படத்தின் நாயகன் வி தான் இப்படத்தின் இயக்குநர்.நாயகன் வி ஒரு வாழ்வியல் வழிகாட்டி. வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சவால்களுக்கு உளவியல் ரீதியாக வழி கூறி ஆற்றுப் படுத்துபவர்.அவரது காதலியாக வருகிறார் அனிக்கா விக்ரமன். இவரிடம் வி தனக்கு சைதன்யா ரெட்டி என்ற பெண்ணோடு காதல் இருந்ததைச் சொல்கிறார். ஒரு சிறு மன வேறுபாட்டில் தாங்கள் இருவரும் பிரிந்ததைச் சொல்லும் வி ,அனிக்கா விக்ரமனை திருமணம் முடிக்கிறார். இந்த நிலையில் புதுமணத் தம்பதிகள் புதிய வாழ்க்கை தொடங்கும்போது, மறுபடியும் சைதன்யா ரெட்டி குறுக்கே வருகிறார். தனது கணவரின் முன்னாள் காதலியைக் கண்காணிக்க மனைவி சில ரகசிய உளவு ஏற்பாடுகளைச் செய்கிறார் அது அவருக்கே எதிராக வந்து நிற்கிறது. முடிவு என்ன என்பதே ’விஷமக்காரனி’ன் கதை
படம் ஆரம்பித்ததிலிருந்து பெரும்பகுதியில் கதா பாத்திரங்கள் பேசிக் கொண்டே இருக்கின்றன. இருந்தாலும் தங்களது மன உணர்வைப் பேச்சின் மூலம் வெளிப்படுத்தி, காட்சிகள் இல்லாத குறையை நிவர்த்தி செய்து இருக்கிறார்கள்.தன் கணவனிடம் நம்பாத மனைவி செய்யும் உளவு வேலைகள் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுகிறது.இது ஒரு உளவியல் ரீதியான நல்லதொரு கதை.
படம் ஆரம்பித்ததும் பாத்திரங்கள் குறிப்பாகக் கதாநாயகன் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருந்தது இது யாருக்கான படம் என்று சற்று நெருடலாக இருந்தது.
இயக்குநர் வி மட்டுமல்ல, உடன் நடித்தவர்களும் குறையில்லாமல் நடித்துள்ளார்கள்.
பெரிய லொகேஷன்கள் இல்லாமல் ,பிரமாண்டங்கள் இல்லாமல் பாத்திரங்களின் மன உணர்வுகளைக் காட்டியே, குறிப்பாக மூன்றே மூன்று பாத்திரங்களின் மன உணர்வுகளைக் காட்டியே நம்மை இருக்கையில் அமர வைத்து விடுகிறார் இயக்குநர். அந்த வகையில் அவர் தனது முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.புதிய அலை என்று கூறக் கூடிய அளவில் கதையின் போக்கு இருக்கிற போது விஷமக்காரன் என்று மலிவான தலைப்பை வைத்தது ஏனோ ?