தமிழ் சினிமாவில் சில நேரங்களில் நம்மை அறியாமலே நேர்த்தியாக சில நல்ல படங்கள் வெளியாகும் அப்படி ஒரு படம் தான் இந்த அன்பிற்கினியாள்.
மலையாளத்தில் வினீத் சீனிவாசன் தயாரிப்பில் அன்னா பென் , லால் நடிப்பில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் 2019 ஆண்டு வெளியாகி வென்ற, ‘ஹெலன்’ படத்தை ரீமேக் செய்திருக்கிறார்கள்.’ரௌத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’ படங்களுக்குப் பிறகு கோகுல் இயக்கிய ஐந்தாவது படம். மறு ஆக்கம் என்று எடுத்துக்கொண்டால் முதல் படம்
காணாமல் போன பெண்ணைத் தந்தையும், காதலனும், காவல்துறையும் தீவிரமாகத் தேடினால், உணர்வுபூர்வமான போராட்டத்துக்குப் பிறகு அதற்கான பதில் கிடைத்தால் அதுவே ‘அன்பிற்கினியாள்’.
சிவம் (அருண் பாண்டியன்) நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த தந்தை. எல்.ஐ.சி. ஏஜெண்டாகப் பணிபுரிகிறார். இவரது மகள் அன்பிற்கினியாள் (கீர்த்தி பாண்டியன்) செவிலியர் படிப்பு முடித்த பட்டதாரி. அம்மாவின் மருத்துவச் செலவுக்காக வாங்கிய கடனை அடைக்கும் பொருட்டு கனடா சென்று நர்ஸாகப் பணிபுரிய முயல்கிறார். அதற்காக ஐஇஎல்டிஎஸ் பயிற்சிக்குப் பகுதி நேரமாகச் செல்கிறார். பிறகு, மிகப்பெரிய மால் ஒன்றில் இருக்கும் சிக்கன் ஹப்பில் ஊழியராகப் பணிபுரிகிறார். இதனிடையே தந்தைக்குத் தெரியாமல் தன் காதலை ரகசியமாக வளர்த்து வருகிறார்.
ஒருநாள் மகளின் காதல் ரகசியம் காவல் நிலையத்தில் வெளிப்படுகிறது. இதனால் தந்தை அருண் பாண்டியன் மகள் மீது பாராமுகமாக இருக்கிறார். தந்தையின் புறக்கணிப்பு கீர்த்திக்கு வலியைக் கொடுக்கிறது. சிக்கன் ஹப்புக்குப் பணிபுரியச் சென்ற கீர்த்தி நள்ளிரவு 12 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. மகளைத் தேடி அலையும் அருண் பாண்டியன் ஒருவழியாகக் காவல் நிலையம் வந்து புகார் கொடுக்கிறார். கீர்த்தியின் காதலர் அந்த நேரத்தில் வேலைக்காக ஹைதராபாத் விரைவது தெரியவருகிறது. காதலனுடன் கீர்த்தி ஓடிவிட்டதாக போலீஸ் கூறுகிறது.
உண்மையில் நடந்தது என்ன, அப்பாவின் அன்புக்காக ஏங்கிய கீர்த்திக்கு என்ன ஆனது, அவரால் ஏன் வீடு திரும்ப முடியவில்லை, காதலனுக்கும் இதற்கும் உள்ள சம்பந்தம் என்ன, கீர்த்தி கிடைத்தாரா போன்ற கேள்விகளுக்கான விடை திரைக்கதையாக விரிகிறது.
அப்பா – மகள் இருவரையும் மையப்படுத்திய கதைகளுடன் பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அப்பா – மகள் இருவரையும் மையப்படுத்திய த்ரில்லர் கதை என்றால் மிகவும் அரிதானதுதான். அப்படியொரு அரிய கதையை இயக்கியுள்ளார் கோகுல். இந்தப் புதிய படத்தின் கதையும், களமும், காட்சிகளும் புதிய கோணத்தில் உள்ளன.
