அடிக்கும் பழக்கம் விஜயகாந்துக்கு வந்தது எப்படி ? அடிக்கும் பழக்கத்தை விஜயகாந்த் யாரிடம் கற்றுக் கொண்டார் என்பது பற்றி ராதிகா ஒரு சினிமா விழாவில் ரகசியத்தை வெளியிட்டார்.
‘6பேஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ நையப்புடை’. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கதையின் முக்கிய நாயகனாக வேடமேற்று நடிக்க, அவருடன் இன்னொரு நாயகனாக பா.விஜய்யும் நடித்துள்ளார். இப்படம் வருகிற 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது . நடிகை ராதிகா ட்ரெய்லரை வெளியிட்டார்.
விழாவில் ட்ரெய்லரை வெளியிட்டு விட்டு ராதிகா பேசும் போது
” எனக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் சார் பல ஆண்டுகள் பழக்கம். எங்களுக்கு அவர் குடும்ப நண்பர். அவர், இன்று காலை ‘ஒய்வாக இருந்தால் வாங்களேன்’ என்று இங்கு அழைத்தார் . நான் நிறைய படங்கள் அவர் இயக்கத்தில் நடித்து இருக்கிறேன். இந்தியில் கூட நடித்திருக்கிறேன். அந்த இந்திப் படத்தில் இந்தியில் பேசி நடித்திருக்கிறேன்.எங்க இரண்டு பேருக்குமே இந்தி பேசத் தெரியாது.இந்தி பேசத் தெரிந்த ஜாக்கி ஷெராப் இரண்டு மூன்று வார்த்தைகள்தான் படத்தில் இந்தி பேசுவார். இரண்டு மூன்று வார்த்தை சொன்னதும் மறந்து விடுவார். பேசினால் கெட்ட வார்த்தைதான் பேசுவார். அப்படி இருந்தது அந்தப் பட அனுபவம்.
எஸ்.ஏ.சந்திரசேகர் சார் ரொம்பவும் கண்டிப்பானவர். நேரம் தவறாதவர். எல்லாரையும் திட்டுவார் ,அடிப்பார்.அவரிடம் திட்டு வாங்காத ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன்.விஜயகாந்தும் அவரிடம் எவ்வளவோ திட்டு வாங்கியிருக்கிறார். இவருக்கு விஜயகாந்த் அவ்வளவு பயப்படுவார் .ஆனால் விஜயகாந்துக்கு அடிக்கிற பழக்கம் வந்தது இவரிடமிருந்துதான். யாரையும் பட்டு பட்டென்று அடிக்கிற பழக்கம் விஜயகாந்துக்கு இவரிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும்.
பேசும் போது என்னை சின்னத்திரை சிஎம் என்றார்கள். ‘சிஎம்’ என்று சொன்னதால் ஞாபகம் வருது. ஒரு சிஎம் பதவிக்கு எட்டுப் பேர் போட்டி போடுகிறார்கள்.
பேசத்தெரிந்தவர்கள்,பேசத் தெரியாதவர்கள் ,இவர் பேசவே கூடாது என்று நினைக்கிறவர்கள் எல்லாரும் சிஎம் முக்குப் போட்டி போடுகிறார்கள்.தமிழ்நாட்டு மக்கள் ரொம்ப நல்லவர்கள், ரொம்ப அறிவாளிகள் எவ்வளவு சூடுபோட்டாலும் சரி சரி என்று தாங்கிக் கொள்வார்கள்.
‘ நையப்புடை ‘ படத்தின் ட்ரெய்லர் பார்த்தேன் உண்மையிலேயே நன்றாக இருந்தது எஸ்.ஏ.சந்திரசேகர் சார் எது செய்தாலும் சரியாகச் செய்வார்
‘ நையப்புடை ‘ படத்துக்காக 19 வயது இயக்குநர், 73 வயதான இவரை இயக்கியுள்ளார். இப்போது இவரைப்பார்க்கும் போது எனக்குத் தோன்றுவது வயது என்பது ஒரு நம்பர் அவ்வளவுதான்.இதுதான் என் நம்பிக்கை.
இப்போதெல்லாம் வாரம் எத்தனை படம் வருகிறது என்றே தெரிவதில்லை. குழப்பமாக இருக்கிறது.
நல்ல சினிமாவுக்கு மக்கள் ஆதரவு தருவார்கள்.இன்று படம் ஒரு வாரம் ஓடினாலே போதும். வெற்றிதான். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் ”என்று பேசினார்.
விழாவில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன், ‘நையப்புடை’படத்தின் இயக்குநர் விஜய் கிரண், ஒளிப்பதிவாளர் ஜீவன், கவிஞர் பா.விஜய், இசையமைப்பாளர் தாஜ்நூர், தயாரிப்பாளர் பி,டி .செல்வகுமார், ,எடிட்டர் டான்பாஸ்கோ, கலை இயக்குநர் வீரமணி , படத்தில் நடித்துள்ள நாயகி சாந்தினி,சிறுவன் ஜாக்சன் ஆகியோரும் பேசினார்கள்.