அப்பா,அம்மா,காதலி,மனைவி…இயக்கும் புதியபடம் பற்றி எல்லாம் மனம் திறக்கிறார் மணிவண்ணனின் மகன் ரகு மணிவண்ணன்.
எண்பதுகளில் பரபரப்பாக பேசப்பட்ட படமான ‘நூறாவது நாள்’ மறு அவதாரம் எடுக்கிறது. அதே படம் ‘ரீபூட்’ முறையில் மீண்டும் உருவாக இருக்கிறது. படத்தை இயக்க இருப்பவர் ‘நூறாவது நாள்’ படத்தை இயக்கிய இயக்குநர் மணிவண்ணனின் மகன் ரகு மணிவண்ணன்.
அவருடன் ஓர் உரையாடல்
அது என்ன ரீபூட்?
பிரபலமாகி வெற்றி பெற்ற ஒரு படத்தை மீண்டும் எடுக்கும் போது ‘ரீமேக் ‘செய்வார்கள். அதாவது அதேகதையை வேறு நடிகர்கள் கொண்டு மாற்றங்களுடன் மீண்டும் எடுக்கப் படுவது ரீமேக்.
சீக்வெல் எனப்படுவது அதே கதையின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பாகங்கள் எடுப்பது.
ரீபூட் என்பது அதே மையக் கருவை மட்டும் வைத்துக் கொண்டு கதைப் போக்கு, திரைக்கதை, காட்சிகள், நடிகர்கள், பாத்திரங்கள் எல்லாவற்றையும் காலத்துக்கேற்ப மாற்றி உருவாக்குவது.
ஹாலிவுட்டில் ‘ஹல்க்’, ‘சூப்பர்மேன்’, பேட்மேன்’ ,’ஸ்பைடர் மேன்’ ‘டெர்மினேட்டர்’ போன்ற பல படங்கள் ரீபூட் முறையில் உருவாகி வெற்றிபெற்றுள்ளன. இன்றும் தொடர்கின்றன.
தமிழில் அப்படி உருவாகும் முதல்படம்தான் ‘நூறாவது நாள்’ .
எப்படி இந்தப் படத்தை எடுக்க முடிவு செய்தீர்கள்?
‘நூறாவது நாள்’ பேசப்பட்ட படம். இன்றும் இதை எடுத்து ரசிக்க வைக்க முடியும். இந்தக் காலத்துக்கும் பொருத்தமான விஷயங்கள் அதில் இருக்கிறது.அதே கதையை வைத்து ஒரு படத்தை மறுபடியும் அப்படியே எடுப்பதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. அந்தக் கதை எல்லாருக்கும் தெரிந்து விட்டதால் எதிர்பார்ப்பு இருக்காது. தெரிந்த விஷயமாக இருப்பதில் என்ன த்ரில் இருக்கப் போகிறது? எனவேதான் இப்படி எடுக்க முடிவு செய்தேன். கதை, காட்சிகள் திரைக்கதை எல்லாவற்றையும் முழுக்க முழுக்க மாற்றி வேறு ஒரு திசையில் விறுவிறுப்புடன் செல்லும்படி உருவாக்கியிருக்கிறோம்.என்னுடன் இதில் சிபிராஜ், யுகே செந்தில்குமார் உதவியிருக்கிறார்கள். அவர்கள் பெரிதும் துணையாக இருந்தார்கள்.
நூறாவது நாள்’ புது வடிவத்துக்கு இசை நிரோ பிரபா, இவர் லண்டனில் இருக்கிறார். இவர் ஏ.ஆர்.ரகுமானின் மாணவர். ஒளிப்பதிவு: யுகே செந்தில்குமார். தயாரிப்பு : ஏடி எம். புரொடக்ஷன்ஸ். கதை: அப்பா திரைக்கதை வசனம் இயக்கம் : நான் படத்தில் நடிக்கப் போகும் மற்ற நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்
நட்ராஜை நடிக்க வைக்கக் காரணம் உள்ளதா?
