல் கருத்துகளைக் கதாநாயகன் மூலம் பேச விடாமல் அந்த வேற்றுக்கிரகவாசியான டாட்டூ என்கிற ஏலியன் மூலம் பேசவிட்டுள்ளார் இயக்குநர்.போகப் போக அந்த அயலானாக வரும் ஏலியனின் தோற்றமும் பாவனைகளும் மனதில் பதிந்து அதை ரசிக்கத் தொடங்கி விடுகிறோம்.அதன் மீது ஒரு இரக்கமும் ஏற்பட்டு விடுகிறது.

கார்ப்பரேட் வில்லன், பிசினஸ் கூட்டாளிகள் பணத்திற்காகச் சுற்றுச்சூழலுக்கு எதிரான நாசகர திட்டங்கள், ஹீரோ வில்லன் மோதல் என்று வழக்கமான சூத்திரத்தில் கதை நகர்ந்தாலும் மனித இனம், சுற்றுச்சூழல் பற்றிய கருத்துக்கள் மனதில் பதியும்படி உள்ளன.

இப்படிப்பட்ட இயற்கைக்கு எதிரான செயலால் மடகாஸ்கர் பாதிக்கப்படுவதில் இருந்து கதை தொடங்குகிறது.155 நிமிடங்கள் ஓடும் இப்படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் ரசிக்கும்படியான காட்சிகள் உள்ளன.

வேலை வெட்டி இல்லாத பொறுப்பில்லாத இளைஞனாக பல படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் இதில் பொறுப்புள்ள மனிதராக வருகிறார்.ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்பு அவருக்கு அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியான படம் என்று கூறும் படி ‘அயலான் ‘வந்துள்ளது.
ரகுல் ப்ரீத் சிங் வழக்கமான கதாநாயகிகள் போல வந்து போகிறார். நாயகனின் அம்மா வேடத்தில் பானுப்பிரியா வருகிறார்.பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை அவருக்கு. கருணாகரன், யோகி பாபு,முனீஷ் காந்த்,  கோதண்டம், ஜார்ஜ் மரியான் போன்ற காமெடியன்கள் இருந்தும் சில காட்சிகளில் மட்டும் சிரிக்க வைக்கிறார்கள் .

ஏலியன் பாத்திரத்திற்கு குரல் கொடுத்த சித்தார்த்தையும்,ஏலியன் பாத்திரத்திற்கு பின்னணியில் முகம் காட்டாமல் உடல் கொடுத்து நடித்த  வெங்கட் செங்குட்டுவனையும் பாராட்ட வேண்டும்.

முத்துராஜின் கலை இயக்கமும், நீரவ்ஷாவின் ஒளிப்பதிவும் சேர்ந்து   மீறல்களை மறந்து ரசிக்கச் செய்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்களை விட பின்னணியிசை தரத்தில் முந்துகிறது.படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் நேர்த்தியாக உள்ளன. பட உருவாக்கம் பிரமிக்க வைக்கும் அளவிற்கு அழுத்தமான காட்சிகளும் அமைந்திருந்தால் இந்தப் படம் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ஆபாசம், வன்முறை எதுவும் இல்லாமல் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியாக இந்தப் படம் அமைந்துள்ளது எனலாம். பொங்கலுக்கு குழந்தைகளுடன் பார்க்கும்படியாக இந்தப் படம் வந்துள்ளது.