அடுத்தடுத்த ஃபோன் அழைப்புகள்… புன்னகை முகம் முழுக்க மிளிர நன்றி கூறுகிறார். கண்டிப்பாக பிறந்த நாளாகத்தான் இருக்க வேண்டும் என்ற ஊகத்துடன் வாழ்த்தினோம். அச்சு மாறாத அதே முகம் மிளிரும் புன்னகையுடன் நன்றி கூறி நமக்கு இனிப்பையும் வழங்கினார்.
“முக்கியமான பிறந்த நாள் இது, தணிக்கை குழுவினர் ‘என்னை அறிந்தால்…’ படம் பார்த்து பாராட்டியுள்ளனர். அஜீத் சார் ரசிகர்களை மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்களையும் நிச்சயம் கவரும் படமாக இருக்கும் என்ற எங்களது கணிப்பு தப்ப வில்லை. நான் எங்குச் சென்றாலும் அஜீத் சாரின் ரசிகர்கள் படத்தைப் பற்றியும் படம் வெளியாகும் தேதியைப் பற்றியும் பேசும் போது தான் நாம எவ்வளவு பெரிய படம் பண்ணி இருக்கோம்னு தெரியுது. படம் பிப்ரவரி 5 ஆம் தேதி வெளி வரும் போது அஜீத் சாரின் ரசிகர்களுடன் நள்ளிரவு முதல் காட்சிக்கு சென்று குத்தாட்டம் போடப் போவதை நினைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.“ என்று கூறி தனது ‘என்னை அறிந்தால்…’ அனுபவத்தைக் கூற ஆரம்பித்தார் நடன இயக்குநர் சதீஷ்.
“ ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் நடித்ததன் மூலம் தான் கௌதம் சாரை தெரியும், பின் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் நடனம் அமைத்து கொடுத்தேன். அவருக்கும் எனக்கும் ரசனை பல இடங்களில் ஒத்து போய் இருக்கிறது. இதுவே எனக்கு ’என்னை அறிந்தால்…’ கிடைத்த ரகசியம். இவ்வளவு பெரிய படம் அப்படின்னு ஒரு பயம் உள்ளுக்குள் இருந்தது. உன்னால பண்ண முடியும்னு கௌதம் சார் ஊக்கம் அளித்தார்” என்றார் சதீஷ் மேலும் தனது ‘தல’ அனுபவத்தை விவரித்தார்.
“ ‘ஆதாரு… ஆதாரு…’ பாட்டு எல்லோரும் நினைப்பது போல ஒரு ஃப்ரெண்ட்ஷிப் பாட்டா மட்டும் இருக்காது. நான் அறிந்தவரை ‘வேற லெவல்’ நடனமாய் இருக்கும். நான் எனக்கு வரும் நடன அசைவுகள் என்றும், நடிகருக்கு ஏற்றார்போல் நடன அசைவுகள் ப்ளான்-ஏ, ப்ளான்-பி என்று வைத்திருப்பேன்.
“ வழக்கம்போல அஜித் சாரிடம் சென்று நான் பாட்டின் அசைவுகளை எடுத்து கூறிக் கொண்டே இருந்தேன் இடையில் நிறுத்தி இதுக்கு நீங்க ஒரிஜினலா என்ன ஐடியா வெச்சிருந்திங்க அத சொல்லுங்க என்றார். நான் மலைத்துப் போனேன். நான் நினைத்ததை திரையில் கொண்டு வந்து நிறுத்தினார்.”
“ ‘மழை வரபோகுதே’ பாடலை பார்க்கும் பொழுது நான் நடனம் அமைத்த பாடலா என்று எனக்கே ஆச்சர்யமாய் இருந்தது. அஜித் சார், கௌதம் சார் என ‘கிங்ஸ் ஆஃப் ரோமான்ஸ்’ இருவரும் இணைந்தால் இப்படிதானே. என்று கூறிய வண்ணம் அடுத்த வாழ்த்து அழைப்பை பேச ஆரம்பித்தார் சதீஷ்.