‘வரலாறு முக்கியம்’ விமர்சனம்

ஜீவா நடிக்கும் படங்கள் என்றாலே துள்ளல்,பொழுதுபோக்கு, கலகலப்பு, ஜாலி , பொறுப்பில்லாத்தனம் கலந்த கலவையாக இருக்கும்.இந்த சேர்மானத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘வரலாறு முக்கியம்’.


தன் தெருவில் குடிவந்துள்ள மலையாளக் குடும்பத்தில் உள்ள இளம் பெண்ணை கைப்பிடிக்க ஜீவா செய்யும் பலவிதமான தில்லாலங்கடிகளைச் சொல்லும் கதை.

இந்தப் படத்தில் ஜீவா, காஷ்மீரா, பிரக்யா,  கே. எஸ். ரவிக்குமார்,  சரண்யா பொன்வண்ணன்,டிடிவி கணேஷ், ஷாரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

காபி வித் காதல் படத்திற்குப் பிறகு ஜீவா நடிப்பில் இப்படம் வெளிவந்துள்ளது.

சரி படத்தின் கதை என்ன?

கோயம்புத்தூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் கார்த்தி என்கிற பாத்திரப்பெயர் கொண்ட ஜீவா. சொந்தமாக ஒரு youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.  ஜீவாவின் தெருவில் வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு மலையாளக் குடும்பம் குடியேருகிறது.

இந்தக் குடும்பத்தில் காஷ்மிரா , பிரக்யாஇருவரும் அக்காள் தங்கைகள் . இதில் கதாநாயகன் ஜீவா அக்கா காஷ்மிராவைக் காதலிக்கிறார். தங்கை பிரக்யா ஜீவாவைக் காதலிக்கிறார்.ஆனால், காஷ்மீராவின் அப்பாவோ தனது மகளைத் துபாய் மாப்பிள்ளைக்கு மட்டுமே கட்டிக் கொடுக்கும் முடிவுடன் இருக்கிறார்.இறுதியில் ஜீவா யாருடன் சேர்ந்தார் என்பதுதான் கதை.

படத்தின் கதை 2050 இல் நடப்பதாக தொடங்குகிறது. விடிவி கணேஷ் தனது ப்ளாஷ் பேக்கை மொட்டை ராஜேந்திரனிடம்  சொல்வது போல் அமைந்துள்ளது.

சிவா மனசுல சக்தி படத்திற்குப் பிறகு இளமையான துள்ளலான துறுதுறுப்பான ஜீவாவை இப்படத்தில் பார்க்க முடிகிறது.ஆமாம் எத்தனை நாள் தான் இப்படி பொறுப்பில்லாத இளைஞனாக விட்டேத் தியான பாத்திரங்களில் நடிக்க போகிறார்?

காதல், நகைச்சுவை எனப்படம் இருந்தாலும்,கதையில் பழைய வாடை அடிக்கிறது.கடைசியில் கல்யாண வீட்டில் நடக்கும் கலாட்டாக்கள் பெண் வேடம் போட்டு ஜீவா போடும் ஆட்டம் எல்லாம் அலுப்பு தரும் முழு நீள நாடகங்கள்.

சக்தி சரவணன் ஒளிப்பதிவில் கலர்ஃபுல்லான காட்சிகள் கண்களுக்கு  ஆறுதல்.

காஷ்மீரா மற்றும் பிரக்யா இருவரும் தங்களுக்குக் கொடுத்த கதாபாத்திரத்தில் அழகாக நடித்துள்ளனர்.அவர்களது தோற்றப் பொலிவு ரசிகர்களுக்கு மேலும் ஓர் ஆறுதல்.

விடிவி கணேஷ் நடிப்பு  வழக்கம் போன்றதாக இருந்தாலும் அனாயாசமாகச் சிரிக்க வைக்கிறார்.கே எஸ் ரவிக்குமார் | சரண்யா பொன்வண்ணன் ,வழக்கம் போல டெம்ப்ளேட் கதாபாத்திரங்கள்.

ஷான் ரஹ்மானின் பின்னணி இசை படத்திற்கு பலம்.

இளமை துள்ளல் கலகலப்பு இன்று லாஜிக் பார்க்காமல் ரசிப்பவர்களுக்கு இந்தப் படம் பிடிக்கலாம்.மொத்தத்தில் வரலாறு முக்கியம் ஒரு வண்ணமயமான வணிகப்படம்.