‘பானி பூரி’ இணையத் தொடர் விமர்சனம்

குறும்படங்கள் முதல் இணையத் தொடர்கள் வரை தயாரிக்கப் புறப்பட்டு இருக்கும் ஷார்ட் ப்ளிக்ஸ் (ShortFlix) நிறுவ ஒடிடி தளம் சார்பில் உருவாகி வெளியாகியிருக்கும் இணையத் தொடர்தான் ‘பானி பூரி’. (Paani Poori) இது 8அத்தியாயங்களைக் கொண்டது.

நாயகன் லிங்காவும், நாயகி சம்பிகாவும் காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் நுழைய லிங்காவுக்கு ஆசை. ஆனால் தனது தோழியின் காதல் முறிந்த காரணத்தால் தன் காதலும் அப்படி ஆகிவிடுமோ என்று சம்பிகா சந்தேகப்படுகிறார்.இப்போதுள்ள காதல் திருமணத்திற்குப் பிறகு இருக்காது என்று நினைத்து அதை முறித்துக் கொள்ள நினைக்கிறார்.

சம்பிகாவின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் தெரியாது லிங்கா விழிக்கிறார்.
காதலியின் தந்தை இளங்கோ குமரவேல் இதை அறிந்து ஒரு தீர்வு காண நினைக்கிறார்.லவ் டுடே சத்யராஜ் போல் ஒரு நிபந்தனை விதிக்கிறார்.இருவரும் சேர்ந்து ஏழு நாட்கள் தங்கி இருப்பது, அதற்கு மேலும் ஒரு ஒருவரை ஒருவர் நம்பினால் திருமணம் செய்து கொள்ளலாம், இல்லாவிட்டால் வேண்டாம் என்கிறார். அதன்படி, லிங்காவுடன் சேர்ந்து 7 நாட்கள் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்வதற்கு, சில நிபந்தனைகளுடன் நாயகி சம்பிகா சம்மதிக்கிறார்.அந்த ஏழு நாட்களில் நடக்கும் திருப்பங்கள் என்ன? இறுதியில் சேர்ந்தார்களா? பிரிந்தார்களா? என்பது தான் பானி பூரி இணையத் தொடரின் கதை.

லிவிங் டூ கெதர் வாழ்க்கை என்றாலே குடும்பத்தினர் பார்ப்பதற்கு அருவருக்கும் வகையில் ஆபாசத்தைக் கலந்து விடுவார்கள் .ஆனால் இந்தப் படத்தில் நாகரிகமாகக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.  ஓடிடி தளத்திற்குக் குடும்பத்தை ஈர்க்கும் வகையில் இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இத்தொடரினை உருவாக்கி இருக்கிறார்.

காட்சிகளும் வசனங்களும் சலிப்பூட்டாத வகையில் திரைக்கதை அமைத்துள்ளார்.மனித மனத்தின் அசைவுகள் மாறிக்கொண்டே இருக்கும் திடீர் முடிவு எடுக்கக் கூடாது என்று அழகாகக் கருத்தைப் புரிய வைத்துள்ளார்.

நாயகனாக லிங்கா நடித்துள்ளார். ஏற்கெனவே பல திரைப்படங்கள், இணையத் தொடர்கள் தனது நடிப்பு மூலம் கவனம் ஈர்த்தவர்.இயல்பான நடிப்பால் இதில் அனைவரையும் கவர்கிறார்.வாழ்க்கையில் சில தருணங்களில் நம்மால் எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று தெரியாமல் முகபாவனை இருக்கும். அப்படிப்பட்ட காட்சிகளில் கூட அருமையாக நடித்துள்ளார்

ரோபோக்களை உருவாக்கும் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி சம்பிகாவின் நடிப்பு ஒரே முக பாவனையால் சலிப்பூட்டுகிறது. ஆனாலும் அவரை அழகாக க்ளோசப்பில் காண்பித்து ஒளிப்பதிவாளர் நம்மைச் சமன் செய்து விடுகிறார்.

சம்பிகாவின் தந்தையாக வரும் இளங்கோ குமரவேல்,மகளை மட்டுமல்லஅவளது காதலனையும் புரிந்து கொண்ட பாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளார்.நாயகனின் நண்பராக நடித்திருக்கும் வினோத் சாகர்,ஆரம்பத்தில் சிரிக்க வைத்து பிறகு அழுத்தமாகப் பதிக்கிறார்.அவரது கதை தனியாக சுவாரஸ்யம் காட்டுகிறது. நாயகனின் அண்ணனாக வரும் ஸ்ரீகிருஷ்ண தயாள், அண்ணி கனிகா இருவரும் கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு, கதைக்கான காட்சிகள் முழுவதையும் சில குறிப்பிட்ட இடங்களில் வைத்தும் கூட நம்மை அந்தக் குறை தெரியாமல் செய்து விடுகிறார்.பாத்திரங்களின் உணர்வுகளை சரியாகப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.

இசையமைப்பாளர் நவ்னீத் சுந்தரின் பின்னணி இசை தொடருக்கு இன்னொரு பெரியபலம். இயக்கியிருக்கும் பாலாஜி வேணுகோபால், லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறை என்பதை பாசிட்டிவான கோணத்தில் காட்டியுள்ளார்.

மிகக் கண்ணியமாகக் காதலர்களின் உணர்வைக் கூறும் இத்தொடரில் நகைச்சுவை என்ற பெயரில்இடம்பெறும் ஆணுறை சார்ந்த வசனங்கள் சற்று முகம் சுழிக்க வைப்பவை.அவற்றைத் தவிர்த்து இருக்கலாம்.

மிகச் சொற்பமான கதாபாத்திரங்களை வைத்தே 8 அத்தியாயங்களைப் படமாக்கியிருக்கும் பாலாஜி வேணுகோபால் இயக்குநராக சிந்தித்ததை விட, எழுத்தாளராக அதிகம் சிந்தித்திருக்கிறார்.
குறிப்பாக வசனகர்த்தா வாகவும்.நிறைய காட்சிகள் பேசிக் கொண்டே இருப்பதால் தொலைக்காட்சி தொடர் போல் உணர வைக்கிறது. இது சற்று சலிப்பூட்டினாலும் போகப் போக கதையில் வேகம் கூட்டி நம்மை வெகுவாக ஈர்த்து விடுகிறார் இயக்குநர். மொத்தத்தில், இந்த ’பானி பூரி’ அனைத்து தரப்பினரும் சுவைக்கலாம்.