முன்னாள் அமைச்சரும் படத்தயாரிப்பாளருமான ஆர் .எம் . வீரப்பன் அவர்கள் மறைவு குறித்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
அறநிலையத்துறையை ஆண்ட மனிதர். சதம் தொட்ட தனித்துவமானவரின் மறைவு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒளிர்ந்து மறைந்த நட்சத்திரத்தின் ஆயுள் போன்றது. திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான திரு.ஆர்.எம். வீரப்பன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன்.
திரு. எம்.ஜி.ஆர் அவர்களின் சத்யா மூவீஸ் நிறுவனத்தைத் திறம்பட நிர்வகித்து, எம்.ஜி.ஆர் தொடங்கி, ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ் என பல நட்சத்திரங்களுடன், தமிழ்த்திரையுலகிற்கு பல்வேறு வெற்றிப் படங்களைத் தந்து, சிறந்த தயாரிப்பாளராக, அவர் தலைமையில் பல ஆச்சரியங்களை நிகழ்த்திக் காட்டியது சத்யா மூவிஸ்.
அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை என அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்தவர் திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள்.
ஒவ்வொரு நாளும் வேறொரு நாள் தான். நமக்கான நாளாக நாளை அமைய துளி கூட வாய்ப்பில்லை. ஆனாலும் நம்பிக்கை என்பது மட்டுமே நம்மை வாழச் சொல்கிறது. நாளை என்ற நம்பிக்கையை விதைத்துச் சென்ற தங்களின் வாழ்க்கையை முன் வைத்துக் கொள்கிறோம்.
நிகழ்வின் ஒவ்வொரு பொழுதிலும் எங்களை நினைவுபடுத்திய சத்யா மூவிஸைப் போல உங்களின் நினைவுகளும் நீடித்திருக்கும்.
வாழ்ந்திருங்கள் … எத்தனை வருடங்கள் கடந்தாலும்.
பாரதிராஜா
தலைவர்
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்