‘சேத்துமான்’ விமர்சனம்

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி எனும் சிறுகதையை ‘சேத்துமான்’ எனும் பெயரில் திரைப்படமாக பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.அறிமுக இயக்குநர் தமிழ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

சேத்துமான் எனப்படும் பன்றியின் கறி தின்பதைச் சார்ந்து ,அதுவும் ரகசியமாகத் தின்பதைச் சார்ந்து ஓர் ஊரில் நடக்கும் சம்பவங்களும் அதில் ஈடுபடும் கதைமாந்தர்கள் வெளிப்படுத்தும் குணங்களும் எழும் சாதிய உணர்வுகளும் இடையில் பங்காளிச் சண்டை பஞ்சாயத்தில் கிளர்ந்தெழும் வன்மங்களும்
இவற்றினூடாக நசுக்கப்படும் ஏதுமறியா எளிய மனிதர்களும் சார்ந்த கதை.

படத்திற்கு பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.வசனத்தை எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ளார். இசை – பிந்து மாலினி ,படத்தொகுப்பு- CS பிரேம் குமார் .

புனே ,கேரளா சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்ற இப்படம்,மே 27 ம் தேதி சோனி லைவ் வில் வெளியாகிறது.

தாத்தாவிற்கும் பேரனுக்கும் இடையிலான மாசற்ற அன்பைப் பேசும் இப்படத்தில் தாத்தாவாக மாணிக்கமும், பேரனாக அஷ்வினும் நடித்துள்ளனர்.படத்தில் கதைமாந்தர்களின் சேலம் சார்ந்த மொழி அழகாக பதியப்பட்டுள்ளது.

படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே பாத்திரங்களின் குணச்சித்திரமும் அவர்களின் பேச்சும் நம் மனதில் ஆழமாகப் பதிகின்றன.

பன்றியைத்தேடிச் செல்லும் அந்தப் பயணம் அது சார்ந்த உரையாடல்கள் சற்று நீளமாக இருந்தாலும் இயல்பாக உள்ளன. படத்தில் நடித்துள்ளவர்கள் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம். அனைவருமே கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்கள்.அவரவர்கள் இயல்பில் இயங்கும்போதே சிரிக்கவும் சிந்திக்கவும் சீண்டவும் செய்கிறார்கள்.

காட்சிகளிடையே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு பற்றி வானொலி செய்தியைக் காட்டுவது ஒரு குறியீடாக அமைந்துள்ளது. ஒரு கட்டத்தில் இது ஆவணப்படமோ என்கிற வகையில் செல்லும் கதையில் முடிவு பார்வையாளன் தானாகச் சிந்தித்து இட்டு நிரப்பிக் கொள்ளும் வகையில் உள்ளது.ஏற்கெனவே எழுத்து வடிவில் எழுதப்பட்ட கதை படம் முயற்சியாகி உருவாகி உள்ளது. இது போல் இலக்கியங்களைப் படமாக எடுக்கும்போது அது பார்ப்பதற்கு தனி நிறம் கொண்ட படைப்பாக மாறிவிடுவது இயல்புதான் என்பதற்கு இந்தப்படம் உதாரணமாக இருக்கிறது.