நட்ராஜ் என் ககோதரர் போன்றவர். ‘தெற்குத்தெரு மச்சான்’ காலதிலிருந்தே தெரியும்.அந்தப் படத்தில் அவர் கேமரா டிபார்ட் மெண்ட்உதவியாளர் நான் டைரக்ஷன் டிபார்ட் மெண்ட் உதவியாளர்.இப்படி அப்போதிலிருந்தே பழக ஆரம்பித்து இருந்தேன். இடைவேளைகளில் கிரிக்கெட் விளையாடுவோம். அப்பாவின் உதவியாளர்கள் எல்லாரையுமே எனக்கு அண்ணன்கள் மாதிரித்தான் . உணர்கிறேன்..அப்படித்தான் பழகி வருகிறேன்
நட்ராஜ் அண்ணன்இப்போது வளர்ந்து இருக்கிறார். கேட்டதும் அப்பாவுக்காக இதைச் செய்வேன் என்று உடனே ஒப்புக் கொண்டார்.
ஒவ்வொரு படமும் அப்பாவின் குழந்தை போலத்தான். அந்தவகையில் நூறாவது நாள் படம் கூட எனக்கு அண்ணன் மாதிரிதான். அது வெளியானது 1984 ஏப்ரல் 14ல் நான் பிறந்தது 1984 ஏப்ரல் 24ல். அப்படி என்றால் நூறாவது நாள் படம் எனக்கு அண்ணன் மாதிரிதானே?.
30 ஆண்டுகள் பிறகு நான் அதை மீண்டும் 2015ல் எடுக்க இருக்கிறேன். அது அப்பாவின் பேரனாக வந்து அவர் பெயர் சொல்லும்.
அப்பா பற்றி.?
அப்பா பற்றி. சொல்ல எவ்வளவோ இருக்கிறது. அவர் இருக்கும் வரை தெரியாத அருமையும் பெருமையும் இறந்த பிறகுதான் தெரிகிறது.
நான் என்றைக்குமே அம்மா செல்லம். அப்பா பெரும்பாலும் வெளியூர் படப்பிடிப்பு என்று இருந்தாலும் பாசமுடன்தான் இருப்பார். இருந்தாலும் என்றைக்குமே அம்மாவிடம்தான் அதிக செல்லம்.
அப்பா எப்போதுமே தன்னையும் சுற்றுப்புறத்தையும் கலகலப்பாக வைத்திருப்பார். எதையாவது படித்துக் கொண்டிருப்பார். இந்த உலகத்தில் அவருக்கு தெரியாத டாபிக்கே இல்லை.உலக அரசியல் பற்றி எது பற்றிக் கேட்டாலும் பேசுவார்.
எனக்கு ஒரே ஒரு அக்கா. அக்கா படிப்பில் கெட்டிக்காரி.எம்பிஏ முடித்து அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்.
படிப்பில் நான் சுமார். நான் மல்டிமீடியா பிலிம் எடிட்டிங் அனிமேஷன் சினிமாட்டோ கிராபி கோர்ஸ் செய்தேன்.நான் கல்லூரிக்கு கூட சரியாக போகவில்லை. அவருக்குத் தெரியாமல் சினிமா எனக்குள் புகுந்து விட்டது.
அப்பா சுதந்திரமான மனிதர். மற்றவர்களையும் சுதந்திரமாக இருக்க வைப்பார்.வயது வித்தியாசம் பார்க்க மாட்டார்.பழகுவார்.
என்னைக் கண்டித்ததே இல்லை. எதையாவது செய்தால்தான் பரிசு கொடுப்பார்கள். ஆனால் அப்பா பரிசு கொடுத்து விட்டுசெய்ய வைப்பார்.
அப்பா சினிமாவில் எல்லா சோதனை முய ற்சிகளையும் செய்தவர். சொன்னால் நம்ப மாட்டீர்கள் ‘கனம் கோர்ட்டார் அவர்களே’ படத்தில் ஆரம்பத்தில் வரும் கோர்ட் சீன் நடுரோட்டில் திரைகட்டி மறைக்கப் பட்டு எடுத்ததுதான் என்றால் யாராவது நம்புவார்களா?
அப்படிப்பட்ட அப்பா திடீரென மறைந்ததும் அப்பா மறைந்து இரண்டே மாதத்தில் அம்மா காலமானதும் நான் உடைந்து நொறுங்கிப் போனேன். அம்மாவின் மரணம் ஏற்கெனவே டாக்டர்ஸ் நாள் குறித்து வைத்து இருந்தது. அப்பா மரணம் திடீரென்று வந்தது.