ஏனென்றால் அப்பா – மகள் வாழ்வியலைச் சொல்லும் கதையில் நிஜ அப்பா – மகள் நடித்தால் எப்படியிருக்கும்…? அந்தக் காட்சிகளின் நம்பகத்தன்மை அனைத்துமே இன்னும் உணர்வு பூர்வமாக இருக்கும். அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் இருவரும் இந்தக் கதையில் அப்பா-மகள் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையிலான காட்சிகள் பார்வையாளர்களை ஒன்ற வைக்கும் .
பெரும்பாலும் மலையாளப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்யும்போது அதன் உயிரோட்டத்தைக் கடத்துவதில் பெரும் சிக்கல் எழும். ஆனால், கோகுல் இதில் விதிவிலக்கு. உறவுச் சிக்கல்களை உணர்வு ரீதியாக அப்படியே கடத்தி கைதட்டல் அள்ளுகிறார்.
சுமார் 35 ஆண்டுகளாக நடிப்புத் துறையில் இருக்கும் அருண் பாண்டியன் சொந்த மகள் கீர்த்திக்காக மறுவருகை புரிந்துள்ளார். அவர் நடிப்பும், குரல் மொழியும் கொஞ்சம் செயற்கைதான். என்றாலும் அதுதான் அவரது இயல்பு என்பது பழகிவிடுகிறது.
பக்கத்து வீட்டுப் பெண் போல தோற்றம் கொண்ட , அற்புதமான – அன்பிற்கினியாள் கதாபாத்திரத்தை அனாயாசமாக உள் வாங்கி பிரமாதமாக நடித்திருக்கிறார் கீர்த்தி பாண்டியன் . எந்த ஒரு நாயகிக்கும் பெண் மையச் சினிமாவில் நடிப்பது கனவாகவே இருக்கும். கீர்த்தியைப் பொறுத்தவரையில் அந்தக் கனவு இரண்டாவது படத்திலேயே நனவாகியுள்ளது. அதற்கேற்ப தன் முழுமையான பங்களிப்பைக் கொடுத்து வியக்க வைக்கிறார். ஆபத்தில் சிக்கிய அவர் சவாலான இடங்களில் கச்சிதமான நடிப்பில் கவர்கிறார்.
கீர்த்தி பாண்டியனின் காதலனாக சார்லஸ் செபாஸ்டியன் கதாபாத்திரத்தில் பிரவீன் ராஜ் இயல்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். எஸ்.ஐ.யாக நடித்த ரவீந்திர விஜய் , சிக்கன் கடை மேலாளராக நடித்த பூபதி ராஜா, மால் செக்யூரிட்டியாக வரும் ஜெயராஜ்,, ஏட்டாக அடிநாட் சசி என எல்லாருமே பாத்திரம் உணர்ந்து நிறைவான நடிப்பை வழங்கியுள்ளனர். கைதியாக வரும் இயக்குநர் கோகுலும் கூட.இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸின் இசையும், பின்னணியும் படத்தின் பலம்.
ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, சிக்கன் ஹப் இருக்கும் மாலின் பரப்பையும், சிக்கன் ஹப் கடையின் உட்புறத்தையும் வெவ்வேறு கோணங்களில் காட்டி ஆச்சரியப்படுத்துகிறார்.
தந்தை- மகள், காதலன் – காதலி, ஆண் மேலாளர்- பெண் ஊழியர் என்று மூன்று விதமான உறவுச் சிக்கல்களைப் பற்றி இயக்குநர் பதிவு செய்துள்ள விதம் பாராட்டுக்குரியது. அப்பா- மகள் கதை வழக்கமும் பழக்கமும் ஆனது என்பதால் அதில் த்ரில்லர் பாணியைச் சேர்த்திருப்பது திரைக்கதையின் விறுவிறு போக்கிற்குக் கை கொடுக்கிறது.
சிறு குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் அன்பையும், நம்பிக்கையையும் பரப்பும் அனுபவத்துக்காக அன்பிற்கினியாளை தாராளமாக வரவேற்கலாம்.
மொத்தத்தில் அன்பிற்கினியாள் அழகானவள் அன்பானவள் நம்மைக் கவர்கிறாள் . அன்பிற்கினியாள் நிச்சயம் அரங்கு செல்வர்களின் அன்பைப் பெறுவாள் .