சினிமாவில் காட்டப்படும் பேய்க் கதைகளுக்கும் தனியே உள்ள வீடுகளுக்கும் பங்களாவுக்கும் தொடர்பு உள்ளது.பேய் கதைக்கான முக்கியமான கச்சா பொருள் தனித்துள்ள பங்களா. அப்படித்தான் ‘அஸ்வின்ஸ் ‘படத்திலும் ஒரு ஆடம்பரமான பங்களா வருகிறது. இருப்பதோ இந்தியாவில் அல்ல லண்டனில்.
அங்கே ஒரு தீவில் அந்த ஆடம்பரமான பங்களா இருக்கிறது. அதில் வாழ்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பிரியா ராமன். அவர் அங்கிருந்த 15 ஊழியர்களைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டதாகவும், கைப்பற்றப்பட்ட அவருடைய சடலம் திடீரென்று மாயமாகி விடுகிறது. இப்படித்தான் நம்பப்படுகிறது.
இறந்த உடல் எப்படி மாயமானது?என்பது ஒரு புதிர் .அது போலவே அந்த பங்களாவில் மனித புலன்களுக்கு எட்டாத அமானுஷ்ய காரியங்கள் நடைபெறுவதாக அஞ்சப்படுகிறது.
அமானுஷ்யங்கள் பற்றி வீடியோ போட்டு யூடியூப் நடத்தும் ஒரு குழு அந்த பங்களாவுக்குள் படம் எடுக்க நுழைகிறது.
அதற்காக நாயகன் வசந்த் ரவி, சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகிய ஐவர் குழு இந்தியாவில் இருந்து லண்டன் செல்கிறது.அப்போது அங்கே அவர்கள் எதிர்கொள்ளும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட திகிலான சுவாரசியங்கள்தான் ‘அஸ்வின்ஸ்’ படத்தின் கதை.
இந்தப் பயங்கரங்களுக்குப் பின்னால் ஒரு புராணக்கதை சொல்லப்படுகிறது.அவ்வகையில் அஸ்வின் கடவுளர்கள் பற்றிய கதையை மையமாக வைத்து நிமிடத்திற்கு நிமிடம் திகிலூட்டும் வகையில் காட்சிகளை உருவாக்கி உள்ளார்கள்.
நாயகனாக நடித்திருக்கும் வசந்த் ரவி, தனது அபாரமான நடிப்பின் மூலம் அந்தப் பங்களாவில் நிகழும் அமானுஷ்யங்கள் பற்றிப் படம் பார்ப்பவர்கள் மனதில் பதிய வைக்கிறார்.அவரது உடல் மொழியும் சிறு சிறு அசைவுகளும் கூட அவரது பதற்றத்தையும் பயத்தையும் நம்மை உணர வைக்கிறது.அதிகம் பேசாமலேயே விழிகளாலும் உடல் மொழிகளாலும் பேசி நல்ல நடிப்பை வழங்கி உள்ளார்.
சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகியோர் தங்கள் பணியைக் குறையின்றி செய்துள்ளனர்.அவர்களின் பீதியின் குரல் வெளியே வந்தாலும் நம் காதுக்குள் ஒலிக்கும். தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வேடத்தில் நடித்திருக்கும் விமலா ராமன்,தன் பாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார்.இறுதிக் காட்சியில் தனது நடிப்பு மூலம் படம் பார்ப்பவர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கிறார்.
நடிப்புக் கலைஞர்கள் மட்டுமல்ல தொழில்நுட்பக் கலைஞர்களில் பின்னணி இசை, ஒலி அமைப்பு,ஒளிப்பதிவு,படத்தொகுப்பு என அனைத்தும் திறமைக்கரங்களின் மூலம் மிளிர்ந்துள்ளன. இருளில் காட்சிகள் நடந்தாலும்
ஒளிப்பதிவாளர் ஏ.எம்.எட்வின் சகே மிக நேர்த்தியாகக் காட்சிகளைப் படப்பதிவு செய்துள்ளார்.இசையமைப்பாளர் விஜய் சித்தார்த்தின் பின்னணி இசையும், சச்சின் மற்றும் ஹரி ஆகியோரது ஒலிக்கலவையும் நமக்குள் அச்சரேகையைப் படரவிட்டு வெற்றி பெற்றுள்ளன.
எழுதி இயக்கியிருக்கும் தருண் தேஜா, படத்தில் இடம்பெறும் பயத்தையும் பீதியையும் கடைசி வரை பராமரித்துள்ளது சிறப்பு.
மொத்தத்தில், இந்த ‘அஸ்வின்ஸ்’ படத்தின் மூலம் எளிமையான கதையை எடுத்துக் கொண்டு வலிமையான தொழில்நுட்ப நேர்த்தியால் திகில் பட ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார். ‘அஸ்வின்ஸ்’ வித்தியாசமான திரைத் திகில் அனுபவம் தான் .