‘ஒரு நொடி’ விமர்சனம்

தமன் குமார் ,வேல. ராமமூர்த்தி,எம். எஸ். பாஸ்கர் ,ஸ்ரீ ரஞ்சனி,பழ. கருப்பையா,தீபா சங்கர்,நிகிதா ,அருண் கார்த்திக்,விக்னேஷ் ஆதித்யா, கஜராஜ்  நடித்துள்ளனர்.எழுதி இயக்கி உள்ளார்  பி. மணிவர்மன்.ஒளிப்பதிவு: கே. ஜி. ரத்தீஷ்,படத்தொகுப்பு: எஸ். குரு சூர்யா,இசை: சஞ்சய் மாணிக்கம்.மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரித்துள்ளன.

வாழ்க்கையில் நாம் ஒரு நொடியில் எடுக்கும் முடிவு நம் வாழ்க்கையையே திசை மாற்றி விடும். தெளிவற்ற மனநிலையில் குழப்பமான நேரத்தில்
சிலருக்கு சிந்தனையில் ஒரு நொடியில் தோன்றும் ஒரு தெளிவு ஒரு மின்னல் அடிக்கும் குறிப்பு பெரிய திருப்பு முனைகளுக்கு இட்டுச் செல்லும் .அப்படி ஒரு நொடியும் அதன் விளைவும் பற்றிய கதைதான் ஒரு நொடி.

இப்படத்தின் கதை மதுரையில் நடக்கிறது.வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கச் செல்பவர் காணாமல் போய்விடுகிறார்.கடன் கொடுத்து திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் அவர்களது சொத்துகளை அபகரிப்பவர் ஒருவர்.அந்தக் கொடிய கரிமேடு தியாகு என்பவரையும் போலீஸ் பிடித்து விசாரிக்கிறது.பலன் இல்லை.

இந்தச் சூழ்நிலையில் மதுரையில் ஓர் இளம்பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.சந்தேகப்பட்டவரை எல்லாம் விசாரிக்கிறது போலீஸ் .எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் ஒரு நொடி, ஒரு மின்னல் பொறி காவல் அதிகாரி மனதில் வெளிச்சம் அடிக்கிறது.அது குற்றவாளியைப் பிடிக்க உதவுகிறது. அந்த விஷயம் என்ன என்பதுதான் சுவாரஸ்ய முடிச்சு.

மதுரை மண்ணின் இயக்குநர் மணிவர்மன் தன்னாலும் ஒரு திரில்லர் படத்தைச் சிறப்பாகத் தரமுடியும் என்று நிரூபித்துள்ளார். மாறுபட்ட மதுரையை காட்டி அறிவியல் பூர்வமான ஒரு திரில்லர் படமாக இதை உருவாக்கி உள்ளார்.சிறு புரிதல் பிசகினாலும் குழப்பம் வரக்கூடிய ஒரு திரைக்கதையில் சிறு குழப்பமும் இல்லாமல் படம் நகர்கிறது.

விசாரணைக் காட்சிகள் அதிகம் வருவது சற்றே சலிப்பூட்டினாலும் முடிவில் வரும் ஒரு முடிச்சு நம்மை ஆச்சரியப்படுத்தும்.

விசாரணை செய்யும் அதிகாரியாக வரும் நாயகன் தமன்குமார் தனது அலட்டிக் கொள்ளாத நடிப்பால் கவனம் பெறுகிறார். தேர்ந்தெடுத்த பாத்திரங்களில் அவர் நடித்தால் மேலும் உயரங்களைத் தொடுவார்.சேகரன் பாத்திரத்தில் வந்து எம் எஸ் பாஸ்கர் ரசிகர்களை வியப்பூட்டுகிறார். சபாஷ்.அவரது நடிப்புக்குத் தீனி போட இயக்குநர்கள் சிந்திக்க வேண்டும்.அரசியல் பின்புலம் கொண்ட தாதா கரிமேடு தியாகுவாக அசத்தியுள்ளார் வேல ராம மூர்த்தி. ஸ்ரீரஞ்சனி, பழ கருப்பையா, தீபாசங்கர், நிகிதா, கஜராஜ் போன்றோரும் நடித்துள்ளனர்.

மொத்தத்தில் ஒரு நொடி படம் எதிர்பாராத அதிரடி