அப்போது துக்கம் விசாரிக்க பலரும் போன் செய்தார்கள். நான் பேசவில்லை. சிலநாள் போன் ஆப்செய்து விட்டேன். இதில் பலருக்கும் வருத்தம். கோபம். என்னைப் பொறுத்தவரை மறக்க நினைத்ததை அவர்கள் நினைவு படுத்திய வருத்தம் எனக்கு. அப்பா என்னுடன் இருப்பதாக நினைக்கிற என்னிடம் துக்கம் விசாரித்தால் அது பிடிக்குமா?
அதனால் அப்பா மரணத்தை மீண்டும் மீண்டும் கேட்டு எரிச்சல் படுத்தியதாக உணர்ந்தேன். இதைச்சொல்லி விளக்க முடியாது. என் சோகம் என் துக்கம் எனக்கு.இருந்தாலும் இப்போது வருந்துகிறேன். வாழ்வின் யதார்த்தம் தெரியாமல் நான்தான் அப்படி முதிர்ச்சியில்லாமல் நடந்திருக்கிறேன்.எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள்.
என்ன செய்வது அப்போது எல்லாமுமே என்னை விட்டுப் போனமாதிரி உணர்ந்தேன். உறவுகள் சொந்த பந்தங்கள் உலகம் எல்லாமே பொய்யா என்று நினைத்தேன். சிலரைத்தவிர சொந்தங்கள் விலகி விட்டன. பைத்தியம் பிடிக்கிற உணர்வு. அவ்வளவு வெறுப்பு, துக்கம், விரக்தி நெருக்கியது என்னை.
அபி என்று லண்டனில் ஒரு பெண் பழக்கம். போனிலேயே பேசிக் கொண்டிருந்தேன். எங்களுக்குள் புரிதல் இருந்தது. இதை அண்ணன் சீமான் மூலம் கேள்விப்பட்ட அப்பா யாருடா அது நம்பர் கொடு பேசறேன்னு கூப்பிட்டு பேசினார். சொன்னால் நம்ப மாட்டீர்கள் நிச்சயதார்த்தத்தில்தான் என் மனைவியை 2 வது முறை பார்த்தேன்.
அப்பா திருமண தேதி குறித்தார். ஆனால் அதற்குள் இருவரும் போய்விட்டார்கள்.
அம்மா ஆகஸ்ட் 16ல் இறந்தார்..என் திருமணம் 2013ல் செப்டம்பர் 16ல் நடந்தது.எல்லாரும் தேதியை மாற்றச் சொன்னார்கள். அப்பா முடிவு செய்த தேதியை மாற்ற வேண்டாம் என்றேன் தீர்மானமாக ..அவர் சொன்ன தேதியில் நடந்ததும் அவர் அருகிலிருந்து ஆசீர்வதித்த உணர்வு எனக்கு.
என் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் போலத்தான் நடந்தது. அப்பா மறைவுக்குப் பின் எனக்கு அப்பா, அம்மாவாக இருந்தது இருப்பது மாமனார் குடும்பம்தான். நான் மன அழுத்தத்தில் இருந்த போது இங்கு வந்து கொஞ்சநாள் இருங்க என்று கூப்பிட்டார்கள். லண்டனில் ஒரு வருஷம் இருந்தேன். என்னை மீட்டேன். என்னை மறுபடியும் மீட்டெடுத்த பங்கு என் மனைவி அபி , மாமனார் குடும்பத்தையே சேரும்.
என் மனைவி அபி. என் அப்பா செல்லம். மகளைப்போல பாசம் காட்டினார். எங்கள் பிள்ளை.அம்மாவாக வந்து பிறக்க வேண்டும் என்று நான் சொன்னால் அப்பா போல வர வேண்டும் என்கிறார் என் மனைவி. மறைந்து போன அப்பா பேரனாக நிச்சயமாக வருவார் என்கிறார். மனைவி சொல்லே இப்போது மந்திரமாகப் படுகிறது. அதை நானும் எதிர் பார்த்திருக்கிறேன்.எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என் தந்தை போலவே இருப்பான் என்று இப்போது நம்புகிறேன்.
–ஆதித்யா