விஷால், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், யோகி பாபு ,முரளி ஷர்மா ,ஹரிஷ் பெராடி ,முத்துக்குமார், விஜயகுமார் ,ஜெயபிரகாஷ், துளசி, கும்கி அஸ்வின் நடித்துள்ளனர் .ஹரி இயக்கி உள்ளார்.தேவி பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோ நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர்.
அடிதடி ஆக்சன் வன்முறை காதல் செண்டிமெண்ட் அரசியல் வசனங்கள் தமிழ்நாடு ஆந்திரா ரவுடிகள் என்று கலந்து கலந்து கட்டிய ஹரி பிராண்ட் கதை.
வேலூர் தொகுதி எம்.எல்.ஏ.சமுத்திரக்கனி. அவர் அனாதையான விஷாலைஆதரித்து வருகிறார்.விஷால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து மீண்டு வந்தவர்.சமுத்திரக்கனி விசுவாசியாக இருக்கிறார்.அவருக்காக எதையும் செய்பவர், கொலைகளையும் கூட.
பிரியா பவானி சங்கரை முதல் முறையாக பார்க்கும் விஷால்,ஈர்க்கப்படுகிறார் அவரைப் பின் தொடர்கிறார். விஷால் பார்வையில் ஒரு கும்பல் பிரியா பவானி சங்கரைக் கொலை செய்யத் துரத்துகிறது. அந்தக் கொடியவர்களிடமிருந்து பிரியாவைக் காப்பாற்றுகிறார் விஷால்.அது மட்டுமல்ல அவர்கள் வீட்டருகே நின்று காவல்காரனாக அந்தக் குடும்பத்தைப் பாதுகாக்கிறார்.விஷால் மீது பிரியாவுக்கு மரியாதையும் நேசமும் வருகிறது. ஆனால் விஷால் உறுதியாக அதை மறுக்கிறார். அது ஏன்?பிரியாவைத் துரத்தும் அந்தக் கும்பல் யார்? அவரை ஏன் கொலை செய்ய முயல வேண்டும்?போன்றவற்றுக்கு விடை சொல்வது தான் ரத்னம் படத்தில் மீதிக் கதை.
திருப்பதி மலைப் பகுதியில் கோயிலுக்கு சென்று வரும் பயணிகள் பஸ்சை விபத்து ஏற்படுத்திக் கொள்ளையடிக்கும் காட்சியில் இருந்து படம் தொடங்குகிறது.பிறகு கதை எங்கெங்கோ சென்று நிறைய கிளைக்கதைகள் வருகின்றன.படத்தின் பெரும்பாலான காட்சிகளைத் தனது வழக்கமான பரபர முறையில் சொல்லியிருக்கும் இயக்குநர் ஹரி, பார்ப்பவர்கள் சற்று எதிர் பார்க்காத ஒரு முடிச்சோடு கூடுதல் சுவாரஸ்யத்தோடு படத்தைக் கொண்டு செல்கிறார்.
ரத்னம் பாத்திரத்தில் ‘கொள்கைக்காக கொலை செய்யும்’ ரவடியாக வந்து ஆக்சன் காட்சிகளில் அதகளம் செய்து படத்தைத் தூக்கி நிறுத்துகிறார் விஷால்.படத்தில் அவரது உழைப்பு தெரிகிறது.படத்தில் அவர் சந்திக்கும் சண்டைக் காட்சிகள் ரத்தம் தெறிக்கும் வன்முறைச் சம்பவங்கள் இந்தப் படத்தை ரத்னம் அல்ல ரத்தம் என்று உணர வைக்கின்றன.அவர் பாத்திரம் ஆக்சனுக்கு மட்டுமல்ல சென்டிமெண்டுக்கும் ஏற்றதாக உருவாக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஆக்சன் படங்களில் கதாநாயகிகள் கருவேப்பிலை ஆகி விடுவார்கள் .ஆனால் இதில் மல்லிகா பாத்திரத்தில் வரும் நாயகி பிரியா பவானி சங்கருக்குப் பலவிதமான பாவனைகள் முக பாவங்கள் காட்டுவதற்கான வாய்ப்புகள். அவரும் அதைச் சரியாகப் பயன்படுத்தி உள்ளார்.
அரசியல்வாதியாகவும் அதிகாரம் உள்ள கட்சியின் பிரதிநிதியாகவும் கம்பீர தோற்றம் வசனம் நடிப்பு என சமுத்திரக்கனி காட்டியுள்ளது பளீர் நடிப்பு.
யோகி பாபு வரும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. நான் கடவுள் ராஜேந்திரன், விடிவி கணேஷ் போன்றவர்களின் நகைச்சுவை சுமார் ரகம்.
முரளி சர்மா, ஹரிஷ் பெராடி, முத்துக்குமார் ஆகியோரின் வில்லத்தனம் வழக்கம் போல் மிரட்டல்.
விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், துளசி, கஜராஜ், இயக்குநர் கெளதம் மேனன், ஒய்.ஜி.மகேந்திரன், கணேஷ் வெங்கட்ராமன், கும்கி அஸ்வின் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளனர்.அவரவருக்கு உரிய இடம் உள்ளது.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் ஆக்ஷன் காட்சிகளைச் சிரமப்பட்டுப் படமாக்கி உள்ளார். அவரது உழைப்பு படத்தில் தெரிகிறது.தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே. ஒரு வணிகப் படத்திற்கான நல்ல பக்கத்துணை.முழுநீள ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் இயக்குநரை விட ஸ்டண்ட் இயக்குநர் கனல் கண்ணனுக்கு தான் வேலை அதிகம் .
இயக்குநர் ஹரி தனது வழக்கமான பாணியிலான கதையில், செண்டிமெண்டை நிறைத்துள்ளார்.சில மிகையான காட்சிகள் தெலுங்கு ரசிகர்களை குறிவைத்து எடுக்கப்பட்டுள்ளது புரிகிறது.
திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, அம்மா செண்டிமெண்ட், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தையும் அளவாகக் கையாண்டுள்ளார்.அனைத்து தரப்பு ரசனைக்கும் தீனி போட்டுள்ள இயக்குநர் ஹரி, ஆக்ஷன் காட்சிகளையும், படத்தின் நீளத்தையும் சற்று குறைத்திருந்தால் ரசிகர்கள் ரசிக்கும் படமாக மட்டும் இன்றி கொண்டாடும் படமாகவும் மாறி இருந்திருக்கும்.