மீண்டும் ஒரு மண் மணம் பேசும் படத்துக்காக கிராமத்துக்குள்ளேயே போயிருக்கிறேன் என்று கார்த்தி கூறினார்.
ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘கொம்பன்’.
இதன் ஆடியோ விழா மற்றும் ஊடக சந்திப்பில் கார்த்தி பேசும்போது. “பருத்திவீரனில் கிராமத்தில் இருந்தேன். கொம்பனில் கிராமத்துக்குள்ளேயே போய் வாழ்ந்த அனுபவம். அது மதுரை மொழி பேசியது. இது ராமநாதபுரத்து மொழிபேசும். இரண்டும் வேறுபட்டமொழிகள். இந்த படமும் வேறுபட்டவிதமாக இருக்கும்.
‘கொம்பனு’க்காக படம் சார்ந்த ,கதை நடக்கும் இடம் சார்ந்த ராமநாதபுரம் முதுகுளத்தூர் பக்கம் உள்ள கிராமத்துக்கே சென்று அங்குள்ள மண், மக்கள், வாழ்க்கை எல்லாம் அறிந்து கொண்டேன். அங்கேதான் படப்பிடிப்பு நடந்தது. அங்கு மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையைப் பார்த்து பொறாமையாக இருந்தது.
இதில் ராஜ்கிரண் சார் என் மாமனார். நான் மருமகன். படம் முழுக்க அவரைக் கேலி பேசுவேன். கடைசியில்தான் மாமா என்பேன். காதலித்து திருமணம் செய்வதைப் பற்றி நிறைய படங்கள் வந்துள்ளன. இது திருமணத்துக்குப் பிறகு வரும் காதலைப் பற்றி பேசுகிறது. இதில் காதல், பாசம், ஆக்ஷன் எல்லாமும் இருக்கும் உடன் நடித்திருக்கும் லட்சுமிமேனன், ராஜ்கிரண் எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். ‘மெட்ராஸ்’ சென்னை மண் சார்ந்த படம் என்றால் இது ராமநாதபுரம் மண் சார்ந்த படம். என்று நிச்சயம் பேசப்படும் “என்றார்.
விழாவில் ராஜ்கிரண், இயக்குநர் முத்தையா, தயாரிப்பாளர் கே.ஈ ஞானவேல்ராஜா ,ஜி.வி.பிரகாஷ்,கேமராமேன் வேல்ராஜ் ஆகியோரும் பேசினார்கள்.